சென்னை,டிச.12- இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உட னடியாக மீட்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்கும் படி, ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து நேற்று (11.12.2023) அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மீன் பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்களும், கடந்த டிச. 9ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர். இவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மற்றொரு மீன்பிடிப் படகு இலங்கை கடற் படையின் ரோந்துக் கப்பலால் சேதப்படுத்தப் பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது, நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக் கைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ள தாங்கள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித் துள்ளார்.