*ஆசிய இந்திய அளவில் உச்ச நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி.
*தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர்.
*திருவிதாங்கூர் சமஸ்தான பார்கவுன்சிலில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்.
*உயர்நீதிமன்ற அளவில் பணியமர்த்தப்பட்ட முதல் இசுலாமிய பெண் நீதிபதி.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம். இன்றைய கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் ராவுத்தர் சமூகத்தைச் சேர்ந்த அன்னவீட்டில் மீரா சாஹிப், கதீஜா பீவி இணையருக்கு மகளாய் பிறந்தவர் ஃபாத்திமா பீவி.இவரின் தந்தை அரசுப் பணியில் இருந்தவர். சிறு வயது முதல் படிப்பில் ஆர்வம் காட்டிய ஃபாத்திமா பீவி, தனது சொந்த ஊரில் இருந்த கத்தோலிகேட் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து, திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை படிப்பை மேற்கொண்டார்.
அப்போது, இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாக திகழ்ந்த அன்னா சாண்டி திருவனந்தபுரத்தில் நீதிபதி யாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைச் சந்தித்த ஃபாத்திமா பீவி, அறிவியல் துறையில் இருந்து தனது படிப்பை நீதித் துறைக்கு மாற்றிக் கொண்டார்.திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1950இல் சட்டக் கல்வியை முடித்தார். பிறகு திருவிதாங்கூர் சமஸ்தான பார் கவுன்சில் தேர்வை எழுதி, அந்த சமஸ்தானத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, தங்கப் பதக்கமும் வென்று, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதல் மதிப்பெண் பெற்ற பெண் என்கிற வரலாற்றையும் படைத்தார்.
தொடர்ந்து கொல்லம் நீதிமன்றத்தில் வழக் குரைஞராகப் பணியை துவங்கியவர், துணை நீதி பதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 1983இல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றவர், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1989இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஆசியக் கண்டத்திலேயே ஒரு நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தலைமை பொறுப்புக்கு வந்த முதல் பெண் நீதிபதி என வரலாற்றில் இடம் பிடித்தார்.
1992 வரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஃபாத்திமா பீவி, பிறகு தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர், கேரள மாநில பிற்படுத்தபட்ட மக்கள் நலவாரியத்தின் தலைவர் என பொறுப்புகளையும் சுமந்தார். 1997இல் தமிழ்நாட்டின் 11ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்ட ஃபாத்திமா பீவி, தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் என்ற சிறப்பையும் பெற்று, 2001ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் ஆளுநராகச் செயல்பட்டார்.
கவுரவ டாக்டர் பட்டம், மகிளா சிரோன்மணி விருது, பாரத் ஜோதி விருது போன்ற விருதுகளுக்கு சொந்தக் காரராகவும் திகழ்ந்தார். 2001இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடாத ஜெய லலிதாவை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமித் ததன் மூலம், பெரும் சர்ச்சையில் சிக்கிய ஃபாத்திமா பீவி, தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகி கேரளா திரும்பினார்.