‘‘அடையாறு ஆனந்த பவன்” என்னும் மரக்கறி உணவு விடுதிபற்றி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
என்ன அவசியம்? எதற் காக விமர்சனங்கள்? என்ற கேள்வியை எழுப்பினால், அதற்குள் புதைந்து கிடக்கும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பிரச்சினை மய்யமிட்டு இருப்பதை அறிய முடியும்.
ஆனந்தபவன் உரிமையாளரிடம் சித்ரா லட்சுமணன் பேட்டி காண்கிறார். ‘இந்த சைவ உணவு விடுதிகள் பெரும்பாலும் அய்யர்களிடம்தான் இருந் தது. இப்பொழுது இதில் மாற்றம் ஏற்பட்டது எப்படி?’ என்பது கேள்வி.
அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாசராஜா அந்தக் கேள்விக்குச் சொன்ன பதில், ‘‘அடையாறு ஆனந்தபவனின் இனிப்பை விட சுவையானது.”
என்ன சொன்னார் ராஜா?
‘‘எந்தத் தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்” என்று பளிச்சென்று பதில் சொல்லி யிருக்கிறார்.
அவர் ஒன்றும் கருப்புச் சட்டைக்காரர் அல்லர். நெற்றியிலே திருநீறு, கையிலே வண்ண வண்ண கயிறுகள் அணிந்த ஆஷாடபூதியாகத்தான் காட்சி அளிப்பார்.
ஆனாலும், அவற்றையெல்லாம் கடந்து, உண்மையோடு உழைத்திருக்கிறார்.
இந்தப் பேட்டி வெளி வந்ததுதான் தாமதம் – அக்கிரகார ஆசாமிகள் அக்னிக் குண்டத்தில் விழுந்த விட்டில் பூச்சி களாகத் துடியாய்த் துடிக்கின்றனர் (சமூக வலை தளங்கள்மூலம்).
‘‘அது எப்படி சொல்லலாம்?” என்று ஆகா யத்துக்கும், பூமிக்குமாகத் துள்ளிக் குதிக்கின்றனர்.
குதித்து என்ன பயன்?
காலம் மாறிவிட்டது – காகப்பட்டர் பரம்பரை யினரே! இது பெரியார் சகாப்தம்! அங்கு இங்கு எனாதபடி தந்தை பெரியார் ஊட்டிய உணர்வு நீக்கமற மேலோங்கி நிற்கிறது.
‘பிராமணாள்’ ஹோட்டல் போய் அடையாறு ஆனந்தபவன்களும் (வெளிநாடுகள் உள்பட 150 உணவகங்கள், 12,000 பேர் பணி), சரவணா உணவு விடுதிகளும் கிளை பரப்பி வருகின்றன. அமெரிக்காவிலும்கூட சரவணா உணவு விடுதிகள்! ஆற்றாமை அடைக்கிறதோ!
ரொம்பதான் துள்ளா தீர்கள், வட்டியும், முதலுமாக எதிர்கொள்ள நேரிடும்!
– மயிலாடன்