ஆளுநர் ரவி குறித்து புகார் செய்ய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு

Viduthalai
4 Min Read

சென்னை, ஜன. 11- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிப் பதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க தி.மு.க. தரப்பில் முடிவெ டுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர்  டில்லி புறப்பட்டுச் சென்றனர்.

டில்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, தமிழ்நாடு ஆளுநர் குறித்து புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக குடியரசுத் தலை வரை சந்திக்க அவர்கள் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்க! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 11- திருவரங்கத்தில் உள்ள  பெரியார் சிலையை உடைக்க வேண்டும் எனப் பேசியமைக்கு  புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு 23 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்  ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன். பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். ஆனால்  5 மாதங்கள் ஆகியும் அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

நேற்று (10.1.2023) சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது , வழக்கை விசாரித்த நீதிமன்றம் “முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து  5 மாதங்கள் கடந்துவிட்டன. ஆகவே  கனல் கண்ணன் மீது 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார் நீதிபதி சந்திரசேகர் அவர்கள். வழக்குரைஞர் துரை.அருண் இவ்வழக்கில் ஆஜரானார்.

சென்னையில் ரகசியமாக உ.பி. அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு 

சென்னை, ஜன. 11- உத்தரப் பிரதேச அரசு சார்பாக சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) உதவியுடன் உ.பி. அரசு இந்த மாநாட்டை நடத்தியுள்ளது. இம்மாநாட்டில் 500 தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர். ரூ.10,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுவாக, ஒரு மாநிலத்தில் பெரிய அளவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்போது, அது குறித்து அம்மாநில ஊடகங்களுக்கு தகவல் அளிப்பது வழக்கம். ஆனால், உ.பி. அரசால் நடத்தப்பட்ட இந்த மாநாடு தொடர்பாக பெரும்பாலான ஊடகங்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. ரகசியமாகவே இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

உ.பி.யில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததையடுத்து அம்மாநிலத்தில் தொழில் முன்னேற்ற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இறங்கியுள்ளார். இதன் பகுதியாக, வரும் பிப்ரவரி 10, 11 மற்றும் 12 தேதிகளில் உ.பி. தலைநகர் லக்னோவில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் உ.பி. அரசு முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்தி உள்ளது. வரும் ஆண்டுகளில் உ.பி.யில் ரூ.50,000 கோடி அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகள் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் முக்கியமான மாநிலங்களிலிருந்து முதலீடுகளை ஈர்க்க அந்தந்த மாநிலங்களில் பெரிய அளவில் முதலீட்டாளர்கள் மாநாட்டை உ.பி. அரசு நடத்தி வருகிறது.

சென்னை மாநாடு: பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் பன்னாட்டு மாநாட்டை முன்னிட்டு உ.பி. அரசு சென்னையில் தேசிய வர்த்தக அமைப்பான ஃபிக்கி உதவியுடன் முதலீட்டாளர்கள் மாநாட்டை கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தியது. இம்மாநாட்டில் தமிழ்நாட்டின் சிறு, குறு தொழிமுனைவோர்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் என 500 பேர் கலந்து கொண்டனர்.

உ.பி. நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா, சமூகநலத்துறை இணை அமைச்சர் அசிம் அருண், சிறு, குறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் அமித் பிரசாத், தொழில்துறை செயலர் அணில் சாகர் ஆகியோர் இம்மாநாட்டை உ.பி. அரசு சார்பாக நடத்தினர். இவர்களுடன் உ.பி.யில் அய்ஏஎஸ் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்களான மின்வாரியத் துறையின் முதன்மைச் செயலர் எம்.தேவராஜ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் சி.செந்தில்பாண்டியன் ஆகிய இருவரும் முக்கியப் பங்காற்றினர்.

‘ஒன்றிய அரசு’ என்று அழைக்கக் கூடாதாம்! ஆளுநர் அருள்வாக்கு

சென்னை, ஜன. 11- ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது” என்று குடிமைப் பணித் தேர்வர்கள் உடனான கலந்துரையாடலில் மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித் துள்ளார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘எண்ணித் துணிக’ எனும் தலைப்பில், இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 150 பேருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுநர், “ஒரு திறமை வாய்ந்த குடிமைப் பணி அதிகாரி, எந்தவொரு விசயத்தையும் உண்மையின் அடிப்படையில் அணுக வேண்டும். முன்கூட்டியே தீர்மானம் செய்யாமலும், சமூக செயற்பாட்டாளர் போல சிந்திக்காமலும் இருக்க வேண்டும்.

உங்களது முடிவுகளானது மக்கள் நேரடியாகவும், எளிமையாகவும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். அதுபோன்ற மனநிலையுடன் குடிமைப் பணித் தேர்வு களுக்கு தயாராக வேண்டும். அரசின் சட்டங்களை எப்போதும் விமர்சனம் செய்யக் கூடாது. எந்தச் சட்டமும் நூறு சதவீதம் முழுமையானது அல்ல என்பது உண்மை. மேலும், ஒரு விஷயத்தை பிரபலமானவர் கூறுவதால் அது உண்மையாகிவிடாது.

‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பதில் தவறு இல்லை. ஆனால், அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது. தனி நாகாலாந்து கேட்கும் நாகா குழுக்களின் எண்ணம் என்பது நாகா இனத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

முன்னதாக, அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழ்நாடு’ என்று அழைப்பதைவிட ‘தமிழகம்’ என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையானது. ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்றே தமிழ்நாடு அரசு கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *