சென்னை, டிச.13 நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது: ஒன்றிய அரசு நிறுவனமான, இந்திய வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஆணையம், விவசாயிகளிட மிருந்து கொப்பரை தேங்காய்களை ஒரு கிலோ ரூ.108க்கு கொள்முதல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் மட்டுமே. இந்திய வேளாண்மை கூட்டுறவு சங்க ஏலத்தை பயன் படுத்தி, பெரிய நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து, ரூ.65க்கு ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம், ஒரு கிலோ கொப்பரை தேங்காய் விலை ரூ.50 ஆக குறைந்துவிடும்.
தேங்காய் விலை ரூ.12இல் இருந்து ரூ.5 ஆக சந்தையில் குறையும். இது நடந்தால் தென்னை விவசாயிகள் பெரும் நட்டத்திற்கு ஆளாக நேரிடும். எனவே தேங்காயை அரசு நிறுவனமே பதப்படுத்தி, எண்ணெய் ஆக சந்தைப்படுத்த கோரி தென்னிந்திய விவசாயிகள் சங்கம் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. எனவே, கொப்பரைத் தேங்காயைப் பதப்படுத்தி, தேங்காய் எண்ணெயை விற்க ஒன்றிய அரசு முயற்சி எடுக்க வேண்டும். இதன் மூலம், இடைத்தரகர்களை அகற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறுவர் என்றார்.