தொல்பொருள் ஆய்வு அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணனை டில்லிக்கு மாற்றியது வன்மையான கண்டனத்திற்குரியது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழ்நாட்டில் தொல்பொருள் ஆய்வு என்பது மிகப்பெரிய அளவில் – உலகத்தாரின், ஆய்வாளர் களின் கவனத்தையும், ஆய்வினையும் ஈர்த்துவரும் அளவுக்கு நாளும் பெருகிவருகிறது.
நமது முதலமைச்சரும் இதில் தனிச்சிறப்புடன் கூடுதல் கவனம் செலுத்துவதால், இந்தப் பழைய வரலாற்றுப் பெருமை வாய்ந்த திராவிட நாகரிகத்தின் தொன்மை குறித்து புதுப்புது தடயங்கள், சான்றுகள் கிடைத்துவரும் வேளையில், அவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றின் தனிப்பெரும் வரலாற்று ஆய்வுபற்றிய குறிப்புகளை மிகத் தெளிவாகத் தரும் ஆற்றல் வாய்ந்த, அனுபவம் நிறைந்த அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் டில்லிக்கு, ஒன்றிய அரசு மாற்றியிருப்பது – தமிழ்நாட்டுப் பழம்பெரும் நாகரிகத் தரவுகள், சான்றாவணங்களை ஒழுங்குபடுத்தி, பெருமையுடன் உலகு கூர்ந்து நோக்குவதைத் தடுக்கவே இந்தச் சூழ்ச்சி! அதில் அதிக ஈடுபாட்டுடன் நேர்மையுடன் கடமையாற்றிய அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை இப்படி தமிழ்நாட்டின் புதைபொருள் ஆராய்ச்சியைத் தண்டிப்பதுபோல மாற்றியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
இதற்கு முன்பும் அவரைப் பந்தாடினார்கள் – மீண்டும் தமிழ்நாடு வந்தார்.
இதுபற்றி தமிழ்நாடு அரசு குறிப்பாக நமது முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய தொல்பொருள் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி, அவரை தமிழ்நாட்டிலேயே தொடரச் செய்தால், தமிழ்நாட்டுப் புதை பொருள் ‘ஆய்வுகள்’ தொய்வின்றித் தொடரும் வாய்ப்பு ஏற்படும்.
இதனைப் பொதுநலம் கருதி கூறுகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.10.2023