‘மனுதர்ம யோஜனா’ என்கிற குலக்கல்வித் தொழில் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்ற மோடி ஆட்சியை 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தலில் தூக்கியெறிவதற்கு
கலங்கரை விளக்கமாக இருக்கக் கூடியவர் நம்முடைய தலைவர் ஆசிரியர்- அவருடைய தொடர் பயணம் இந்த நாட்டிற்கு இன்னும் தேவைப்படுகிறது!
திருச்சி, அக்.28 ‘மனுதர்ம யோஜனா’ என்கிற குலக் கல்வித் தொழில் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்ற மோடி ஆட்சியை 2024 ஆம் ஆண்டு நடைபெற விருக்கின்ற தேர்தலில் தூக்கியெறிவதற்கு, கலங்கரை விளக்கமாக இருக்கக் கூடியவர் நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள். வரலாற்றில் பல சாதனைகளைப் புரிந்தவர் நம்முடைய ஆசிரியர். சமூகநீதிக் கொள்கைக் காக தன் வாழ்நாளை அர்ப்பணித்திருப்பவர்; அவரு டைய தொடர் பயணம் இந்த நாட்டிற்கு இன்னும் தேவைப் படுகிறது என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் செந்திலதிபன் அவர்கள்.
ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா
கடந்த 20.10.2023 அன்று மாலை திருச்சியில் நடை பெற்ற ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம் – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் செந்திலதிபன் அவர்கள் சிறப்புரை யாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:
வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அளவிற்கு மிகுந்த சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, ‘‘ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்” நடத்துகின்ற நம்முடைய ஆசிரியருக்குப் பரப்புரை ஊர்தி வழங்குகின்ற விழாவிற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியாருடைய பாதையில் 80 ஆண்டுகாலம் நடைபோடுகின்ற
மகத்தான தலைவர் ஆசிரியர்!
1944 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29 ஆம் நாள் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் 10 வயது சிறுவராக இருக்கின்ற நேரத்தில், கடலூரில் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையை ஏற்றார் கள். இன்றைக்கு 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. தந்தை பெரியாருடைய பாதையில் 80 ஆண்டுகாலம் நடை போடுகின்ற மகத்தான தலைவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
இன்றைக்கு அவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கப்பட்டு இருக்கின்றது என்று சொன்னால், அந்த ஊர்தியினுடைய திறவுகோலை நம்முடைய அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்கள் இங்கே வழங்கி, உரையாற்றுகின்றபொழுது, இந்தப் பயணம் நெடிய பயணம்- இந்தப் பயணம் நிற்காமல் சென்றுகொண்டே இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்கள்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
மகத்தான தலைவர்!
10 வயதிலே மேடையேறி பேசுவதற்கு, அன்றைக்குத் திராவிட இயக்கத்தில் 10 வயது பகுத்தறிவு சிறுவன் என்று விளம்பரம் செய்யப்பட்டு, 80 ஆண்டு காலம் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காக அறிவும், மானமும் உள்ள சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று தலைவர் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்களே, அப்படி மாற்றுவதற்கு 80 ஆண்டு காலம் ஓயாத கடல் அலைபோல், இந்த இனத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மகத்தான தலைவர் இங்கே அமர்ந்திருக்கின்றார். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு, திராவிட இயக்கத்தின் போர் வாள் – எங்கள் லட்சிய தலைவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சிப் புயல் வைகோ அவர்கள் தன்னு டைய வாழ்த்துகளை இங்கே தெரிவிக்கச் சொன்னார்கள்.
அய்யா ஆசிரியர் அவர்கள் நூறாண்டு கடந்து வாழவேண்டும்; ஏன், பெரியார் திடலில் எங்கள் தலைவர் வைகோ அவர்கள் குறிப்பிட்டதைப்போல, 120 ஆண்டு களுக்கு மேலாக நீங்கள் வாழவேண்டும்.
திராவிடர் கழகம் என்கிற பெயரில்,
முதன்முதலில் மாநாடு நடைபெற்ற இடம்,!
வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதியிலே இந்தப் பிரச்சார வாகனம் வழங்குகிற விழா நடந்துகொண்டிருக்கிறது. இது புத்தூர் பகுதி. இந்தப் புத்தூர் பகுதிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.
1944 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 26, 27 ஆம் நாள்களில் நீதிக்கட்சியினுடைய 16 ஆவது மாகாண மாநாடு சேலத்தில் நடைபெற்றபொழுது, நீதிக்கட்சியினுடைய பெயரை மாற்றுவதற்கு, அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அந்தத் தீர்மானத்தின்படி ‘‘திராவிடர் கழகமாக” பெயர் மாற்றப் பட்டது.
அதற்குப் பிறகு, திராவிடர் கழகம் என்கிற பெயரில், முதன்முதலில் மாநாடு நடைபெற்ற இடம், இந்தப் புத்தூர் பகுதி.
1945 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இந்தப் புத்தூர் பகுதியில், திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நீதிக்கட்சியினுடைய 17 ஆவது மாகாண மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கொடியேற்றி உரையாற்றிய மிராண்டா கஜேந்திரன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் அவர்களுடைய சகோதரி, அவர் கொடியை ஏற்றுகிறபொழுது, அந்தக் கொடி நீதிக் கட்சியினுடைய தராசு கொடி.
அந்தக் கொடியை உயர்த்திவிட்டுப் பேசுகிறபொழுது, அய்யா தந்தை பெரியாரை வைத்துக்கொண்டு சொன் னார்கள்.
மிராண்டா கஜேந்திரன்
இந்தக் கொடியிலுள்ள சிவப்பு வண்ணம் புரட்சியைக் குறிக்கிறது; ஆனால், தராசு என்பது இந்த நாட்டில் ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்கக் கூடிய ஒரு குறியீடு கிடையாது. எனவே, அதனை எடுத்துவிட்டு, புதிய கொடியை வடிவமைக்கவேண்டும் என்று மிராண்டா கஜேந்திரன் இதே புத்தூர் பகுதியில் அன்றைக்குக் கொடியேற்றி உரையாற்றினார்.
அதற்குப் பிறகுதான், திராவிடர் கழகத்திற்குப் புதிய கொடியை தலைவர் தந்தை பெரியார் வடிவமைத்து, இதோ பட்டொளி வீசிப் பறக்கின்ற இந்தத் திராவிடர் கழகக் கொடி வடிமைக்கப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இந்தப் புத்தூர் பகுதி.
1945 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடைபெற்ற அந்த மாநாட்டில் 12 வயது சிறுவராகப் பங்கேற்று உரை யாற்றியவர் நம்முடைய அய்யா ஆசிரியர் அவர்கள்.
12 வயதில் ‘‘போர்க்களம் நோக்கி’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்!
நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களை அழைத்து, தலைவர் கலைஞர் அவர்கள், 1945 ஆம் ஆண்டு, மே ஒன்றாம் தேதி திருவாரூரிலே தென்மண்டல திராவிடர் மாணவர் மாநாட்டினை நடத்தினார். சொல் லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் போன்றவர்கள், இராம.அரங்கண்ணல் போன்றவர்கள் உரையாற்றிய அந்த மாநாட்டில், 12 வயதிலே உரையாற்றியவர் நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அந்த மாநாட்டில் அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு ‘‘போர்க்களம் நோக்கி” என்பதுதான். அருமைத் தோழர்களே, 10 வயதில் முதன்முதலாக மேடையேறிய நேரத்தில், கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உரையாற்றகிற பொழுது, பகுத்தறிவு சிறுவன் வீரமணி என்று விளம்பரம் செய்யப்பட்டு, மேடை கண்டபோது, அன்றைக்கு அவ ருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு ‘‘தமிழன் முன் னேற்றம்” என்பதாகும்.
அதற்குப் பிறகு, ‘‘போர்க்களம் நோக்கி” என்ற தலைப்பில், திருவாரூரில் உரையாற்றினார்.
இன்றைக்கு 90 வயதைக் கடந்த பிறகும் தமிழனை முன்னேற்றுவதற்கு போர்க் களத்தில் நிற்கின்ற ஒரே தலைவராக நம்முடைய தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் விளங்குகிறார்கள்.
இந்த விழாவினை நடத்துவதற்கு என்ன காரணம்?
லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த மண்ணுக்காக, இந்த சமுதாயத்திற்காகப் பயணம் செய்து உழைத்திருக்கின்றார் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
ஆசிரியருடைய கொள்கைப் பாதையிலே
நாங்கள் நடந்திருக்கின்றோம்
அவர் இளம்வயதில் இருந்தே, எங்களைப் போன்ற இளைஞர்கள் அந்தக் காலத்திலிருந்து அவருடைய கரம்பற்றி, அவருடைய கொள்கைப் பாதையிலே நாங் கள் நடந்திருக்கின்றோம். அய்யா அவர்களுக்குப் பய னாடை அணிவித்த நேரத்தில், அவருடைய திருக்கரங் களை எடுத்து என் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
ஏன் தெரியுமா?
இந்தக் கரம் அல்லவா தந்தை பெரியார் பிடித்த கரம்!
பேரறிஞர் அண்ணா பிடித்த கரம்!
தலைவர் கலைஞர் தாங்கிய கரம்!
சமூகநீதித் தலைவர்களாக இருந்தார்களே பீகாரில், கர்பூரி தாகூர் அவர் கை பிடித்துக் குலுக்கிய கரம் அல்லவா, நம்முடைய ஆசிரியருடைய கரம்.
‘‘கி.வீரமணி தமிழ்நாட்டுத் தலைவர் அல்ல; இந்தியாவிற்கு வழிகாட்டும் தலைவர்’’
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில், வி.பி.சிங் அவர்கள் உரையாற்றும்பொழுது, ‘‘கி.வீரமணி தமிழ்நாட்டுத் தலைவர் அல்ல; இந்தியாவிற்கு வழி காட்டும் தலைவர்” என்று அன்றைக்கு வி.பி.சிங் சொன்னாரே, அவர் கரம் குலுக்கிய கரம் அல்லவா, நம்முடைய ஆசிரியருடைய கரம்.
அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் நாடாளு மன்றத்திலே உரையாற்றிய பிறகு, பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள், ‘‘நானும் பீகாரில் இருந்து வருகிற திராவிடன்” என்று பெருமைப்பட்டாரே, அந்த ஜெகஜீவன்ராம் கரம் பிடித்துக் குலுக்கினாரே, அந்த ஆசிரியரின் கரம் அல்லவா, இந்தக் கரம்.
சோசலிச கட்சியின் தலைவர் நம்முடைய ராம் மனோகர் லோகியா அவர்களை அழைத்து, பெரியார் திடலில் சிறப்பு செய்தாரே, அந்த சோசலிச தலைவர் பிடித்துக் குலுக்கிய கரம், நம்முடைய ஆசிரியர் கரம்.
இரண்டுமுறை அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது!
இதனை நான் சொல்வதற்குக் காரணம் தோழர்களே, ‘‘ஈரோட்டுப் பாதையில்” நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், சமூக நீதிக்காக இரண்டு முறை இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. உங்களுக்குத் தெரியும் வரலாறு – அதனை நினைவூட்ட விரும்புகிறேன் நான்.
1951 ஆம் ஆண்டு, சமூகநீதிக்கான தடை ஏற்பட்ட நேரத்தில், உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் போட்ட தடையை உடைத்து, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் 1951 இல் திருத்தப்பட்டது, தலைவர் தந்தை பெரியார் நடத்திய கிளர்ச்சியின்மூலம்.
அதேபோல, தமிழ்நாட்டில் இருக்கின்ற 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கு, 1991 ஆம் ஆண்டு, 9 ஆவது அட்டவணையில் சேர்த்து, அதனை நீடிக்கச் செய்வதற்கு 31-சி என்கிற பிரிவைக் கொண்டு வந்து, சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 76 ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய தலைவர் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்.
சமூகநீதிக்காக 1951 இல் அய்யா தலைவர் தந்தை பெரியார் தொடங்கி வைத்தார். அதேபோல, 1991 ஆம் ஆண்டு 76 ஆவது சட்டத் திருத்தத்தை செய்வதற்குப் போராடியவர், வடிவமைத்தவர் நம்முடைய அய்யா ஆசிரியர் அவர்கள்.
அதேபோன்ற ஒரு நிலை இன்றைக்கும் இருக்கிறது. தொடர் பயணம் இன்றைக்கும் தேவைப்படுகிறது. நம்மு டைய பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்படு கிறது, நீட் என்ற கொடுவாள் நீட்டப்பட்டு இருக்கிறது.
கலங்கரை விளக்கமாக இருக்கக் கூடியவர் நம்முடைய தலைவர் ஆசிரியர்
அந்த நீட்டை எதிர்ப்பதற்கு – 1954 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போர் முரசு கொட்டி, ஆட்சிபீடத்திலிருந்த இராஜாஜியை தூக்கி எறிந்துவிட்டு, காமராஜரை அந்த இடத்தில் உட்கார வைத்தாரோ, பச்சைத் தமிழர் என்று ஏற்றிப் போற்றினாரோ – அதேபோல, ‘மனுதர்ம யோஜனா’ என்கிற குலக்கல்வித் தொழில் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்ற மோடி ஆட்சியை 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தலில் தூக்கியெறி வதற்கு, கலங்கரை விளக்கமாக இருக்கக் கூடியவர் நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள். வரலாற்றில் பல சாதனைகளைப் புரிந்தவர் நம்முடைய ஆசிரியர்.
சமூகநீதிக் கொள்கைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்திருப்பவர்; அவருடைய தொடர் பயணம் இந்த நாட்டிற்கு இன்னும் தேவைப்படுகிறது.
அய்யா ஆசிரியர் அவர்களை, 27 வயதில் ஓர் இயக் கத்தினுடைய – திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாள ராக தலைவர் பெரியார் நியமனம் செய்தார்.
29 வயதில், ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராக பொறுப்பை ஏற்றார்.
உலகத்திலேயே நம்முடைய ஆசிரியரைத் தவிர இந்த சிறப்பு வேறு எவருக்கும் கிடையாது!
1962 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதி, ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பே ஏற்றுக் கொண்ட ஆசிரியர், 61 ஆண்டுகாலம் அந்த ஆசிரியர் பொறுப்பிலிருந்து ‘விடுதலை’ ஏட்டினை நடத்துகிறார் என்றால், உலகத்திலேயே இந்த சிறப்பு நம்முடைய ஆசிரியரைத் தவிர வேறு எவருக்கும் கிடையாது.
61 ஆண்டுகாலம் ஒரு பத்திரிகையினுடைய ஆசிரியர்!
இவ்வளவு சிறப்புகளைப் பெற்றிருக்கக்கூடிய ஆசிரியர் அவர்களே, வி.பி.சிங் அவர்கள் சொன்னதைத் தான் நான் இங்கே நினைவூட்டுகிறேன், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறபொழுது, உங்களுடைய பிரச்சாரப் பயணம், தமிழ்நாட்டோடு நின்றுவிடக் கூடாது – காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை; குஜராத்திலிருந்து மேற்கு வங்காளம் வரையில் உங்களுடைய பிரச்சாரப் பயணம் நடைபோடவேண்டும்.
‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் – சமூகநீதியைக் காக்கின்ற தலைவரான உங்களை அழைத்து, இந்தியா முழுவதும் பிரச்சாரத்தைத் தொடங்கி வைப்பார்கள்.
ஆசிரியரைப்பற்றி தலைவர் கலைஞர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப்பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் தோழர்களே!
‘‘தந்தை பெரியாரின் கொள்கையைக் காப்பாற்று வதற்கு இரண்டு கரங்கள் இணைந்திருக்கின்றன. ஒன்று, அந்தச் சுடரை ஏந்தியிருக்கின்ற என்னுடைய கரம்; இன்னொன்று என்னுடைய ஆரூயிர் இளவல் வீரமணி யினுடைய கரம். அந்தக் கரம், தந்தை பெரியாரின் சுடரை ஏந்தி இருக்கின்றது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னாரே, அந்தச் சுடரை அணையாமல் பாதுகாப்பதற்கு, இன எதிரிகளை இந்த மண்ணிலே வீழ்த்துவதற்கு நமக்கு ஆசிரியர் அவர்கள் மிகவும் தேவைப்படுகிறார். தற்போது, தந்தை பெரியார் பிம்பத்தை உடைப்பதற்கு, பல கைக்கூலிகளை இந்த நாட்டில் ஏவி விடுகிறார்கள்.
திராவிட இயக்கத் தோழர்களே, நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் வீட்டுப் பிள்ளைகள் – ஆர்.எஸ்.எஸின் கைக்கூலிகள் பலர், நாம் தமிழர் என்று புறப்பட்டு இருக்கிறார்கள்; பெரியார் பிம்பத்தை ஒரு நாளும் இந்த மண்ணிலே உடைக்க முடியாது.
இந்தியா முழுவதுமிருந்து திரண்டு,
உங்கள் பின்னால் அணிவகுத்து வருவார்கள்
‘இந்தியா’ உடைந்தாலும் உடையுமே தவிர, பெரியார் பிம்பத்தை எவனாலும் உடைக்க முடியாது என்று தெரி வித்து, ஆசிரியர் அவர்களே, நீங்கள் திசை காட்டுகின்ற கலங்கரை விளக்கமாக இருந்து, இந்தியாவிற்கு வழிகாட்டுங்கள்; இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பாது காக்கின்றவர்கள், சமூகநீதிக்காகப் போராடுகின்றவர்கள், மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றவர்கள், ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, பட்டியலின மக்களுக்காக இந்த மண்ணில் உழைக்கக் கூடியவர்கள் – இந்தியா முழுவதும் திரண்டு, உங்கள் பின்னால் அணிவகுத்து வருவார்கள்.
பல்லாண்டு காலம் நீங்கள் வாழவேண்டும் என்று உங்களை வாழ்த்தி அல்ல – வணங்கி – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்தி, பாராட்டுகிறேன்.
இந்த வாய்ப்புக்கு நன்றி பாராட்டி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் செந்திலதிபன் அவர்கள் உரை யாற்றினார்.