பாம்பென்றால்…
கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெரிய பெரிய கரையான் புற்றுகளில் பாம்புகள் தங்குவது வழக்கம். அப்படி பாம்பு தங்கும் புற்றைக் கோவிலாக மாற்றி வசூல் செய்யும் கூட்டம் உண்டு.
பெங்களூரு புறநகரில் பாம்பு தங்கும் மரத்தையும் கோவிலாக மாற்றி வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
ஆனேக்கல் தாலுகா, நாராயணபுரா கிராமத்தில் உள்ள ஆசிரமத்தின் முன்பாக இருக்கும் ஒரு மரத்தின் கிளையில் சமீபகாலமாக ஒரு பாம்பு வந்து ஓய்வெடுத்து வருகிறது. ஆனால் கடந்த 2 மாதங்களாக ஒரே மரத்தில், ஒரே கிளையில் வந்து தான் அந்த நாகப் பாம்பு ஓய்வெடுப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நாகப் பாம்பை நாராயணபுரா, அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கிராம மக்கள் வந்து பார்த்துச் செல்வதுடன், பக்தியுடன் வணங்கியும் செல்கிறார்களாம். இவ்வாறு மரத்தின் முன்பாகத் திரண்டு தரிசனம் செய்பவர்களை அந்த நாகப் பாம்பு சீண்டுவதில்லையாம். ஓய்வெடுத்து மட்டும் செல்கிறதாம்.
வெயில் அதிகமாக இருந்தால் கூட மரக்கிளையில் இருந்து செல்லாமல், அப்படியே அந்த பாம்பு இருக்குமாம்.
முந்தைய காலத்தில் ஆசிரமம் அருகே நாகதேவதை கோவில் இருந்திருக்கலாம் என்றும், அதனால் நாகப்பாம்பு அங்கு வந்து செல்வதாகவும், தினமும் ஒரே பாம்பு தான் வருகிறதா? வெவ்வேறு பாம்புகள் வருகின்றனவா? என்பதும் தெரியவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனராம்.
பொதுவாக ஊர்வன வெயில் காலங்களில் குளிர்நிறைந்த பகுதிகளில் தங்கிவிடும்; சில மரக்கிளைகளில் பட்டைகள் உரிந்து காணப்பட்டால் அந்த இடம் மென்மையாகி குளிர்ச்சியாக இருக்கும்; இதனால் அந்தப் பகுதியில் சுருண்டு படுத்துக்கொள்ளும். இரவு முழுவதும் உணவிற்காக அலைந்து திரிவதால், நன்கு தூங்குவதால், மக்கள் நடமாட்டத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாது. இந்த அறிவியலை புரிந்துகொள்ளாமல் முன்பு அங்கு நாகம்மா கோவில் நாகதேவதை கோவில், இருந்தது என்று மூடத்தனத்தைப் பரப்பி காசு பார்க்கின்றனர்.
இது சாணக்கியன் சொல்லிக் கொடுத்த தந்திரம்!
”பாம்பென்றால் படையும் நடுங்கும்” என்பார்கள். அந்தப் பயத்தின் காரணமாகவே பாம்பைக் கடவுளாகப் பாவிக்கும் புத்தி – இந்த 2023-லும் விட்டபாடில்லை!
– மயிலாடன்