ஆளுநர் மாளிகைமுன் பெட்ரோல் குண்டுவீச்சு!
பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டின்மீதே பெட்ரோல் குண்டை வீசி, எதிர்க்கட்சியினர்மீது பழி போட்ட நிகழ்வுகள் ஏராளம் உண்டு!
குற்றவாளியை ஜாமீனில் எடுத்தவர் பி.ஜே.பி.காரர் என்பது கவனிக்கத்தக்கது!
புதுச்சேரி, அக். 27 ஆளுநர் மாளிகைமுன் பெட்ரோல் குண்டுவீச்சு! பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டின்மீதே பெட்ரோல் குண்டை வீசி, எதிர்க்கட்சியினர்மீது பழி போட்ட நிகழ்வுகள் ஏராளம் உண்டு! குற்றவாளியை ஜாமீனில் எடுத்தவர் பி.ஜே.பி.காரர் என்பது கவனிக்கத்தக்கது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (26.10.2023) மாலை தொடர் பரப்புரை தொடர் பயண நிகழ்விற்காகப் புதுச்சேரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டதா?
செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக – தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற கோணத் தில் கொண்டு செல்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க் கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஏற்கெனவே, பல நிகழ்வுகளில் பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டின் மீதே பெட்ரோல் வெடி குண்டை வீசியிருக்கிறார்கள். அவர்களுடைய காரையே அவர்களே கொளுத்தி இருக்கிறார்கள் என்ற செய்திகளையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலின்முன் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவர்மீது பல வழக்குகள் இருக்கின்றன. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்குரைஞர் பி.ஜே.பி.யில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
மணிப்பூர் பற்றி எரிந்ததே!
டில்லியில் இதைவிட – வன்முறைகள் அதிகமாக நடை பெறுகின்றன. சட்டம் – ஒழுங்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கே இதுவரையில் பிரதமர் மோடி செல்லவில்லை.
ஆனால், இங்கே நடந்ததைப் பொறுத்தவரையில் அது ஒரு சாதாரண நிகழ்வுதான்; தமிழ்நாடு எப்பொழுதுமே அமைதிப் பூங்கா என்பதில் சந்தேகம் ஒன்றுமில்லை.
சாதாரண நிகழ்வை பெரிதுபடுத்தவேண்டிய அவசிய மில்லை. ஆனால், இதில் ஒரு பெரிய சந்தேகம் என்னவென் றால், பெட்ரோல் குண்டு வீசியதாக சொல்லப்படும் நபர், ஏற்கெனவே பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தார். அவரை, பா.ஜ.க. வழக்குரைஞர் ஒருவர் பிணையில் எடுத்திருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
ஆகவே, பா.ஜ.கவின் தொடர்பும் இதில் இருக்கிறது. ஏனென்றால், பா.ஜ.க.வை சேர்ந்தவர்களே இதுபோன்ற செயல்களை செய்து, தங்களுக்குப் பெருமை வரவேண்டும் என்பதற்காகவும், எதிரிகளுக்குக் கெட்ட பெயரை உண்டாக்கவேண்டும் என்றும் செய்கிறார்கள்.
ஆகவே, இதனுடைய பின்னணி என்பது ஆழமாக விசாரிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
பா.ஜ.க.வினுடைய ஏற்பாடு – திட்டம் என்பதற்கு இரண்டு, மூன்று ஆதாரங்கள் இருக்கின்றன!
இது முழுக்க முழுக்க பா.ஜ.க.வினுடைய ஏற்பாடாக – திட்டமாக இருக்கக்கூடிய அளவிற்கு இரண்டு, மூன்று ஆதா ரங்கள் தெளிவாக சமூக வலைதளங்களில் வந்திருக்கின்றன. அதை ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். அந்தக் கோணத்திலும் விசாரணை செய்யப்படவேண்டும்.
ஆளுநருக்கு எதிராக பல இடங்களில் அமைதியாகக் கருப்புக் கொடி காட்டி கைதாகி இருக்கிறார்களே தவிர, இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டது கிடையாது.
ஆகவே, இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு ஓர் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்றோ அல்லது இதை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசின்மீது பழிபோடலாம் என்று நினைத்தாலோ, ஒருபோதும் அது நடக்காது.
பெண்களுக்காக 33 சதவிகித இட ஒதுக்கீடு எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும்?
செய்தியாளர்: பெண்களுக்கு எதிராக ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறதா?
தமிழர் தலைவர்: பெண்களுக்கு எதிராக என்று சொன் னால், மணிப்பூர் நிகழ்வு ஒன்று போதுமே!
பெண்களுக்காக 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்திருக்கின்றோம் என்று சொல்லிவிட்டு, அந்த இட ஒதுக்கீடு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாத நிலை இருக்கிறதே, இதைவிட பெண்களை ஏமாற்றிய மோசடி திட்டம் வேறொன்றும் இருக்க முடியாது. பெண்ணினம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது, ஏமாற்றப்பட்டு இருக்கிறது.
சோனியா காந்தியின் வரவேற்கத்தகுந்த அறிவிப்பு!
அதற்கு ஒரே பதில், ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, உடனடியாக பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவோம் என்று சோனியா காந்தி அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் எந்த அளவிற்குக் கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கிறார்!
செய்தியாளர்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறாரே, அதுபற்றி. தங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: அது சிதம்பர ரகசியம்; பரம ரகசியம்; அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகியது எதற்காக என்று தெரியவில்லை.
மகளிரை, பா.ஜ.க. எந்த அளவிற்கு மதிக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளப்பூர்வமான நிகழ்வு.
மகளிர் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் எந்த அளவிற்குக் கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதற்கு, அவருடைய அறிக்கையே தெளிவாக தெரிவித்திருக்கிறது. இதுவே போதும், இதற்குமேல் விளக்கம் தேவையில்லை.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.