சென்னை,டிச.11- சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் சீரமைப்புப் பணிக்காக ரூ.1.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் நேற்று (10.12.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பு;
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு டிச.4 முதல் 9ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகள் டிச.11 (இன்று) முதல் மீண்டும் திறக்கப்படும்போது மழை பாதிப்புள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக உரிய பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வி துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள், 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீரமைப்புப் பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம், காஞ்சிபுரத்துக்கு ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.1.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாடநூல்கள் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர் களுக்கு, அவை மீண்டும் வழங்கப்பட உள்ளன.
அதற்குரிய விவரங்கள் பள்ளிகள் இன்று திறந்தவுடன் கணக்கெடுக் கப்படும். அதைத் தொடர்ந்து தேவையுள்ள மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப் பை போன்ற பொருட்கள் டிச.12ஆம் தேதி முதல் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூபாய் 1.9 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் ஆணை
Leave a Comment