எப்போது வரும், எப்போது வரும் என்று ஏங்கித் தவித்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘விடுதலை’ தினசரி பத்திரிகை இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து சென்னையில் வெளியாகிவிட்டது.
ஆனால் “நமக்கும் ஒரு தினசரி இருக்கிறது” என்று சொல்லிக் கொள்ளத் தான் இது பயன்படுமே தவிர, ஒரு இயக்கத்திற்கு ஒரு தினசரியால் என்ன பலன் ஏற்படுமோ அந்தப் பலன் ஏற்படுமா என்பது உறுதி கூற முடியாததேயாகும். ஏனெனில், விடுதலைக்கு மிகுந்த குறைவான அளவு காகிதமே கோட்டாவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் கேட்ட அளவில் 16இல் ஒரு பாகம்தான் சர்க்கார் அனுமதித்து இருக்கிறார்கள். இதைக் கொண்டு நமக்கு ஏற்பட வேண்டிய நலத்தில் 16இல் ஒரு பாகம்தான் பயன் ஏற்படக்கூடும். இன்று தமிழ்நாட்டில் நம் இயக்கம் 50,000 அங்கத்தினர்களையும், 300 கிளைகளையும், 2000 தொண்டர்களையும் கொண்டு இருக்கிறது என்பது யாவரும், முக்கியமாய் சர்க்காரும் அறிந்த உண்மை. நம் பத்திரிகை தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இரண்டரைக் கோடி
தமிழ் மக்கள் படித்துணரவேண்டும் என்னும் அவாவின்மீது நடத்தப்படுவதாகும்.
பொதுவாகவே இன்றைக்கு 25 வருடத்திற்கு முன் இருந்த பத்திரிகை படிக்கும் மக்கள் எண்ணிக்கையைவிட இன்று அய்ம்பது பங்குக்கு அதிகமான மக்கள் பத்திரிகை படிக்கிறார்கள் என்றால் அது மிகைப்படுத்திக் கூறுவதாக ஆகாது. 25 வருடத்திற்கு முன்பு 3 ஆங்கில தினசரி, இரண்டு அல்லது 3-தமிழ் தினசரி, 5, 6 வாரப் பத்திரிகை இவைகளுக்கு சந்தாதாரர்கள் 1000 முதல் 10000க்குள்ளாகவே இருந்தனர். இன்று இவை பலமடங்கு பெருகி ஒரு பத்திரிகை பலபேர் படிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதுமாத்திரமல்லாமல், பத்திரிகைகள் முன்னைவிட அதிக செல்வாக்கும் பெற்று அரசியல், சமூக இயல், மதம், பொருளாதாரம், அறிவு முதலியவைகளுக்கு வழிகாட்டித் தன்மையையும் பெற்று விட்டன. இந்த நிலையில் நாம், நிற்கதியான திராவிட சமுதாயத்தாரான நாம், சகல துறையிலும் கீழ்மக்களாக தாழ்த்தப்பட்டவர்களாக பிற்படுத்தப்பட்டிருக்கும் நாம் நம் நலனுக்கு என்று இருந்துவரும் ஒரே இயக்கமாகிய திராவிடர் கழக இயக்கத்திற்கு ஆக நடத்தப்படும் ஒரு பத்திரிகைக்குக் காகிதம், நாம் கேட்பதில் 16இல் ஒரு பங்கு கொடுத்து ‘அவ்வளவு தான்; புனராலோசனை செய்ய முடியாது’ என்று அரசாங்கம் முடிவு செய்துவிட்டால் நாம் நம் நிலையைப் பற்றி வெட்கப்படுவதைத் தவிர மற்றபடி யார் மீது குறைகூறமுடியும்! ஆகவே, அந்த வெட்கக்கேட்டுடன் மனந்தளராமல் உள்ளதைக் கொண்டு நம்மாலானதைச் செய்யலாம் என்ற கருத்தின் மீது துணிந்து ‘விடுதலை’ தினசரி துவக்கப்பட்டிருக்கிறது.
எப்படியோ ஒரு வகையில் நம் கடமையை நாம் செய்யத் தொடங்கி விட்டோம். பத்திரிகையும் வெளியாகிவிட்டது. இனி திராவிடர்கள் (தமிழர்கள்) கடமை என்ன? அதை ஆதரிக்க வேண்டும், பல அசவுகரியங்களுக்கிடையில் ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்டு துவக்கப்பட்டிருக்கிற படியால் அதில் பல குறைகள் காணப்படலாம். அவைகளை மன்னித்து அதை ஆதரிக்க முன் வரவேண்டியது முதற்கடமையாகும். அதற்கு பொருளாதார உதவி, உண்மையான சேதிஉதவி, அதிக சந்தாதாரர்கள் சேர்க்கும் உதவி, மக்களைப் படிக்கும்படி தூண்டி ஒரு பத்திரிகையை 10பேர் வீதமாவது படிக்கும்படி செய்யும் உதவி வாசகசாலை முதலியவைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பத்திரிகை வீதம் போய்ச் சேரும்படி செய்யும்படியான உதவி, விளம்பர உதவி முதலிய உதவிகளை ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் கூடுமானவரை செய்து அதை வளர்த்துக் காக்கவேண்டியதும் முக்கியக் கடமையாகும்.
‘விடுதலை’யில் சேதிகள், சொற்பொழிவுகள் முதலியவைகள் முக்கிய இடம் பெறுமாதலால் ‘குடி அரசில்’ சேதிகளை இயக்க அன்பர்கள் அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுகிறோம். சேதிகளை விடுதலைக்கும் சுருக்கமாகவே எழுதவேண்டுமென்று வேண்டுகிறோம். இயக்கக் கிளை ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ‘விடுதலை’ இருக்கும்படி செய்யவேண்டுமென்றும் வேண்டுகிறோம். ஆகவே, திராவிடத் தோழர்கள் விடுதலைக்கு நல்வரவுகூறி ஆதரிக்க வேண்டுகிறோம். ‘குடி அரசு’ அதன் பழைய முறைப்படி ஏதோ ஒரு வகையில் நடந்துகொண்டு இருக்கும். எனவே, அதையும் வழமை போல் ஆதரித்துவர வேண்டுகிறோம்.
இந்தப் பத்திரிகை காரணங்களால் பெரியார் ஈ.வெ.ரா முன்போல் அடிக்கடி வெளியில் வர முடியாததால் அன்பர்கள் அருள் கூர்ந்து கல்யாணம், காதுக் குத்துதல், ஆண்டுவிழா, திறப்பு விழா போன்ற ‘சுப’ காரியங்கள் என்பவைகளுக்கு சம்மன், வாரண்டு அனுப்பாமல் இருக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறோம். கண்டிப்பாக, அவசியமாக பெரியாரே வர வேண்டுமானால் ‘விடுதலை’ நன்கொடைக்கு பெருத்த கட்டணம் கட்ட வேண்டி கேட்க நேரிடுமாதலால், அப்படி நேரிடும்போது மன்னித்தருள வேண்டுகிறோம். ஏனெனில், இப்படிச் செய்தாலொழிய அழைப்பு குறையாது என்பதோடு, ‘விடுதலை’க்கும் நஷ்டஈடு ஏற்படாது என்று கருதி இப்படி எழுதுகிறோம்.
(‘குடி அரசு’, 8.6.1946)