ராமர் கோவிலை மய்யமாக வைத்து நடந்த குஜராத் கலவரத்தின் போது மிகவும் பிரபலமான முகமாக இருந்தவர் அசோக் பர்மார். இவர் காவிக்கொடியை தன் நெற்றியில் கட்டிக்கொண்டு மிகவும் கோபாவேசமாக இருக்கும் படம் ஒன்றை ஒரு ஆங்கில நாளிதழ் வண்ணப்படமாக வெளியிட அவர் மிகவும் பிரபலமானார். கொலை முதலான இதர வன்முறைகளோடு தொடர்பில்லாதவர் என்று விசாரணையில் தெரியவரவே இவர் விடுதலையானார். ஆனால், ஒரு நாளிதழ் ஒன்றில் ராமருக்கு கோவில்கட்ட எங்கள் உயிரையே கொடுப்போம் என்று கூறினார்.
20 ஆண்டுகள் கடந்த நிலையில் வன்முறையாளரான அசோக் பர்மாருக்கு முதலில் சில சமூக நல அமைப்புகள் செருப்புக் கடை ஒன்றை வைத்துக்கொடுத்தன. ஆனால், சூரத் மாநகராட்சி அவர் செருப்புக்கடை வைத்திருந்த இடம் சட்டவிரோதமானது என்று கூறி உடைத்துவிட்டது. அதன் பிறகு அவர் அகமதாபாத் சென்று காவுகலி என்ற பகுதியில் சாலை ஓரத்தில் அமர்ந்து செருப்பு தைத்துக் கொடுத்து தனது வாழ்க்கையை ஓட்டுகின்றார்.
இன்றும் அங்கு சென்றால் ஒட்டிய வயிற்றோடு அழுக்கேறிய சட்டையோடு கிழிசல் முழுக்கால் சட்டைபோட்டு செருப்பு தைத்துக்கொடுக்கும் வேலையைச் செய்துவருகிறார். மற்றொரு புறம் குஜராத் கலவரம் நடந்த அதே ஆண்டு பிறந்த மோஹித் பாண்டே எனும் பார்ப்பனர் புதிதாக கட்டப்பட்டு பிரதமர் மோடியின் கைகளால் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலுக்கு தலைமை அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமர் கோவில் அர்ச்சகர் பணிக்கு அய்ம்பதாயிரம் பார்ப்பன அர்ச்சகர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டது அதில் 300 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 50 பேர் ராமர் கோவில் அர்ச்சக பார்ப்பனர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த 50 பேருக்கு தலைமைப் பார்ப்பனராக இந்த மோஹித் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ராமர் கோவிலுக்காக கலவரம் செய்து சிறை சென்று வாழ்க்கையைத் தொலைத்து குடும்பத்தை விட்டுப்பிரிந்து இன்னல் படும் அசோக் பர்மார் இன்று சாலை ஓரத்தில் சாக்குப்பையை போர்த்திக்கொண்டு தூங்குகிறார். மாநகராட்சி கழிப்பறையில் தான் காலை மாலை வாழ்க்கையை ஓட்டுகிறார்.
ஆனால் பார்ப்பனராக பிறந்த ஒரே காரணத்திற்காக மோஹித் பாண்டே அதே ராமர்கோவிலில் ரூ.3 லட்சம் ஊதியத்தோடு தலைமை அர்ச்சகராகப் போகிறார்.