கேள்வி 1: மூன்று ஆர்.எஸ்.எஸ். தீவிர ஆதரவாளர்களை முதலமைச்சர்களாக நியமித்துள்ளார்களே?
– ச.ராஜேந்திரன், திருநெல்வேலி
பதில் 1: ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி என்பது, அதன் அரசியல் பிரிவுதான் பா.ஜ.க. கட்சி – உயர்ஜாதி முகத்தை மறைக்க சில நேரங்களில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின் முகமூடிகளையும் அதில் பயன்படுத்தியிருப்பது ஆர்.எஸ்.எஸ். எப்படிப்பட்ட வித்தைக்காரர்கள் கூடாரம் என்பதற்கு சரியான சாட்சியமாகும்!
கேள்வி 2: கச்சா எண்ணெய் ஆறு, ஏரி மற்றும் கடலில் கலப்பது மிகப்பெரிய ஆபத்து என்று தெரிந்தும் அலட்சியம் காட்டப்படுகிறதே?
– ந.பகலவன், பாளையங்கோட்டை
பதில் 2: ஆட்சியாளர் அலட்சியம் காட்டவில்லை. எதிர்பாராத பேரிடரை நீக்க, தவிர்க்க போதிய நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுத்துதான் வருகிறார்கள்.
கேள்வி 3: மோசமான ரயில் பாதையில் வந்தே பாரத் போன்ற அதிவிரைவு இரயில்களை விடுவது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டி வருகிறதே?
– க.பாபு, பல்லாவரம்
பதில் 3: பலமுள்ள தண்டவாளத்தின் தாங்கும் சக்தி வலுவான அடிக்கட்டுமானம் போன்றது. அது பற்றிய கவலையின்றி வந்தே பாரத் விடுவதும், அதற்காக மற்ற இரயில்களை சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைபோல் ஆக்குவதும்தான் பிரதமர் மோடி ஆட்சியின் “இமாலயச் சாதனை!”
கேள்வி 4: ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு பாரட்டுகிறது.. ஆனால் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரியாக இருக்கும் கட்சியின் தலைவரும் திமுக அரசின் அலட்சியத்தால்தான் சென்னை பாதிக்கப்பட்டது என்று தொடர்ந்து பரப்புரை செய்துகொண்டு வருகின்றனரே?
– வே.ராமலிங்கம், வந்தவாசி
பதில் 4: பார்வையில் பழுதில்லாதவர்கள் நடுநிலையாளர்கள் – பாராட்டுகின்றனர். “காமாலைக் கண்”ணன்களுக்கு காணுவதெல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்! எதில் ‘அரசியல்’ செய்வது என்ற விவஸ்தை கூடத் ‘தெரியாத வீணர்கள்!’ – அலட்சியப்படுத்துங்கள்.
கேள்வி 5: “செத்துப்போவதே எனக்கு நல்லது” என்று சிவ்ராஜ்சிங் சவுகான் அழுது புலம்புகிறாரே?
– கி.மனோகர், திருச்சி
பதில் 5: பரவாயில்லை. 3ஆவது முறை முதலமைச்சராகாவிட்டாலும், செத்த பிறகு ஹிந்துத்துவா கர்மா – தத்துவப்படி அவருக்கு அங்கே நல்ல பதவி (வைகுந்த பதவி) கிடைக்குமே என்ற கருத்தின் அடிப்படையில் அழுகிறாரோ – என்ன என்று புரியவில்லையே நமக்கு!
கேள்வி 6: இனி மாநில ஆட்சியைக் கலைத்து அந்த மாநில ஆளுநரின் பரிந்துரை என்ற பெயரில் மாநிலத்தை உடைத்து யூனியன் பகுதியாக மாற்றுவார்களோ?
– மெ.சரவணன், சென்னை
பதில் 6: காவி ஆட்சியில் எதுவும் நடக்கலாம்! இது ஒரு மோசமான முன் மாதிரியாகி எந்த மாநிலத்தை வேண்டுமானாலும் இப்படி ஆக்கி மகிழலாம் காவிக் கட்சியினர்!
கேள்வி 7: “பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்” என்ற திட்டத்தின் பரப்புரையாளராக நியமிக்கப்பட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ளாரே?
– மு.திராவிடச் செல்வன், தாம்பரம்
பதில் 7: மஹா வெட்கக் கேடு! மஹா மஹா மானக்கேடு!!
கேள்வி 8: பழைய நாடாளுமன்றத்தில் வெளியிலிருந்து தாக்குதல் நடத்தினார்கள். புதிய நாடாளுமன்றத்தில் அவைக்குள்ளேயே புகுந்துள்ளனரே – இதுதான் அதிநவீன பாதுகாப்புகள் கொண்ட புதிய நாடாளுமன்றமா?
– வ.சுதாகர், மயிலாடுதுறை
பதில் 8: மில்லியன் டாலர் கேள்வி. பிரதமருக்கும் மக்களவைத் தலைவருக்கும் அனுப்பி வையுங்கள்.
கேள்வி 9: ஓட்டிற்கான கவர்ச்சி அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் கொடுக்கமாட்டேன் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?
– இரா.குமார், ஊற்றங்கரை
பதில் 9: அப்படியா? ஓகோ, 5 மாநிலத் தேர்தலுக்கு முன் எங்கே போனது இந்த ஞானோதயம்!
“பேசு நா இரண்டுடையாய் போற்றி, போற்றி!”
கேள்வி 10: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ஆம் ஆண்டு திறக்கப்படுமாமே, நம்பலாமா?
– எஸ்.சண்முகசுந்தரம், மயிலாடுதுறை
பதில் 10: அப்படியா, பலே பலே, எவ்வளவு விரைந்த செயலாக்கம்! 2026க்கு இன்னும் மூன்றே ஆண்டுகள்தான் – கவலைப்படாதீர்கள்!