‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு” கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, டிச.17 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பொத்தாம் பொதுவில் நாம் கேட்கவில்லை; சமூகநீதி வேண்டும்- சமூகநீதி சலுகையல்ல – சமூகநீதி நமக்கு இருக்கின்ற பிறப்புரிமை – நம்முடைய அதிகாரம் – நமக்கு நாமே வழங்கிக்கொண்ட அதிகாரம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை பல்கலைக் கழகம் அண்ணா பொதுவாழ்வியல் மய்யம் சார்பில் சென்னை பல்கலைக் கழகத்தில்
‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கம்!’’
கடந்த 30.11.2023 அன்று காலை சென்னை பல்கலைக் கழகத்தில் உள்ள தந்தை பெரியார் அரங்கில் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.
அவரது தலைமையுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சமூகநீதியின் மூலமாகத்தான்
எதையும் செய்ய முடியும்!
சமூகநீதியின் மூலமாகத்தான் எதையும் செய்ய முடியும். ஜாதி ஒழியவேண்டும் என்று சொன்னால், சமத்துவம் வரவேண்டும். ஆனால், இன்றைக்கு சமத்துவம் இல்லையே!
அதை எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில், ஒன்றே ஒன்று – ஜாதியை நாம் இப்போது புதிதாக இதன்மூலமாக ஜாதியை அறிமுகப்படுத்தவோ, ஜாதியைக் காப்பாற்றவோ வரவில்லை. ஜாதி எல்லா இடங்களிலும் இருக்கிறது; ஜாதி நடைமுறை யில் இருக்கிறது.
இன்னுங்கேட்டால், இது அறிவார்ந்த அரங்கம் – இதோ என் கைகளில் இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் – இது தெளிவானது. ஒரே ஒருவருக்குத்தான் இது குறைவாகத் தெரிகிறதே தவிர, நிறைவாக இல்லை என்றும் சொல்லக்கூடிய ‘ஞானக்கண்’ படைத்தவர் அவர். நாமெல்லாம் ஆய்வுக்கண் படைத்தவர்கள். அதனால், இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாக இருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால், அவர் இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையடைவில்லை என்று சொல்கிறார்.
முடிந்தால் அவர் புதிய அத்தியாயத்தைச் சேர்த்துப் பார்க்கட்டும், பிறகு. அது வேறு செய்தி – அதற்குரிய அரங்கமும் இதுவல்ல!
தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதே தவிர,
ஜாதி ஒழிக்கப்படவில்லை!
அதேநேரத்தில், ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 18 இடங்களில் ‘‘ஜாதி” என்ற சொல் இருக் கிறதா? இல்லையா? என்று அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும். இதை நாங்கள் இப்பொழுது சொல்லவில்லை.
எனவே, ஜாதி என்பது ஒழிக்கப்படவில்லை. தீண் டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதே தவிர, ஜாதி ஒழிக்கப்பட வில்லை.
ஜாதி, தீண்டாமை குறித்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகத்தில், ஹாவனூர் அவர்கள் ஓர் அற்புதமான அறிக்கையைக் கொடுத்தார்.
அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் சொன் னார், ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்றால், ‘‘தீண்டாமை” என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, ‘‘ஜாதி” என்ற வார்த்தையைப் போடுங்கள் என்று.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்பவர்களுக்குச் சொல்கிறோம் – ஒன்றிய அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற வர்கள் உள்பட – இன்றைக்கு நாங்கள் எங்களுடைய கடமையைச் செய்யமாட்டோம்; பொதுக் கணக் கெடுப்பை நிறுத்தி வைப்போம் என்று சொல்கிறார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டம்
அதிகாரப் பட்டியல் பகிர்வு!
இந்திய அரசமைப்புச் சட்டம் அதிகாரப் பட்டியல் பகிர்வில் 7 ஆவது அட்டவணையின்படி, சென்டர் லிஸ்ட் என்று சொல்லக்கூடிய யூனியன் லிஸ்ட் – அது ஒன்றிய அரசினுடைய பட்டியல் அல்ல.
யூனியன் லிஸ்ட் என்று சொல்வதில், 69 ஆவது அயிட்டத்தில், எதைக் கொடுத்திருக்கிறார்கள் என் பதைப் பாருங்கள். அதில் எடுத்தவுடன் ‘சென்சஸ்’ என்பதைத்தான்.
அதைத்தான் இங்கே அசோக்வர்தன் ஷெட்டி அவர்கள் ஒரு வரலாற்றைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
அம்பேத்கர் அவர்கள் எந்தெந்த காலகட்டத்தில் எப்படி எப்படி மாற்றம் வந்தது என்பதை மிகத் தெளி வாக இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள்.
வால்யூம் 5 – எந்தெந்த இடத்திலே அவர்கள், எப் பொழுது இதை ஆரம்பித்தார்கள்? எப்பொழுது இதை மறுத்தார்கள்? ஏன் இதை அவர்கள் செய்வதற்குத் தயங்குகிறார்கள்? என்பதற்குரிய செய்திகள் இதில் இருக்கிறது.
ஜாதி காரணமாக,
நமக்குக் கல்வி மறுக்கப்பட்டது
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு இதன் மூலமாக ஜாதியை நாம் ஞாபகப்படுத்தவில்லை; ஜாதி காரணமாக, நமக்குக் கல்வி மறுக்கப்பட்டது.
சூத்திரர்களுக்கு, கீழ்ஜாதிக்காரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே! என்று சொன் னது யார்? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்த நாட்டில், ஜாதியோடு பிறக்கிறான்; ஜாதியோடு வாழ்கிறான்; இறந்து சுடுகாட்டுக்குப் போகும்பொழுதுகூட அங்கேயும் ஜாதி இருக்கிறது.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்லக்கூடிய ‘பரந்த மனப்பான்மை’ படைத்தவர்கள் இருக்கிறார்களே, ஜாதியை எதிர்ப்பவர்கள் போன்று காட்டிக் கொள்கின்றவர்களைப் பார்த்துக் கேட்கிறோம்-
நாளைக்கு ஒரு உத்தரவு போடுங்களேன் – அவசர சட்டம் கொண்டு வாருங்களேன்!
‘ஒரே ஜாதி’ என்று கொண்டு வாருங்களேன்!
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே உணவு என்று ஒரே, ஒரே எனச் சொல்லுகிறீர்களே, ‘ஒரே ஜாதி’ என்று கொண்டு வாருங்களேன் நாங்களும் அதனை ஏற்றுக்கொண்டு, ஜாதிவாரிக் கணக் கெடுப்பு வேண்டும் என்று கேட்பதை விட்டு விடுகின்றோம்.
அதற்கு அவசியமே இல்லையே – எல்லோரும் சமம் என்ற வாய்ப்பு வந்துவிடுமே!
சமத்துவம் என்பதுகூட என்ன என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று ஏன் சொல்கிறோம் – ஜாதி இருக்கிறது – அர சமைப்புச் சட்டத்தில் பாதுகாப்போடு இருக்கிறது; கோவில்களில் அது இன்னமும் பாதுகாப்போடு இருக்கிறது. பல்கலைக் கழகங்களில் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அது மறைமுகமாக எப்படி இருக்கிறது என்பதற்குப் புள்ளி விவரங்கள் இருக்கிறது.
பசியேப்பக்காரன்
பந்திக்கு வெளியே நிற்கிறான்!
மேல் ஜாதி, மேல்ஜாதி என்று சொன்னால் என்ன அர்த்தம்? பசியேப்பக்காரன் பந்திக்கு வெளியே நிற் கிறான். புளியேப்பக்காரனே பந்தியில் அமர்ந்து எல்லா வற்றையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் என்று சொன்னால், ‘‘ஏனப்பா, எவ்வளவு காலம்தான் நாங்கள் வெளியில் நிற்பது? சமைத்தது நாங்கள் அல்லவா? சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை உற்பத்தி செய்தது நாங்கள் அல்லவா? அரிசியை உற்பத்தி செய்தது நாங்கள் அல்லவா? எல்லாவற்றையும் செய்தது நாங்கள்; பசியோடு இருப்பதும் நாங்கள் அல்லவா! இப்படி இருக்கையில், நீங்கள் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களே, அதற்காக நாங்கள் இவ்வளவு பேர் இருக்கிறோம் என்று புள்ளி விவரம் எடுங்கள்” என்று கேட்பது தவறா?
அதுதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு வேண்டிய மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.
இங்கே புள்ளிவிவரங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இட ஒதுக்கீடு என்பது ஏன் தேவை? அது என்ன பிச்சையா? சலுகையா? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து குடியரசுத் தலைவர்வரை பதவிப் பிராமணம் எடுத்துக்கொள்கிறார்கள்.
இறையாண்மை என்கிற அதிகாரம் மக்களிடம்தான்!
அதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால், மக்கள் நமக்கு நாமே வழங்கிக் கொள்வது. இறை யாண்மை என்கிற அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் இல்லை. பிரதமரிடம் இல்லை. முதலமைச்சரிடம் இல்லை. ஆளுநரிடம் இல்லை.
வேறு யாரிடம் இருக்கிறது என்றால், மக்களிடம்தான்.
WE, THE PEOPLE OF INDIA having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC
என்ற அய்ந்து அம்சங்களைக் கொண்டது இந்த ஆட்சி என்று சொல்லிவிட்டு, அதற்கு அடுத்து மிக முக்கியமான கடமை என்ன? அதனுடைய நோக்கம் என்ன? என்று சொல்லும்பொழுது, and to secure to all its citizens – எல்லா பொதுமக்களுக்கும்.
JUSTICE, social, economic and political
மேற்கண்ட வார்த்தைகள்தான் மிகவும் முக்கியம். ஆகவே, சோசியல் ஜஸ்டிஸ் – பொருளாதார நீதி வேறு; சமூகநீதி வேறு; அரசியல் நீதி வேறு என்ற மிகத் தெளிவாகத் பிரித்திருக்கிறார்கள்.
நேரமின்மை காரணத்தினால் சுருக்கமாகச் சொல் கிறேன்.
இந்த சமூகநீதியை எப்படி அடைவது?
அதற்காகத்தான் இட ஒதுக்கீடு!
அதனால்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இயக்கத்திற்குப் பெயர் நீதிக்கட்சி என்று மக்களால் எளிய முறையில் சொல்லப்பட்டது.
நீதிக்கட்சி தொடங்கப்பட்டு இன்றைக்கு
107 ஆண்டுகள் ஆகின்றன!
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்- நீதிக்கட்சி தொடங்கப்பட்டு இன்றைக்கு 107 ஆண்டுகள் ஆகின்றன.
நம்முடைய அசோக் வர்தன் ஷெட்டி அவர்கள் எப்படி இங்கே புள்ளிவிவரத்தோடு உரை யாற்றினாரோ, அதேபோன்று அன்றைக்கு சர் பிட்டி தியாகராயர் அவர்கள் புள்ளிவிவரம் கொடுத்தார்.
‘‘பார்ப்பனரல்லாதாருடைய கொள்கை அறிக்கை” – அதில் மக்கள் தொகையில் உயர்ஜாதிக்காரர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்; ஒடுக்கப்பட்டோர் பெரும்பான்மையாக எவ்வளவு பேர் உள்ளோம். எங்களுக்கு நீதி வேண்டாமா? நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்லவா? என்று கேள்வி கேட்டார்.
அந்தக் கேள்விதானே இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதற்காகத்தானே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம்.
சமூகநீதி நமக்கு இருக்கின்ற பிறப்புரிமை!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பொத்தாம் பொதுவில் நாம் கேட்கவில்லை.
சமூகநீதி வேண்டும்!
சமூகநீதி சலுகையல்ல!
சமூகநீதி நமக்கு இருக்கின்ற பிறப்புரிமை!
நம்முடைய அதிகாரம் – நமக்கு நாமே வழங்கிக் கொண்ட அதிகாரம்.
சமூகஅநீதியில் இருக்கின்ற மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்திய அரசமைப்புச் சட்டம்!
ஆகவே, எங்களுக்கு நீதி வழங்குங்கள்; எங்களுக்கு சமூகநீதி வேண்டும். நாங்கள் சமூகஅநீதியில் இருக்கி றோம். சமூகஅநீதியில் இருக்கின்ற மக்களைப் பாது காப்பதற்காகத்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 46 ஆவது பிரிவில் கூறப்பட்டு இருக்கிறது.
The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.
நாம் நீதி வேண்டும் என்று எப்பொழுது கேட்போம்?
எங்கே அநீதி இருக்கிறதே, அங்கேதான் நீதி வேண் டும், அப்போதுதான் நீதி வேண்டும் என்று கேட்போம்.
மண்ணின் மைந்தர்களாகிய
மக்கள் கேட்கிறார்கள்!
அந்த அநீதி என்னவென்றால், இங்கே அசோக் வர்தன் ஷெட்டி புள்ளிவிவரத்தோடு எடுத்துச் சொன்னாரே – அதுதான் அந்த சமூக அநீதி. அந்த சமூக அநீதியிலிருந்து நாங்கள் வெளியில் வரவேண்டும். அதற்கு எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த நாட்டின் உரிமைக்கான மக்கள் – பெரும்பாலான மக்கள் – மண்ணின் மைந்தர்களாகிய மக்கள் கேட்கிறார்கள்.
அப்படி அந்த உரிமையைக் கொடுப்பதற்கு முன், ‘‘நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்; புள்ளிவிவரம் சொல்லவேண்டாமா?” என்று கேட்கிறார்கள்.
நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்திருக் கிறார்கள்.
வன்னியர்களுக்கு 10 சதவிகிதம் கொடுங்கள் என்று சொன்னவுடன், இது நியாயமா? தவறா? அதற்கு உரிமை இருக்கிறதா? என்பது பிறகு.
ஆனால், நீதிபதிகள் ‘‘Have you got any quantifiable data?” ‘‘அதுகுறித்து நீங்கள் ஏதாவது கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்கிறார்கள்.
அதேநேரத்தில், இங்கே அழகாகச் சொன்னார் அசோக் வர்தன் அவர்கள்.
10 சதவிகித இட ஒதுக்கீட்டினை உயர்ஜாதி ஏழை களுக்குக் கொடுத்திருக்கிறார்களாம்.
ஏழைகள் என்றால், புரிகிறது!
அது என்ன? உயர்ஜாதி ஏழைகள்.
அந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு. இதற்கு quantifiable data என்று ஏதாவது கேட்டார்களா நீதிபதிகள்?
69 சதவிகித இட ஒதுக்கீட்டினை நாங்கள் போராடி பெற்றோம். யார் செய்தார்கள் என்பது முக்கியமல்ல, யாரை செய்ய வைத்தோம் என்பதுதான் மிக முக்கியம். இந்தியாவிற்கே இன்றைக்கு வழிகாட்டக்கூடியது தமிழ் நாடு – பெரியார் மண் – சமூகநீதி மண் – திராவிட இயக்க மண்ணில் 69 சதவிகித இட ஒதுக்கீடு என்று வந்தது.
அப்பொழுது என்ன சொன்னார்கள்?
50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது. பாலாஜி வழக்கு என்ன சொல்லிற்று?
உச்சநீதிமன்றம் என்ன சொல்லிற்று?
எல்லாவற்றிலும் 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக் கீடு போகலாமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்று எந்த இடத்தில் இருக்கிறது?
அவர்கள் நினைத்தால், எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால், அவர்கள் மேலே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் உயர்ஜாதி ஆதிக்கம். அதுதான் சமூகஅநீதி.
50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்பதற்கு அவர்கள் என்ன காரணம் சொன்னார்கள் என்றால், தகுதி போய்விடும், திறமை போய்விடும், எல்லோருக்கும் கதவைத் திறந்துவிடுவதா? என்றார்கள்.
ஆனால், அவர்களுக்கு (உயர்ஜாதி ஏழைகளுக்கு) 10 சதவிகித இட ஒதுக்கீடு என்றவுடன், அதுபற்றி கவலை யில்லை; அதைப்பற்றி பேசவேண்டிய அவசியமில்லை என்கிறார்கள்.
(தொடரும்)