* மக்கள் விரோதமே 9 ஆண்டுகால பி.ஜே.பி. ஆட்சி!
* மதச்சார்பின்மை, வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் நலன்கள் வீழ்ச்சியே ஒன்றிய ஆட்சியின் சாதனை!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் நாளை (19.12.2023) நடைபெறும் நிலையில் , மக்கள் விரோத பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற முறையில் திட்டமிட்டு செயல்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நாளை (19.12.2023) புதுடில்லியில் இந்தியா (I-N-D-I-A) கூட்டணியின் கலந்துரையாடல் கூட்டம் நடை பெறவிருக்கிறது. அதில் கலந்துகொள்ள, அத்தகைய ஒருங்கிணைப்பு அரசியல் கூட்டணி, பா.ஜ.க. கூட் டணிக்கு மாற்றாக உருவாக முழு காரணம், பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளாக நடை பெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியின் ஜனநாயக விரோத, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான அன்றாட நடத்தைகளே!
9 ஆண்டுகால பி.ஜே.பி. ஆட்சியில் சாதிக்கப்பட்டவை என்ன?
1. கடந்த 9 ஆண்டுகளுக்குமேல் ஆட்சி நடத்தி, இரண்டுமுறை வாய்ப்புப் பெற்ற நிலையிலும் – அதனைப் பயன்படுத்தி, மக்களுக்குரிய தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்றவே இல்லை! மாறாக எதிர் நிலையே ஏற்பட்டது!
2. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு களை உருவாக்கித் தருவதாக நரேந்திர மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஊர்தோறும் கூறி, வேலை கிட்டாத இளைஞர்களை நம்ப வைத்து, தேர்தலில் வெற்றி பெற்றார்.
அது நிறைவேறியதா?
இல்லை!
3. வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை இங்கே கொண்டு வந்து, தலா 15 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் போடுவோம் என்றார்.
அது நடந்ததா?
இல்லை, இல்லவே இல்லை!
விலைவாசி உயர்வு –
பொருளாதார வீழ்ச்சிதானே மிச்சம்!
4. விலைவாசி முந்தைய அய்க்கிய முன்னணி காங் கிரஸ் கூட்டணி ஆட்சியால்தான் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது; எங்கள் ஆட்சி அமைந்தால், விலைவாசிகளைக் குறைப்பதற்கே முன்னுரிமை கொடுப்போம் என்று முழக்கமிட்டார்களே!
அது செயல்பாட்டிற்குவந்ததா?
இல்லையே!
5. பொருளாதாரம் செழித்தோங்கும் என்று மார் தட்டினார்களே என்ன நடந்தது?
பணமதிப்பு இழப்பு (Demonetisation) மூலம் பதுக் கிய கருப்புப் பணம் வெளியே வந்ததா?
ஏழை, எளிய, சாமானியர்களை மிகுந்த சங்கடத் திற்கும், உயிர் இழப்புகளுக்கும் உள்ளாக்கி (வங்கிகளின் முன் நின்று மயங்கி விழுந்தும் பலர்) – மனித உயிர்கள் மதிப்புதான் வெகுச்சாதாரணமாகியது!
நீதிபதிகள் நியமனத்தில்கூட
சுயநல அரசியல் போக்கு!
இந்த மோடி அரசு 2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகப்படுத்தியதே அது தோல்வியில்தான் முடிந்தது என்று ஒப்புக்கொள்வதுபோல், ஒன்றிய மோடி அரசே அதைத் திரும்பப் பெற்ற கேலிக்கூத்தான பொருளாதார நடவடிக்கைதான்!
தானடித்த மூப்பான பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்தியதால், அறிவு, ஆற்றல் மிகுந்த நிதித்துறை அறிஞர்கள் அரசு பதவிகளை (ரிசர்வ் வங்கி தலைவர், ஆலோசகர்களே) விட்டு விலகினர்!
நீதிபதிகள் நியமனங்களில் – உச்சநீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றங்கள்வரை தங்களுக்கு விருப்பமானவர் களை மட்டுமே நியமித்து, கொலிஜியம் பரிந்துரைத் தவர்கள் (Selective Appointments) பெயர்களைப் புறக் கணித்தும் நடந்தது உள்பட பலவற்றில் உச்சநீதி மன்றத்தின் பகிரங்கமான கண்டனக் கருத்துகள்!
பி.ஜே.பி. தோல்வி அடைந்த மாநிலங்களில்கூட, ஆளும் தரப்பிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்த கேவலம்!
ஆளுநர்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்குத் தொல்லைகள் – முட்டுக்கட்டைகள்!
அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், அக்கட்சி ஆட்சிக்கு எதிராக ஆளுநர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று அம்மாநில மக்களின் கூற்றும், உச்சநீதிமன்ற கருத்து களும் வெளியான வேதனையான அரசியல் அவலம்!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரித்தல், தங்களது ஜனநாயக உரிமைகளை வற்புறுத்தினால், அவர்களை வெளியேற்றி, இடைநீக்கம் செய்தல்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அதிகாரத்தை ஒன்றிய ஆளுங்கட்சியே கையில் எடுத்துக்கொள்வதுபோல, வெளியார் பலரைக் கொண்டு முக்கிய பதவிகளில் இடைச்செருகல் செய்தது இதற்குமுன் எப்போதும் நடைபெற்றிறாத கொடுமை!
இப்படி அரசின் மூன்று முக்கிய துறைகளை துஷ்பிரயோகம்! (நிர்வாகம், நாடாளுமன்றம், சட்டம் இயற்றுதுறை – நீதித்துறை, ஊடகத்துறை – Executive, Administrative, Judicial and Media).
இவற்றிற்குமேலாக ஊடகத்தினர் எதிர்க்கருத்துகளை எழுதினால், அறிவிக்கப்படாத நெருக்கடியில் அவர் களை கைது செய்து கருத்துரிமையைக் காராக்கிரகம் அனுப்புதல்!
இவற்றால் மக்கள் ஜனநாயகம் மூச்சுத் திணறலுக்கு ஆட்பட்டுள்ள நிலை!
எனவே, இவைதான் எதிர்க்கட்சிகளை ஒன்றாக – ஓரணியில் திரளச் செய்துள்ளன.
திரண்டது வரவற்கத்தக்கது!
தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்து முத்தாய்ப்பானது
திட்டவட்டமான திட்டத்தை உருவாக்க தி.மு.க. தலைவர் மதிப்பிற்குரிய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இரத்தினச் சுருக்க மாக வைத்த முக்கிய கருத்து முத்தாய்ப்பு ஆனவை.
1. யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதே முக்கிய இலக்கு.
2. அதை அடைய கவனச் சிதறலோ, வாக்குச் சிதறலோ, தன்முனைப்போ சிறிதும் இருக்கக்கூடாது!
3. பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக ஒரு தொகுதிக்கு ஒரே ஒரு பொது வேட்பாளர் – அவருக்கே அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளும் வாக்களித்து, ஒரே குரலில், ஓரணியில் திரண்டு, பிரிப்பவற்றை அலட்சியப் படுத்தி – இணைப்பதை விரிவாக்கி – பொதுநோக்கு- ஜனநாயக, சமூகநீதிப் பாதுகாப்பு, மதச்சார்பின்மை என்பதை வலியுறுத்தி, கூட்டுப் பிரச்சாரம் – கொள்கைத் திட்ட அடிப்படையில் நடவடிக்கைகளை மேற் கொண்டால் – வெற்றி இந்தியா கூட்டணியின் மடியில் வந்து விழுவது உறுதி!
தேவை ‘வேற்றுமையில் ஒற்றுமை!’
தலைவர்களே, நீங்கள் ‘‘வேற்றுமையில் ஒற்றுமை” கண்டு, வெற்றியை அடைய மன ஒதுக்கீடு (Mental Reservation) இன்றி பாடுபட திட்டமிட்டுத் தீர்மானித்து, களத்தில் இறங்கிட முடிவு செய்வீர் – ஒரே இலக்கோடு – ஒரே பாதையில் பயணிப்பீர் என்பதே பாதிக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் புத்துயிர் பெற்றெழ, ஒரே வழி!
இன்றேல், காலவோட்டமும், சரித்திரமும் உங்களை மன்னிக்காது!
‘‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” என்பது அனைவரும் அறியவேண்டிய பொது உண்மையாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.12.2023