தருமபுரி மாவட்டத்தில் உள்ள மூக்கணூர்பட்டி வே. இராமசாமி அவர்கள் மாவட்டத் தலைவராக இருந்து அம்மாவட்டத்தில் இயக்க வளர்ச்சியில் பெரிதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பல போராட்டங்களில் ஈடுபட்டு பல முறை சிறைக்குச் செல்லத் தயங்கா கொள்கை வீரர். அப்படிப்பட்டவரின் அன்பு மகன் கவிஞர் இரா. கண்ணிமை – பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை – ‘புரட்சிக் கவிஞர் பரம்பரைக் கவிஞராக’ தன்னை செதுக்கிக் கொண்டு, ‘குயில்’ திங்கள் ஏட்டை தொடர்ந்து – பொருள் நட்டத்திலும் கருப்பு மெழுகுவத்தியாய் தன்னை ஆக்கி நடத்தி, இளங் கவிஞர்களை, எழுத்தாளர்களை ஊற்று போல உருவாக்கி உலக வெளிச்சத்தைப் பார்க்கச் செய்யும் வள்ளல் கவிஞர் இவர்!
அவரது தந்தை போலவே மென்மையாகவும், பண்போடும், பாசத்தோடும் எவரிடமும் பழகும் கருஞ்சட்டைக் கவிஞர்!
அவர் நம்மை சந்தித்தபோது வழக்கம் போல் ‘குயில்’ கவிதை ஏட்டையும், மேற்காட்டிய தலைப்பில் உள்ள ஒரு புத்தகத்தையும் தந்தார். நேர நெருக்கடி, அன்றாடப் பணிகள் காரணமாக காலத் தடை என்றாலும் படித்தேன் – சுவைத்தேன் – அதில் உள்ள 59 கட்டுரைகளும் கவிஞர் கண்ணிமை நடத்தி வரும் ‘குயில் இதழில் கடைசிப் பக்கத்தில் இடம் பெற்ற உரை வீச்சுக்கள் தாம்.
சிந்தனை முத்துக்கள் – சிறப்பான அறிவு விருந்து அதில் 14ஆம் கட்டுரை “யார் தலைவர்?!” என்ற தலைப்பில் உள்ள ஒரு கட்டுரை.
“தலைப்பைக் கண்டதும் வியக்காதீர்கள்! உண்மைத் தலைவர் யார்? என்று ஆராய வேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழகம் அந்த அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது! அறிவாளிகள் நிறைந்த தமிழ்நாட்டிலா இந்த அறியாமை இருக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆம், பத்துபேருக்கு ஒரு தலைவர் தமிழகத்தில்! நாம் – தமிழர் – நமக்கென ஒரே தலைவர் தானே – இருக்க முடியும். அவர் யார்?
தலைவராக வருகிறவர்களுக்கு தங்களிடத்தில் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தன்னைப் பின்பற்றுபவர்களிடம் நம்பிக்கை, தன்னுடைய கொள்கைகளில் – குறிக்கோளில் நம்பிக்கை. இந்த மூன்றும் யாரிடம் இருக்கிறதோ அந்தத் தலைவரைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தகுதி வாய்ந்த தலைவரை உணர்ந்த மக்களாகவும் இருக்க முடியும்.
ஒரு தலைவருக்கு இன்னும் சில தன்மைகளும் இருக்க வேண்டும் என்று ‘மில்லர்’ ‘நாபே’ என்னும் மேல்நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்.
“தன்னடக்கம், செயல்படும் திறன், போராடும் குணம், பகுத்துப் பார்க்கும் அறிவு, எப்பொழுதும் மகிழ்ச்சி, விடாமுயற்சி, மிகுந்த திறமை, அளவுக்குட்பட்ட தைரியம், அழியாத நம்பிக்கை, நேர்மை, கொள்கை உறுதி, காலத்திற்கேற்ற அரசியல் அறிவு, உண்மையைக் கடைப்பிடித்தல், ஒழுக்கமாக நடந்து கொள்ளுதல், எளிய வாழ்க்கை, தொண்டு செய்யும் ஆர்வம்.”
இவைகள் தலைவருக்கு இருக்க வேண்டிய தனித் தன்மைகள்.
ஒரு குறிக்கோளில் பற்றுடையவர்களையும், அதனை ஊக்கத்தோடு பின்பற்றக் கூடியவர் களையும் கொண்ட ஒரு கூட்டத்தை கட்டுப் படுத்தும் ஆற்றல்.
அவ்வப்போது ஏற்படுகின்ற அரசியல் நிலைமைகளுக்குத் தக்கவாறு நேர்மையாக நடந்து கொள்ளும் திறமை, சிக்கல்களுக்கு முடிவினைத் தேட, வெறும் பேச்சை விட்டுவிட்டு செயலில் இறங்கும் ஊக்கம்.
தன்னைப் பின்பற்றுவோர் பல பிரிவினராகப் பிரிந்திருந்தால் அவர்களை ஒன்றுபடுத்தி அவர்கட்குப் பிரதிநிதியாக இருந்து பேசித் திட்டம் வகுத்துக் கொடுத்து அனைவருடைய வலிமை யையும் ஒன்று சேர்த்து போராடும் ஆற்றல்.
ஆக்கப் பணிகளில் பற்றுதல் கொண்டு முதலில் தானே ஒரு செயலை செய்து காட்டும் துணிவு. தன்னைப் பின்பற்றுவோருக்கு ஒழுக் கமும், நேர்மையும் எடுத்துக்காட்ட, தான் ஒழுக்கம், நேர்மை ஆகிய இரண்டையும் மதித்து நடக்கும் மாண்பு. எடுத்துக்கொண்ட செயலை இறுதி வரையில் கொண்டு செலுத்தும் திறமை, இத்தகைய இன்றியமையாத தகுதிகள் தலைவராக இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்றுள்ள தலைவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு, மேலே குறிப் பிட்டுள்ள தகுதிகளுக்கும் செயல்படும் திறமைக்கும் ஏற்றவர் யார் என்பதை ஆராய்ந்து அத் தகுதிகள் அனைத்துக்கும் ஒத்து வருகின்ற தலைவர் – யார்? என்பதைக் கண்டறிந்து கொள்ளாத வரையில் தமிழகத்தில் தலைவர்கள் பட்டியல் நீண்டு கொண்டுதான் இருக்கும்.”
தற்காலத்தில் தேவைப்படும் கேள்வி – சரியான பதிலும்கூட கிடைத்துள்ளது! அதனை அப்படியே தருகிறோம் – படித்துப் பாருங்கள் – இடித்து எவரிடமாவது பேச வேண்டுமானாலும் பேசுங்கள்.
(முன்பு – சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் டார்ப்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம் எம்.ஏ. அவர்கள் நடத்திய ‘தோழன்’ வார ஏட்டில் அக்காலத்து மாணவப் பருவத்தில் நான் எழுதிய கட்டுரையை நினைவூட்டுவதாக இருக்கிறது. அருமையான வரைவுரை இது.)
தலைவர் என்பவர், தன்னை முதல் தொண் டராகக் கருதி செயல்படும் தகுதி பெற்றவரே – நம் கருத்தில்!