தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் என 90 வயதைக் கடந்த திராவிட இயக்கத் தலைவர்கள் வரிசையில், இணைந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். முதுமைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தந்தை பெரியார் காட்டிய வழியில் தளராமல் ஓடிக்கொண்டிருக்கும் ‘தகைசால் தமிழரின்’, 91 ஆவது பிறந்த நாளை யொட்டி, ‘பகுத்தறிவுப் போராளி’ ஆசிரியர் கி.வீரமணி 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் -2023′ எனும் சிறப்பு மலர் வெளியிடப் பட்டுள்ளது.
பெண் ஆளுமைகளின் பார்வையிலிருந்து பல்வேறு கோணங்களில் ஆசிரியரின் அயராத உழைப்பையும், சளைக்காத பொதுத்தொண்டையும், களைப்பற்ற களப் பணியையும் விவரிக்கிற ஆவணமாக உருவாக்கப் பட்டுள்ளது.
சம்பளம்கூட வேண்டாமென்று, வழக்குரைஞர் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு ‘விடுதலை’ பத்திரிகைப் பணியை முழுநேரமாக ஏற்க ஆசிரியர் சென்னை வந்த போது பெரியார் அடைந்த மகிழ்ச்சி ஈடு இணையற்றது. ‘இயற்கையில் இது எப்படிப்பட்ட மனிதரி டமும் எதிர்பார்க்க முடியாத விஷயம்’ என்றார் பெரியார். ‘திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’ எனப் புகழ்ந் தார் அண்ணா.
பெரியாரின் மதிப்பீட்டுக்கும், அண்ணாவின் புகழ்ச்சிக்கும் அர்த்தமாகியிருக்கிறார் ஆசிரியர் என்பதை, மெய்ப்பிக்கும் விதமாக இந்த மலரில் பல அரிய செய்திகளை அடுக்கியிருக்கிறார்கள் பெண் ஆளுமைகள். கட்டுக்கோப்பான இயக்கமாக திராவிடர் கழகத்தை வழிநடத்துவது, கடைநிலைத் தொண்டருக்கும் சித்தாந்த சிந்தனைத் தெளிவைக் கொடுக்கும் திறன், சமகால அரசி யலில் தெளிந்த நீரோடை போல வழிநடத்தும் தாய்க்குருவி என ஆசிரியரின் வியக்க வைக்கும் பண்புகள் மலர் முழுவதும் மணம் வீசுகின்றன.
நன்றி: ‘முரசொலி’, 17.12.2023
‘முரசொலி’ பார்வையில்…. மகளிர் பார்வையில் ஆசிரியர்!
Leave a Comment