நமது அண்டை நாடான பூட்டான் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று. 8 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடு. 1999இல் தான் இந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி அறிமுகமானது. அதற்கு அடுத்த 5 ஆண்டுகள் கழித்துதான் அவர்கள் அலைபேசிகளில் பேசத் தொடங்கினர்.
அந்த நாட்டில் 20க்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகள் உள்ளன. ஆனால் டிசோங்கா மொழி மட்டுமே எழுத்து வடிவில் உள்ளது மேலும் அது தேசிய மொழியாக உயர்த்தப்பட்டது. பள்ளிகளில் டிசோங்கா மற்றும் ஆங்கிலம் வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அந்நாட்டு இளைய தலைமுறையினர் டிசோங்கா மற்றும் ஆங்கிலத்துக்கு மாறுவதால் பல மொழிகள் குறிப்பாக சிறுபான்மை மொழிகள் அழிந்து வருகின்றன.
தற்போது டிசோங்கா மொழிக்கும் அந்த நிலை வந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளில் டிசோங்கா மொழி இலக்கணம் மற்றும் இலக்கியமாக மட்டுமே கற்பிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களும் உள்ளூர் மொழியை பயன்படுத்துவதை அவமானமாக கருதுகின்றனர். மேலும் பள்ளியில் பேசினால் தண்டிக்கப்படுகிறார்கள்.
தற்போது ஆங்கிலத்துக்கு எதிராக அந்நாடு தேசிய மொழியை ஊக்குவிக்கவும், பயன்படுத்தவும் கடுமையாக போராடுகிறது. ஒரு மொழி அதனை பேசுபவர்கள் இறந்தாலோ அல்லது வேறு மொழிக்கு மாறினாலோ அழிவை சந்திக்கும். அதன்படி, பூட்டானின் உள்ளூர் மொழிகள் வேகமாக அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. ஆனால் சமூக ஊடகங்களால் இப்போது அவை எல்லாம் மாறி வருகிறது. மீண்டும் உள்ளூர் மொழிகள் புத்துயிர் பெற தொடங்கியுள்ளன. அதனை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பெண் மணியான டெச்செனின் அனுபவம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
பூடானின் தலைநகரான திம்புவில் வளர்ந்தவர் 40 வயதான பெண்மணி டெச்சென். இவரது பெற்றோர் மத்திய பூட்டானை சேர்ந்தவர்கள். டெச்செனின் தாய் மொழி நியென்கா என்ற அழைக்கப்படும் மங்டிப். ஆனால் திம்புவில் அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் அங்கு தேசிய மொழியான டிசோங்கா மற்றும் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கப்பட்டது. மேலும் வீட்டிலும் அனைவரும் டிசோங்கா பேசினர்.
கிராமத்தில் இருந்து தனது சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வரும்போது மட்டுமே அவர் தனது தாய் மொழியில் பேசினார்.
அதுவும் அவர்களுக்கு டிசோங்கா புரிந்து கொள்ள முடியாது என்பதால் தான். மலைகளில் உள்ள தனது கிராமத்துக்கு செல்லும் போது தாய் மொழியை பேசுவார். இதனால் அவருடைய தாய்மொழி அறிவு குறைவாக இருந்தது.
இருப்பினும் சமூக ஊடகங்களால் இப்போது எல்லாம் மாறி விட்டது. 90 சதவீத பூட்டான் மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர், அந்நாட்டின் அனைத்து தொலைதூரப் பகுதிகளிலும் சமூக ஊடகங்களின் பயன்பாடு விரிவடைந்துள்ளது. டெச்சென் உறவினர்கள் சமுக வலைதளக் குழுவில் உள்ளனர்.
இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள டெச்சென் அக்குழுவில் சேர்ந்தார். அங்கு மக்கள் தங்கள் சொந்த மொழியில் குரல் செய்திகள் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான சமூகவலைதளப் பயனர்கள் தங்கள் குரல் வழியில் தாய் மொழியில் தொடர்பு கொள்கின்றனர்.
இதனால் அவரின் தாய்மொழி அறிவு அதிகரித்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 2 குழந்தைகளுக்கு தாயான டெச்சென் கூறுகையில், நான் நிறைய வார்த்தைகளை கற்றுக்கொள்கிறேன். என் சொந்த மொழியில் நிறைய விடயங்களை எப்படி சொல்வது என்பதை கற்றுக் கொண்டேன் என்று தெரிவித்தார்.