கோவில் சொத்துகளை சுளை சுளையாய் விழுங்கத் திட்டம் – உஷார்! உஷார்!!
இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்துவிட்டு இந்துக்களிடமே கோயில்கள் ஒப்படைக்கப்பட வேண் டும் என்ற குரல் பார்ப்பனீய – சங்பரிவார்க் கும்பலாலும் ஒன்றிய அமைச்சர்களாலும் எழுப்பப்படுகிறது.
அந்தக் குரலுக்குப் பின்னணி என்ன? அதற்குப் பதிலடியே இந்தக் கட்டுரை:
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் அரசிடமிருந்து பிடுங்கப்பட வேண்டும். ஹிந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் – அவர்களிடம் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க – தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளது. (பக்கம் 22).
ஆர்.எஸ்.எஸ். – வார இதழான விஜயபாரதம் (23.04.2021) நான்கு பக்க அளவில் நீண்டதோர் கட்டுரை யினைத் தீட்டியது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அதிக அளவு முறைகேடுகள் நடைபெறு கின்றன. கோயில் சொத்துகள் களவாடப்படுகின்றன. எனவே இந்துக்கள் அடங்கிய தனிவாரியத்திடம் ஒப் படைக்கப்பட வேண்டும் என்று ஒப்பாரி வைக்கின்றது.
திரிநூல் ஏடான ‘தினமலர்’ சும்மா இருக்குமா? (18.4.2021, பக்கம். 5) கடவுள்’ என்ற தலைப்பில் நீண்டதோர் கட்டுரையை வரைந்து தள்ளியது.
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசு தேவ் இந்த பிரச்சினையில் மூர்க்கமாக மூக்கை நீட்டி வருகிறார்.
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் இந்துக் கோயில்கள் எல்லாம் ஒரு காலக் கட்டத்தில் தனியார் வசம்தான் இருந்து வந்தன. அரசர்கள் கையில் இருந்த கோயில்கள் பார்ப்பனர் வசம் மாறின என்பதுதான் உண்மை வரலாறு; அவற்றில் அரசின் தலையீடு ஏற்பட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது தான் முக்கியமான வினாவாகும்.
எந்தப் பார்ப்பானும் எந்த கோயிலையும் கட்டிய தில்லை. கோயிலை நிர்மாணிப்பதில் அவர்களுடைய பங்களிப்பு என்பது என்ன? ஒரே ஒரு செங்கல்லைத் தூக்கி கொடுத்திருப்பார்களா? கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது போல் கும்பாபிஷேகம் என்ற பேரில் கும்பத்தில் ஜலத்தையும், பாலையும் ஊற்றிய கையோடு பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாகி விட்டன கோயில்கள் என்பதுதானே உண்மை.
கோயில் கருவறைக்குள் அர்ச்சகராகத் தமிழர்கள் செல்வதற்கும், தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களில் தமிழில் வழிப்பாட்டு உரிமை என்பதற் குமே இன்றுவரை போராடும் நிலை தானே!
மன்னர்களாலும் பக்தர்களாலும் கோயில்களுக்கு ஏராளமான சொத்துக்கள் குவிந்தன. அவற்றை தங்களின் ஏகபோக சொத்துக்களாக கொண்ட நிலை யில் தானே அரசு தலையீடு என்ற கரம் நீண்டது
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் தான் 1817 ஆம் ஆண்டு சட்டம் க்ஷிமிமி ஆவது பிரிவு கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ரெவின்யூ போர்டுக்கு வழங்கியது. விக்டோரியா மகாராணியின் சாசனம் என்பதின்படி – இந்தியாவின் மத விவகாரங்களில் அரசு தலையிடுவதில்லை என்ற அறிவிப்பின் காரணமாக கோயில்கள் மறுபடியும் மனுவாதிகள் கைக்குள் சென்றன. இந்நிலையில்தான் வாராது வந்த மாமணியாய் சென்னை மாகாணத்தில் உதித்த நீதிக்கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. பானகல் அரசர் (ராம ராய நிங்கார்) பிரதமராக வந்தபோதுதான் இந்து அறநிலைய வாரிய மசோதா அறிமுகப்படுத் தப்பட்டு 1923 ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது.
மசோதா நிறைவேற்றப்பட்டாலும் வைஸ்ராயின் ஒப்புதல் கிடைத்தால் தான் செயல்பாட்டுக்கு வர முடியும். இதனை பயன்படுத்திக்கொண்ட கோவில்கள் மடங்கள் மத நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மசோதா வுக்கு ஆதரவாக கையொப்பம் இட வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தனர்.
மசோதாவுக்கு வைஸ்ராயின் ஆதரவு இருந்தது. அடுத்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று வைசிராய் காத்திருந்த நிலையில், மீண்டும் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்து பானகல் அரசர் மாநில பிரதமரானார்.
1924 இல் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் வைஸ்ராய் ஒப்புதலுடன் 1925 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வரலாற்று கிரீடத்தில் இந்த அறநிலையத் துறை ஆணை ராஜ நடை போட்டது என்பதுதான் வரலாறு.
நாத்திகர்கள் கையில் இந்தத் துறை போய்விட்டது என்று பொய்க் கூச்சல் போடுகிறார்களே – அதாவது உண்மையா என்றால் இல்லை இல்லை இல்லவே இல்லை. அது ஜமக்காளத்தில் வடிகட்டிய பெரும் பொய்யாகும். ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நாத்தி கர்கள் அல்லர் – கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தான் என்பது நினைவில் இருக்கட்டும்.அதற்குப்பின் ஒழுக்க சீலர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது இந்த சட்டம் மேலும் செழுமை பெற்றது. கோவில் சொத்துக் கள் கொள்ளையோ கொள்ளை என்று கூச்சல் போடும் உச்சிக்குடுமிகள் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம். கோயில்களில் இவர்கள் நடத்திய சுரண்டல்கள் கொஞ்சமா? இதோ சில ஆதாரங்கள்:
திருப்பதி கோவில் கொள்ளை
15ஆம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசை கிருஷ்ண தேவராயர் ஆண்டு வந்தார். அவர், திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் தீவிர பக்தர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 7 முறை சென்று இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் ஏராளமான தங்க, வைடூரிய நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தி இருக்கிறார்.
கிருஷ்ண தேவராயரின் முடிசூட்டு விழா நடந்து, 500 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அய்தரா பாத்தில் மிகப்பெரிய விழாவை ஆந்திர அரசு நடத்தி யது. இந்த விழாவை, குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் தொடங்கி வைப்பதாகத் திட்டம்.
இந்த விழாவையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, மன்னர் கிருஷ்ண தேவராயர், வழங்கிய அரிய ஆபரணங்களின் நிழல்படக் கண்காட்சி நடத்த, திருப்பதி கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நகைகளை நிழற்படம் எடுக்க, நகைகள் பிரிவை அணுகிய போது, “கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள், ஏற்கெனவே 40 ஆண்டுகளுக்கு முன் தங்கக் கட்டிகளாக உருக்கப்பட்டு, கஜானா-வில் சேர்க்கப்பட்டு விட்டது என்று பதில் அளித்தனர்.
அந்த நகைகள் உருக்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்டதை அறிந்ததும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேவஸ்தான உயர் அதிகாரிகள், ஆபரணப் பிரிவு நிர்வாக அதிகாரி குரு ராஜாராவிடம், விளக்கம் கேட்டு இருக்கிறார்கள்.
இது பற்றி குருராஜாராவ் கூறியதாவது:
கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் இப்போது எங்களிடம் இல்லை. அதை 40 ஆண்டுகளுக்கு முன்பே சாதாரண நகைகளுடன் சேர்த்து, கோவிலில் உள்ள உருக்குப் பட்டறையில் உருக்கி, தங்கக் கட்டிகளாக ஆக்கி விட்டோம். அவை தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்பட்டு விட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன என்றார்.அப்போது இந்தப் பிரிவுக்கு பொறுப்பாளராக யார் இருந்தார்?. எந்த அதிகாரியின் உத்தரவின் படி ஆபர ணங்கள் உருக்கப்பட்டன? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். இவ்வாறு குரு ராஜாராவ் கூறினார்.
அனுமதி அளித்தது யார்?
இது பற்றி கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணராவ் கூறியதாவது:
“கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் உருக்கப் பட்டு விட்டதாக, ஆவணத்தில் எழுதப்பட்டு இருப்பது உண்மைதானா? இந்த ஆவணம் உண்மையானது தானா? இந்த முடிவை எடுத்தது யார்? அனுமதி அளித்த அப்போதைய அதிகாரி யார்? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.முழு விசாரணைக்குப் பின், அனைத்தும் வெட்ட வெளிச்சமாகி விடும்” இவ்வாறு கிருஷ்ணாராவ் கூறினார்.
அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு கூறு கையில், “அரிய நகைகள் உருக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள். இதில் நடந்த உண்மை என்ன என்ப தைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. அய்தராபாத் விழாவில் நடக்க இருந்த கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் நிழல்படக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது” என்றார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, கிருஷ்ண தேவராயர், 1513ஆம் ஆண்டு முதல் 1521 வரை 7 முறை வந்து தரிசனம் செய்து இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர், ஏராளமான விலை மதிப்பில்லாத நகைகளைக் காணிக்கையாகக் கொடுத்து இருக்கிறார் என்று கோவில் பதிவேடுகளில், தெளிவாக எழுதப் பட்டு இருக்கிறது.
அதன் விவரம் வருமாறு:1513ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி கிருஷ்ண தேவராயர் தனது மனைவிகள் திருமலா தேவி, சின்னா தேவி ஆகியோருடன் திருப்பதி வந்தார். அப்போது அவர் நவரத்தின கிரீடம் ஒன்றையும், 25 வெள்ளித் தட்டு களையும், 2 தங்கக் கிண்ணங்களையும் காணிக்கை யாகப் படைத்து இருக்கிறார்.
1513ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதியும், ஜூன் 13ஆம் தேதியும் இரு முறை அவர் திருப்பதிக்கு வந்து, மூலவருக்கு, விலை மதிக்க முடியாத ஆபரணங்களைக் காணிக்கையாகச் செலுத்தி இருக்கிறார். மேலும் உற்ச வர்களுக்கு, 3 தங்க மணி மகுடங்களையும் படைத்து இருக்கிறார்.
1514 ஜூலை 6-ஆம் தேதி, 30 ஆயிரம் வராகன் களில் (தங்க காசுகள்) ஏழுமலையானுக்கு, கிருஷ்ண தேவராயர் கனகாபிஷேகம் நடத்தினார். அவை கோவிலுக்குக் கொடுக்கப்பட்டன.
1515ஆம் ஆண்டு அவர் வருகை தந்த போது, ரத்தினக் கற்கள் பதித்த தங்க மகர தோரணம் ஒன்றை காணிக்கையாகச் செலுத்தி இருக்கிறார். இது மிகவும் விலை மதிப்பு மிக்கது.
1517ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி கிருஷ்ண தேவராயர், தனது மற்றும் அவரது 2 மனைவிகளின் வெண்கலச் சிலைகளைக் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். அந்தச் சிலைகள், இப்போதும் மகாவாயிலின் உள்பிரகாரத்தில் உள்ளன.
1518ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி, கிருஷ்ண தேவராயர் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தபோது, கோவிலின் கருவறை விமான கோபுரத்தில், 30 ஆயிரம் வரகனில் தங்கத் தகடு பதித்தார்.
1521ஆம் ஆண்டு பிப். 17ஆம் தேதி அவர் ஏழுமலையானுக்கு நவரத்தின கிரீடத்தை வழங்கினார். விலை மதிப்பு மிக்க வைர பீதாம்பரத்தையும் கொடுத் தார்.
இப்படியாக, ஏழுமலையான் கோவிலுக்கு, மன்னர் கிருஷ்ண தேவராயர் படைத்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழம்பெரும் வைரம், வைடூரியம், மரகதம் போன்ற நவரத்தினங்களால் ஆன நகைகள் என்ன ஆயின? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, அப்போது அய்தராபாத்தில் பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவி, திருப்பதி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவதாகவும், இது பற்றி சி.பி.அய். விசாரணை நடத்த வலியுறுத்தி, திருப்பதி வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு கொடுக்க உள்ள தாகவும் கூறினார்.
இது குறித்து டில்லியில் பேசிய சந்திரபாபுநாயுடு, நகை மாயமானது பற்றி மட்டுமல்லாது அங்கு நடைபெறும் இன்ன பிற மோசடிகள் குறித்தும் சிபிஅய் விசாரணை நடத்துவது அவசியம் என்றும், அப்போது தான் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் காட்டமாகக் கூறினார்.
அத்துடன் வஸ்திர அலங்கார சேவை டிக்கெட் விற்றதில், பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் கூறினார். இந்த விவகாரம் வெளிவந்த உடன், கோவிலின் நகைப்பிரிவில் நீண்ட காலமாக வேலை பார்த்து வந்த இரண்டு அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டனர், இதனை அடுத்து, இந்த ஊழல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது மாலைமுரசு ஏடு (26.08.2009) போட்ட தலைப்பு என்ன தெரியுமா? “ஏழுமலையானுக்கு சொந்தமான கோடிக்கணக்கான நகை மோசடி! தங்க மூலாம் பூசப்பட்ட செப்பு நகைகளை வைத்துவிட்டு ஒரிஜினல் நகைகள் களவாடல்” இதுதான் மாலை முரசு செய்தி.
நாமதாரியான ஏழுமலையானுக்கே இப்படி நாமம் போட்டவர்களை என்னவென்று சொல்லுவது! பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தால்தான் கோயில் களில் கொள்ளை நடப்பதாகக் குதித்துக் குதித்து எழுதும் துக்ளக், தினமலர் கூட்டம் திருப்பதி கோயில் கொள்ளைக்கு என்ன காரணம் சொல்லப் போகின்றன? உண்மையைச் சொல்லப் போனால், கோயில் அர்ச்சகர் களுக்கும், தேவஸ்தானப் புள்ளிகளுக்கும் மிகவும் நன்றாகத் தெரியும். கடவுளாவது! கத்தரிக்காயாவது! கல்லு, செம்பு என்பது, அதனாலேதானே துணிந்து நடக்கின்றன கொள்ளைகள்!
(தொடரும்)
கோயிலில் கொள்ளை
அடிப்பவர்கள் யார்?
குமுதம் : பெரிய மற்றும் சிறிய கோயில்களில் கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றது. இதற்கு. என்ன காரணம்? மக்களுக்கு கடவுளின் மீது உள்ள பக்தி போய்விட்டதா?
ஜெயேந்திர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியர்: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர் களில் அனேகம்பேர் பக்தர்களாகவே இருந்து ஆண்டவ னிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழிதேடுகிறார்கள். நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்ப தாக நாம் நினைக்கவில்லை பொதுவாக பேராசை ஜாஸ்தியாகிவிட்டது. பணமும் அதிகரித்துள்ளது.
– ‘குமுதம்’, 12.09.1996