சமூகநீதிபற்றி காங்கிரஸ் நம்பகமாகப் பேச ஆரம்பித்த நிலையில்,
பாசாங்குத்தனமாக பி.ஜே.பி.யும் அதைப் பேச ஆரம்பித்துள்ளது!
சமூகநீதிபற்றி காங்கிரஸ் நம்பகமாகப் பேச ஆரம்பித்த நிலையில், பாசாங்குத்தனமாக பி.ஜே.பி. யும் அதைப் பேச ஆரம்பித்துள்ளது! 5 மாநில தேர்தல் களில் வெற்றிபெற பி.ஜே.பி.யின் ‘புதிய அவதாரம்’ சமூகநீதி? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நடக்கவிருக்கும் அய்ந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. மீண்டும் அந்த மாநிலங்களில் வெற்றி பெறுவது சந்தேகமே என்ற உண்மை நாளுக்கு நாள் வெளிச்சத் திற்கு வரத் தொடங்கிவிட்டது!
பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றால் வாக்குகள் கண்டிப்பாகக் கிடைக்கும்; ஆகவே, அவரை முன்னிலைப்படுத்தினால் வெற்றி என்ற தொடக்கக் காலத்தில் (10 ஆண்டுகளுக்குமுன்) பா.ஜ.க. –
ஆர்.எஸ்.எஸ். கணக்கில் நிலவிய எண்ணம் இப்போது குறிப்பாக கருநாடக மாநில தேர்தலுக்குப் பிறகு தலைகீழாக மாறி வருகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கசிந்துருகி
‘கிளிசரின்’ கண்ணீர் விடுகிறார்கள்!
வெற்றி பெற முயற்சிகள் செய்யும் வகையாக பல புதிய உத்திகள், வியூகங்களை வகுக்கவேண்டிய கட் டாயம் ஆர்.எஸ்.எஸிற்கும், பா.ஜ.க. தேர்தல் குழுவினருக் கும், பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்களுக்கும் உண்டாகிவிட்டது – நாளுக்கு நாள் பளிச்சென தெரிய ஆரம்பித்து வருகிறது!
ஆர்.எஸ்.எஸ். தலைவரும், அதன் செயலாளரும் இப்போதுதான் சமூகநீதி – இட ஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட கீழ்ஜாதி மக்களுக்காகக் கசிந்துருகி, ‘கிளிசரின்’ கண்ணீர் விடும் காட்சி நாள்தோறும் அரங்கேறுகிறது!
2000 ஆண்டுகளாக ஜாதியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களைப்பற்றி திடீர்க் கவலை அவர்களுக்கு வந்து விட்டது.
சமூகநீதியை ஒழிக்கப் போர்க்கொடி தூக்கியவர்கள் – இன்று சமூகநீதி பேசுகிறர்கள்!
இதே தலைவர்கள்தான், கட்சிதான் மண்டல் கமிசன் பரிந்துரைகளில் முழுவதும்கூட அல்ல – பாதி, ஒன்றிய அரசு பணிகளில் – வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை – சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்தியதற்காகவே பத்தே மாதங்களில் அவரது ஆட்சியைக் கவிழ்த்ததோடு, மண்டலுக்குப் பதில் இதோ கமண்டலைத் தூக்குகிறோம் என்று ர(த்)த யாத்திரை நடத்தி, அந்த சமூகநீதியை ஒழிக்கப் போர்க் கொடி தூக்கிய வர்கள்.
இன்று சமூகநீதி பேசுகிறார்கள்.
ஜாதி – தீண்டாமைபற்றி மிகவும் கண்டனக் குரல் எழுப்புவது என்ற பாசாங்குத்தனத்தை மிகப் பக்குவ மாகச் செய்து, அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்கள் கண்ணில் மண்ணைத் தூவி, அவர்கள் கையில் உள்ள வாக்கினைப் பறிக்க முயலுகின்றனர்.
என்னே விசித்திர விந்தை!
புதிய அறிவிப்புத் தூண்டிலைத் தூக்கி
அரசியல் மீன் பிடிக்க திட்டமிடுகிறார்கள்!
வரும் தெலங்கானா தேர்தலில் போட்டியே காங் கிரசுக்கும், பி.ஆர்.எஸ். கட்சிக்கும் இடையில்தான் – பா.ஜ.க.வுக்கு வாய்ப்பே இல்லை என்று செய்திகள் பரவலாக வரும் நிலையில், அங்கே தேர்தல் பிரச் சாரத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘நாங்கள் – பா.ஜ.க. வெற்றி பெற்றால், அடுத்து ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை முதலமைச்சராக்கு வோம்” என்று ஒரு புதிய அஸ்திர அறிவிப்புத் தூண் டிலைத் தூக்கி அரசியல் மீன் பிடிக்க திட்டமிட்டு அறிவித்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களிடையே, ஊடகத்தாரிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், ‘இந்தியா’ கூட்டணி வெற்றியை மய்யப்படுத்தி, நாடு தழுவிய பரப்புரையை மேற்கொண்டு வருபவருமான ராகுல் காந்தி அவர்கள், ‘‘உங்களில் எத்தனைப் பேர் எஸ்.சி., (ஆதிதிராவிடர்), எத்தனை பேர் எஸ்.டி., (பழங்குடியினர்), எத்தனை பேர் ஓ.பி.சி. (பிற்படுத்தப்பட்டோர்) கையை உயர்த்துங்கள்” என்று கேட்ட பின்,
ஒருவர்கூட கையை உயர்த்தாத நிலையில், சமூக அநீதி எப்படி இந்த பி.ஜே.பி. ஆட்சி அதிகார மய்யத்தில் கொடிகட்டிப் பறக்கிறது என்பதற்கு ஒரு புள்ளி விவரம் கூறி அசர வைத்துள்ளார்.
அரசின் 90 முக்கியத் துறை செயலாளர்களில் வெறும் மூன்றே மூன்று பேர்தான் பிற்படுத்தப்பட்டவர் (ஓ.பி.சி.) என்று கூறியுள்ளார்.
இதுதான் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் அரசின் சமூகநீதிக் கான செயல்பாடா? என்ற கேள்வியின் நியாயத்தை எவரே மறுக்க முடியும்!
பா.ஜ.க. தோல்வியிலிருந்து தப்பிக்க…
தேர்தலில் வெற்றி பெற எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய ஒடுக்கப்பட்டோர் ஓட்டுகள் தேவை என்பது இப்போது புரிவதால், ‘‘நாங்கள் வெற்றி பெற்றால் முதலமைச்சராக ஒரு பிற்படுத்தப்பட்டவரை தேர்வு செய்வோம்” என்று ‘புதிய வித்தை’ காட்டி, வரும் தோல்வியிலிருந்து தப்பிக்க, சமூகநீதி என்ற தெப்பத்தைத் தேடி, முகமூடியை அணிந்து, வேஷம் கட்டி வருகின் றனர். இதனைத் தெலங்கானா மக்கள் புரிந்து வைத் துள்ளனர். இந்த மாய்மாலம் ஒருபோதும் செல்லாது! செல்லவே, செல்லாது என்பது உறுதி!!
மக்கள் புரிந்து வருகின்றனர்!
சிறுபான்மையின மக்களும் உறுதியாக நின்று, மதவாத பி.ஜே.பி. ஆட்சிக்குப் பாடம் கற்பிப்பார்கள் என்பது கல்லின்மேல் எழுத்து!
கி.வீரமணி ,
தலைவர்,
திராவிடர் கழகம்|
28.10.2023