சென்னை, டிச.7- திமு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
நடந்து முடிந்த அய்ந்து மாநிலச் சட்டமன்றத் தேர் தல் முடிவுகள் குறித்து கருத் துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த தி.மு.க. தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்.
பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார்.
செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், “முடிந்த அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.
எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று சொல்லி இருக்கிறார்.
பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சுட்டிக் காட்டிய கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.