கல்லுக்குள்ளும் ஈரமுண்டு – திருடனிடமும் மனிதாபிமானம் உண்டு!

2 Min Read

“பிரபல மலையாள எழுத்தாளர்
வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு நிகழ்வு.
ஒருமுறை ஒரு ஓட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்… காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர்.

“என்ன, பர்ஸை காணலியா?” கல்லாவில் இருந்த முதலாளி கர்ஜித்திருக்கிறார்.
பஷீர் பலகீனமான குரலில், “ஆம். வரும்போது எடுத்துக் கொண்டுதான் வந்தேன்.”
முதலாளி நக்கல் சிரிப்புடன், “எல்லோரும் இதையேதான் சொல்றாங்க. ம்ம்ம்.. நீ போட்டிருக்கற டிரஸ்ஸை கழட்டி கல்லா மேல வச்சுட்டு அம்மணமா போ. அப்போதான் புத்தி வரும்.”

கூனிக் குறுகிப் போகிறார் பஷீர். வேறு வழியின்றி ஜிப்பாவை கழட்டி கல்லா மேஜையில் வைத்து விட்டு தலை குனிந்து நிற்க,
முதலாளி குரல் : “ம்…வேட்டியையும் கழட்டு.”

நாணத்தால் நடுங்கிப் போகிறார் பஷீர். சுற்றிலும் பார்க்கிறார். எழுபது எண்பது பேர் அந்த ஓட்டலில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஒருவரும் உதவத் தயாராக இல்லை. எல்லோர் கண்களும் ஒரு சக மனிதனின் ஆடையில்லா தோற்றத்தை காண ஆவலோடு காத்திருந்தன.
வேறு வழியின்றி பஷீர் தனது வேட்டியை அவிழ்க்க கை வைத்தபோது, ஓட்டலுக்கு வெளியிலிருந்து ஒரு குரல் : “நிறுத்துய்யா.”
பார்க்கிறார் பஷீர். ஒரு மனிதன்

அழுக்கு லுங்கி பனியனுடன் நிற்கிறான். “வேட்டியை அவுக்காதே பெரியவரே, முதல்ல ஜிப்பாவை எடுத்து போடு. யோவ் முதலாளி, அவர் உனக்கு எவ்வளவு தரணும். எடுத்துக்கோ.” கல்லாவில் காசை விட்டெறிந்து விட்டு, பஷீரை வெளியே அழைத்து வருகிறான் அந்த மனிதன்.
நிம்மதி மூச்சோடு நிமிர்ந்து பார்த்த பஷீரிடம் அவன் கேட்கிறான் : “ஏன் பெரியவரே,பர்ஸை ஜாக்கிரதையா வச்சுக்க கூடாதா ? இந்தா , இதில் உன் பர்ஸ் இருக்கா பாரு.”

அவன் லுங்கி உள்ளே இருந்து பத்துக்கும் மேற்பட்ட பர்ஸ்களை எடுத்துப் போடுகிறான். அதில் அவரது பர்சும் இருக்கிறது.
பஷீர் அவன் முகத்தை பார்க்கிறார்.

“என்ன பெரியவரே அப்படி பாக்கிறே ? நான் திருடன்தான். ஆனால் மனிதாபிமானம் இல்லாதவன் அல்ல.”
இந்த சம்பவம் பற்றி ஒரு கதையே எழுதி இருக்கிறாராம் பஷீர். அதில் சொல்கிறார் : “அவ்வளவு நேரம் அவனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் பெயரை கேட்க மறந்து விட்டேன். அதனால் என்ன ? ஒன்று அறம் அல்லது கருணை. இந்த இரண்டில் ஒன்றுதான் அவன் பெயராக இருக்க முடியும்.”
வைக்கம் முகம்மது பஷீர் வாழ்க்கை ஒன்றை உணர்த்துகிறது.
ஒரு எழுத்தாளனின் கடமை தனது எழுத்தின் மூலம் அன்பையும் மனித நேயத்தையும் மலரச் செய்வதே ! அதை நிறைவாகவே செய்து விட்டு போயிருக்கிறார் வைக்கம் முகம்மது பஷீர்.”

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *