ஜாதி உயர்வு – தாழ்வு, செல்வம் – தரித்திரம், எசமான் – அடிமை ஆகியவர்களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால், பிறகு, மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றன? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படிப் பாடுபட முடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செய லானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போடுவது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும். மனிதனுக்கு முகத்தில் தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்வது கடவுள் செயலுக்கு எதிராகவே ஆகும். அதாவது, ஓரளவுக்கு நாத்திகமேயாகும். அதிலும், செய்யச் செய்ய மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் சவரம் செய்வது வடிகட்டின நாத்திகமேயாகும்.
(‘குடிஅரசு’ 7.9.1930)