நாம் மருத்துவமனைக்கு செல்வது எதற்காக? நம்முடைய நோயைக் குணப்படுத்தி கொள்வதற்காக. ஆனால், நமக்கே தெரியாமல் நாம் அங்கிருந்து நோய்க் கிருமிகளை சுமந்து கொண்டு வீட்டிற்கு வருகிறோம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம். உண்மை அதுதான். மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ள பல்வேறு பொருட்களில் தீமைகள் உண்டாக்கும் நச்சுக்கிருமிகள் இருக்கின்றன. கைப்பிடிகள் அல்லது உலோகத்தால் ஆன பொருட்களில் கிருமிநாசினைகளைத் தெளித்து அவ்வப்போது சுத்தம் செய்வதால் கிருமிகள் அழிந்து விடுகின்றன.
ஆனால், நோயாளிகளுக்கு பயன்படும் மெத்தை, துணி, போர்வை ஆகியவற்றில் உள்ள நச்சுக்கிருமிகளை அவ்வளவு சுலபமாக அழித்துவிட முடியாது.
இதற்காக ஜெர்மனியை சேர்ந்த பெர்லின் டெக்னிக்கல் பல்கலை மற்ற சில ஆய்வகங்களோடு சேர்ந்து ஒரு புது கிருமிநாசினியை உருவாக்கி இருக்கிறது.
இதில் ‘பென்சால் கோனியம் குளோரைடு’ என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இதைச் சரியான அளவில், சரியான முறையில் துணிகளில் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தனர்.
பொதுவாக மருத்துவமனைகளில் காணப்படும் ‘ஸ்டாஃபிலோகாக்கஸ், சூடோமோனஸ்’ உள்ளிட்ட பாக்டீரியாக்களை அந்தத் துணிகளின் மீது தெளித்து, 10 நிமிடம் கழித்து சோதனை செய்ததில், அதிலிருந்து 99 சதவீத பாக்டீரியாக்கள் அழிந்ததுதெரியவந்தது.
இந்தத் துணிகளை ஆறு மாதங்கள் அப்படியே விட்டு விட்டாலும் கூட இவற்றின் கிருமிநாசினி தன்மை குறையவில்லை. அதேபோல அய்ந்து ஆண்டுகள் கழித்தும் இவை அப்படியே இருக்குமா என்று கவனித்ததில் நம்பிக்கையான முடிவுகளே கிடைத்தன. அடிக்கடி துவைக்கப்படும் பொருட்கள் மீது இந்தக் கிருமிநாசினியை தெளிக்க முடியாது. ஏனென்றால், ஒருமுறை துவைத்தாலே கிருமிநாசினி தண்ணீரில் கரைந்து போய்விடும்.
இதனால் அதிக கால இடைவெளியில் துவைக்கப் படும் பொருட்கள் மீது இந்தக் கிருமிநாசினியை தெளித்து வைத்து பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.