2019-இல் மத்திய பா.ஜ.க அரசு ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-அய் ரத்து செய்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரித்த நிலையில்,“ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்தது செல்லும். 2024 செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும்” எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பா.ஜ.க-வினரால் வெகுவாக வரவேற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் (11.12.2023) நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களை அதிகரிப்பது, எஸ்.சி., எஸ்.டி பிரதிநிதித்துவம் உள்ளிட்ட திருத்தங்களுடன் ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019 திருத்த மசோதாவைத் தாக்கல்செய்தார்.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது தி.மு.க சார்பில் பேசிய எம்.பி அப்துல்லா, ”நமது முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியிருக்க வேண்டும். வல்லபாய் பட்டேலுக்கு பிரமாண்ட சிலை வைப்பதைவிட அவரின் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதுதான் மிகவும் முக்கியமானது. மேலும், ஒவ்வோர் இனமும் தங்களது தலைவிதியைத் தீர் மானித்துக்கொள்ள உரிமை உண்டு எனத் தந்தை பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, 370-ஆவது சட்டப்பிரிவை ரத்துசெய்தது கூட்டாட்சித் தத்துவத் தின் மீதான தாக்குதல்” எனப் பேசினார். இதில் பெரியாரின் கருத்தை ஏற்க முடியாது என பா.ஜ.க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
இதற்கிடையே பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “370-ஆவது சட்டப்பிரிவை ரத்துசெய்தது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என வர்ணித்த தி.மு.க உறுப்பினரின் கருத்தை ஏற்க முடியாது. இனத்தின் அடிப்படையில் தீர்மானிப்பது, அரசியலமைப்பின் சாரத்துக்கு எதிரானது. நாடாளுமன்ற அவையில், கருத்துச் சுதந்திரம் எனும் உரிமையால் தேசத்துரோகக் கருத்தைக்கூட மேற்கோள் காட்ட முடியுமா என்ன… தி.மு.க உறுப்பினர் அப்துல்லாவின் கருத்து நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. அதை ஏற்க முடியாது.
இந்தக் கருத்து பேச்சு சுதந்திரத்துக்குத் தகுதி யற்றது. இது போன்ற பிரச்னையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்… நாம் அனைவரும் அரசியலமைப்பின் மீது சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறோம். இது பேச்சு சுதந்திரம் அல்ல. ஓர் உறுப்பினரின் இத்தகைய தவறான செயல் களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது… உறுப்பினர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களால் இதை ஏற்க முடியாது. எனவே, அந்தப் பகுதிகளை நான் நீக்குகிறேன்” என்றார்.
அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, “நான் கூற முனைந்தது அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்” என விளக்கமளிக்க முன்வந்தார்.
அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுந்து, “தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தி.மு.க உறுப்பினருடைய கருத்துடன் உடன்படுகிறீர்களா என்பதை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று பதில் சொல்ல வேண்டும்” எனப் பேசினார்.
இதற்கு மத்தியில் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, “மத்தியில் `இந்தியா’ கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், 370-ஆவது பிரிவை மீண்டும் அமல்படுத்தி ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம். எம்.பி அப்துல்லா பேசியதிலும், பெரியாரின் கருத்திலும் என்ன தவறு இருக்கிறது… அதை ஏன் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” எனக் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு நடுவே குறுக்கிட்ட அமித்ஷா, “திருச்சி சிவா தி.மு.க சார்பில் பேசுகிறாரா அல்லது `இந்தியா’ கூட்டணி சார்பில் பேசுகிறாரா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், எம்.பி திருச்சி சிவாவின் கருத்துக்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அவை உறுப்பினர் ஒருவரின் கருத்து சபையின் அலுவல் விதிகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால், அவைத்தலைவர் அந்தக் கருத்துக்களை நீக்கலாம். இது அரசியல மைப்புக்கு விரோதமானது என்று சொல்வதால் மட்டும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், “தி.மு.க உறுப்பினர் மேற்கோள் காட்டிப் பேசிய பெரியார் கூறிய கருத்து எந்தச் சூழலில் தெரிவிக்கப்பட்டது என்பதை ஆய்வுசெய்து சரிபார்க்குமாறு அவைத்தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எதிர்க்கட்சித் தலைவரிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. தி.மு.க உறுப்பினர் கூறியதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா… அப்துல்லாவின் இந்த அறிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அப்துல்லா பெரியாரை மேற்கோள் காட்டியிருக்கிறார். அதை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது விவாதத்துக்குரிய விஷயமாக இருக்கலாம், ஆனால் ஒருவரை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் தடுப்பது ஜனநாயக விரோதமானது” எனத் தெரிவித்தார்.
சி.பி.அய். எம்.பி சந்தோஷ் குமார், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பிரிவு 370 மசோதாவை எதிர்த்து, “இந்த விவகாரத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நன்றி : விகடன் இணையம், 12.12.2023