1783ஆம் ஆண்டு பிரிக்கப்படாத வங்காளத்தில் முண்டல் காட் என்ற பகுதியில் தலை ஒட்டி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை பராமரிக்க வழியில்லாமல் ஹூப்ளி நதியில் அந்தக் குழந்தையின் பெற்றோர் வாழையிலையைக் கட்டி மிதக்கவிட்டனர்.
இந்த நிலையில் அதைக்கண்ட கழைக்கூத்தாடி இணையர் அந்தக்குழந்தைகளை எடுத்து கல்கத்தாவிற்கு தூக்கி வந்து அவர்களை வைத்து பிச்சை எடுத்துவந்தனர்.
சரியான பராமரிப்பு இன்றி உணவு இன்றி மிகவும் நோஞ்சானாகிப்போன அந்தக்குழந்தைகளை கூடாரத்திற்கு வெளியே தான் போட்டுவிட்டு தூங்கப்போவார்கள் அந்த கழைக்கூத்தாடி இணையர், நான்கு ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தக்குழந்தைகள் பாம்பு கடித்து இறந்து போனார்கள்.
இந்த நிலையில் இந்தக்குழந்தைகளின் உடலை ஆங்கிலேய மருத்துவ அதிகாரி ஒருவர் விலைகொடுத்து வாங்கி லண்டன் கொண்டு சென்றார்.
அங்கு உடலைப்பாடம் செய்து மருத்துவ ஆய்விற்காக வைத்திருந்தார். இந்த நிலையில் 1880 ஆம் ஆண்டு அந்த உடல் காணாமல் போனது. அதனை அரியவகைப் பொருட்களை பெருவிலைக்கு வாங்கும் நபர்களுக்கு விற்க சிலர் திருடிச்சென்றுவிட்டனர்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உடலை யாருமே வாங்க முன்வராததால் அதனை லண்டன் நகர வீதியில் குப்பைகளோடு போட்டுவிட்டனர்.
குப்பை சேகரிக்கும் நபர் அந்த உடலை எகிப்திய மம்மி என்று நினைத்து அதனை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.
அருங்காட்சியகத்தினர் அந்த உடலை பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பதிவேட்டினை வைத்து மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இம்முறை மண்டை ஓட்டைத் தவிர உடல் முற்றிலும் சிதைந்துவிட்டது. இருப்பினும் மண்டை ஓட்டை பத்திரப்படுத்தி லண்டன் ராயல் காலேஜ் ஆப் சார்ஜன்ஸில் உள்ள ஹண்டேரியன் மருத்துவ அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்தனர். இன்றும் தலை ஒட்டிப்பிறக்கும் குழந்தைகள் குறித்தும் அவர்களுக்கு உள்ள உடலியல் சிக்கல்கள் குறித்தும் பாடமாக அந்த மண்டை ஓட்டுக்குழந்தைகள் கண்ணாடிப் பெட்டிக்குள் பத்திரமாக இருந்து கற்றுக்கொடுத்துக்கொண்டு உள்ளனர்.