தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரை
சென்னை, ஜன.19 சென்னை புத்தகச் சந்தை விழா அரங்கில் நூல் வெளியீட்டு விழா கடந்த 17.1.2023 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் பங் கேற்று பாராட்டுரை, வாழ்த்துரை, கருத்துரை வழங்கினார்.
விவரம் வருமாறு: 17.01.2023 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகைத் தந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வனின் நெறியாள்கையுடன் நிகழ்வு தொடங்கியது.
சித்திரப்புத்திரன் கட்டுரைகள் தொகுதி 1, 2, சிங்கப் பூரில் தமிழர் தலைவர் தொகுதி 2, வடசென்னையில் வரலாற்று நாயகர்கள், காவிகளுக்கு கறுப்பின் பதிலடி ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார்!
இந்நிகழ்விற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை வகித்தார். அவரது தலைமை உரையில், பெரியார் அவர்கள் தன்னை அறிமுகம் செய்த போது நான் ஓர் எழுத்தாளன் அல்ல; பேச்சாளன் அல்ல; கருத்தாளன் என்றார் என் றும், பெரியார் அவ்வாறு கூறினாலும் கூட பெரியாரை விட சிறந்த எழுத்தாளர், சிறந்த எழுத்துக்களை மக்க ளிடம் கொண்டு சேர்த்தவர்கள் யாரும் இல்லை என்றும், அதனால் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தமிழ் நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார்’ என்றார் என்பதை விளக்கி, பெரியார் அவர்கள் புனைப்பெயரில் எழுதும் புதுயுகத்தை கண்டவர் என்றும், அவ்வாறு பெரியார் பயன்படுத்திய புனைப் பெயர்களை வரிசையாக பட்டிய லிட்டார். சித்திரபுத்திரன் கட்டுரைகள் வாயிலாக, தமி ழுக்குச் செய்யப்படும் துரோகங்களையும், ஹிந்தி ஆதிக் கத்தை பற்றியும் பெரியார் எழுதியவற்றை விளக்கி, ராஜாஜி அவர்கள் இந்தியை புகுத்துவதற்கு காரணம், படிப்படியாக சமஸ்கிருதத்தை புகுத்துதலே என்று அவர் சமஸ்கிருதத்தை பற்றி பேசியதையும், தந்தை பெரியார் அவர்கள் ஹிந்தி மொழி ஆதிக்கத்தை ஏன் எதிர்க்கி றேன் என்று சொன்னவற்றையெல்லாம் விளக்கி நூல்களைப் பற்றி அறிமுகம் செய்து நிறைவு செய்தார்.
பல சிந்தனையாளர்களைப் பெற்ற வடசென்னை!
வடசென்னையில் வரலாற்று நாயகர்கள் என்ற நூலினை பெற்று அறிமுக உரை நிகழ்த்திய மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள்; வடசென்னையை பற்றி பேச தனக்கு உரிமை இருப்பதாகவும், வடசென்னையில் தேர்தலில் நின்று, தான் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றதையும் நினைவுகூர்ந்து, இந்த நூல் திருவல்லிக்கேணி, மயிலாப் பூர்பற்றி அல்ல; சிந்தனையாளர்கள், மக்களுக்காக பாடு பட்டவர்கள், போராட்ட களம் கண்டவர்கள், சர்.பிட்டி தியாகராயர் போன்ற நீதி கட்சி தலைவர்கள் ஆற்றிய சமூகப் பணிகள் ஆகியவை வடசென்னையையும் சுற்றி அமைந்திருக்கிறது. புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுக் குறிப்புகள் பற்றி விளக்கினார். மக்களுக் காக,மக்கள் சமத்துவத்திற் காக போராடிய பலர் வட சென்னையில் வாழ்ந்திருக் கிறார்கள் என்பதை பதிவு செய்தார்.
பெரியாரின் எழுத்துகள்
இன்று நிச்சயம் தேவைப்படுகிறது!
சித்திரபுத்திரன் கட்டுரைகள் இரண்டு தொகுதி களையும் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்திய எழுத்தாளர் இமையம் அவர்கள் தனது உரையில்; நான் பெரியாரை படிக்க வேண்டும் என்று விரும்பினேன். காரணம், நான் படிக்க வேண்டும், நான் சிந்திக்க வேண்டும், நான் எழுத வேண்டும் என்று நினைத்தவர் பெரியார். நான் யாரென்று தெரியாத ஆனால், நானும் எழுத வேண்டும் என்று சிந்தித்த பெரியாரை பற்றி, அவரது நூலை அறிமுகம் செய்து பேசுவது என்பது தனக்கு கிட்டிய வாய்ப்பு என்றும், நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எங்கிருந்து யாரிடமிருந்து என்பதை இந்த மேடையில் அமர்ந்திருக்கக் கூடிய, 90 வயதிலும் எழுதிக் கொண்டிருக்ககும் ஆசிரியர் தான் நமக்கு காண் பிக்கிறார் என்றார். தொடர்ந்து, பொதுவாக குடும்பத்தில் சித்திரகுப்தன் உன் தலையெழுத்தை எழுதுகிறான் என்று சொல்வதையும், நாம் எப்போது சாவோம் என்பதை சித்திரகுப்தன் முடிவு செய்வார் என்பார்கள். ஆனால், இந்த சித்திரபுத்திரன் தொகுதிகளில் முதல் தொகுதியில் 62 கட்டுரைகளும், அடுத்த தொகுதியில் 123 கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கிறது என்பதைக் கூறி, அது அனைத்துமே உரையாடலாக நிகழ்த்தப்பட்டி ருக்கிறது என்றார். அவர் கொடுத்துள்ள பதில்கள் நாம் படிக்க வேண்டிய பாடம் என்றும், சமூகத்தில் ஏற் கெனவே உள்ள கற்பிதங்களை உடைப்பதே பெரியாரின் மிகப்பெரிய வேலையாக அமைந்தது என்றார். இந்த நூலை படித்த போது தந்தை பெரியார் ஏன் உண்மை யாகவே பகுத்தறிவுப் பகலவன் என்பதை தான் உணர்ந் ததாகவும், சித்திரப்புத்திரன் கட்டுரைகள் பலவற்றை எடுத்துக் கூறி குறிப்பாக பள்ளிக்கூடத்தில் புராணப் பாடம், யாகத்தின் ரகசியம், வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம் போன்ற கட்டுரைகளை எல்லாம் சுவையாக விளக்கி, இவற்றையெல்லாம் தொகுத்து பள்ளி மாணவர் இடத்தில் கொண்டு போய் நிச்சயம் சேர்க்க வேண்டும் என்று அவருடைய விருப்பத்தை தெரிவித்து, தந்தை பெரியார் வாழ்ந்த காலகட்டத்தில் அவருடைய கருத்துகள் தேவைப்பட்டதோ, இல் லையோ இந்த காலகட்டத்தில் தந்தை பெரியாரின் எழுத் துகள் கட்டாயம் தேவைப்படுகிறது என்று நிறைவு செய்தார்.
மதுரையில் தமிழர் தலைவர்
நூல் எழுதும் ஆசை!
சிங்கப்பூரில் தமிழர் தலைவர் தொகுதி இரண்டினை பெற்று, நூலினை அறிமுகம் செய்த பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள்; தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவில் டாக்டர் கலைஞர் அவர்கள் சிங்கப்பூரில் தமிழர் தலைவர் தொகுதி ஒன்றை வெளியிட்டதை நினைவு கூர்ந்து, 90 ஆவது பிறந்த நாளில் இந்த நூல் வெளியிடப்பட்டது என்றும், அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முகவுரை அணிந் துரைகளை எல்லாம் விளக்கி, 2009 தொடங்கி 2019 வரை ஏழு ஆண்டுகளில் சிங்கப்பூரில் தமிழர் தலைவர் அவர்கள் பயணித்த நேரத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை இந்த நூல் பேசுவதாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிங்கப்பூர் பயணம் பற்றி எழுதிய நூலா சிரியர் இலியாஸ் அவர்கள் 14 வயதில் இலக்கியப் பணியை ஆரம்பித்தவர் என்றும், அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை எல்லாம் விவரித்தார். 90 வயதிலும் பெரியாரைப் படித்துக் கொண்டிருக்கும் பெரியாரின் வாழ்நாள் மாணவர் ஆசிரியர் என்றும், ஆசிரியர் பெயரில் இந்த புத்தகம் அமைந்திருந்தாலும் புத்தகத்தில் உள்ளே சென்று படித்தால் பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஏராளமான செய்திகள் இருக்கிறது என்றார். இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் பல புத்தகங்களை, குறிப்பாக ,ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் போன்றவற்றை படிக்கக்கூடிய வாய்ப் பினை பெறுவோம் என்றும், இதை படிக்கின்ற போது சிங்கப்பூரில் தமிழர் தலைவருடைய பயணங்களை தொகுத்து இவ்வளவு செய்திகளை கொடுத்திருப்பதை போல், “மதுரையில் தமிழர் தலைவர்” என்று தலைவர் அவர்கள் சந்தித்தவர்களை பற்றியும், மதுரையில் உள்ள செயல் வீரர்களை பற்றியும், ஆசிரியருக்கும் அவர்களுக் குமான உறவுகளைப் பற்றியும் மதுரையில் தமிழர் தலைவர் என்ற நூலை கொண்டு வர வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்து, அதற்கான முயற்சியை முனைப்போடு செய்வோம் என்று நிறைவு செய்தார்.
புத்தகத்தை படித்தவர் அல்ல;
மக்களை படித்தவர் பெரியார்!
நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய ஆசிரியர் அவர்கள் தனது உரையில்; யாரை அழுத்தி வைத்தனரோ, யாரை தகுதியற்றவர்கள் என்று சொன்னார்களோ அவர்கள் இன்றைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்பது தனக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை தருகிறது என்று எழுத்தாளர் இமையம் அவர்களையும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை எல்லாம் அறி முகம் செய்து, மூன்றாவதாக வெளியிடப்பட்ட வடசென் னையில் வரலாற்று நாயகர்கள் என்ற நூலை பற்றி பேசுகிறபோது,
தனது உயிருக்கு குறி வைத்த மூன்றாவது இடமாக வட சென்னை இருந்தது என்ற நினைவுகளை நினைவு கூர்ந்து, எப்போதும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு இருக்கும் மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய காவிகளுக்கு கறுப்பின் பதிலடி என்ற நூலைப் பற்றிய அறிமுகம் செய்து, சிங்கப்பூரில் தமிழர் தலைவர் என்ற நூலைப் பற்றி பேசுகிறபோது சிங்கப்பூர் சென்றால் பெற்றுக் கொண்டு வர வேண்டும், நிறைய பெற்றுக் கொண்டு வர வேண்டும் என்பார்கள். ஆனால் நாம் கற்றுக் கொண்டு வரவே சிங்கப்பூர் செல்கிறோம் என்றார். மேலும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் வேறுபாடுகளை எல்லாம் விவரித்தார். இன்றைக்கு இத்தனை நூல்கள் வெளிவருகிறது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் படி, படி என்று ஏற்படுத்திய விளைவு தான் என்றார். தந்தை பெரியார் பிறந்த காலகட்டத்தில் படித்த வர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடாக இருந்தது. பெரியார் மறைந்த போது 1973இல் இந்தியா முழுவதும் படித்தவர்களின் விழுக்காடு 65 விழுக்காடாக மாறியது என்றும், தந்தை பெரியார் எப்படி ஒரு சிந்தனை களஞ்சியமாக, ஒப்பற்ற சுதந்திர சிந்தனையாளராக வாழ்ந்தார் என்பதை விவரித்தார். தந்தை பெரியார் புத்தகத்தை படித்தவர் அல்ல; மக்களை படித்தவர் என்றும், இளை யவர்களிடம் இன்று அதிகம் புழங்கக்கூடிய தலைவர் தந்தை பெரியாராக இருக்கிறார் என்றார். புத்தியை பயன்படுத்துகிறவனே புத்தன் என்று பெரியார் சொன் னதற்கான காரணங்களை விளக்கி அரசியலமைப்பு சட்டத்தின்படி அடிப்படை கடமைகள் (Article 51A(h)) பகுதியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்ப்பது, மனித நேயத்தை வளர்ப்பது ஆகியவை எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தது என்பதை பல்வேறு எடுத்துக்காட்டு களோடு விளக்கினார். தொடர்ந்து பெரியார் இப்போதும், எப்போதும் தேவைப்படுகிறார், பெரியாருக்காக அல்ல; உங்களுக்காக என்று கூறி நூலாசிரியர்கள் அனை வரையும் பாராட்டி நிறைவு செய்தார்.
2032-இல் சிங்கப்பூரில் தமிழர் தலைவர் தொகுதி-3
நிகழ்வில் நன்றியுரை வழங்கிய சிங்கப்பூரில் தமிழர் தலைவர் நூலின் நூலாசிரியர் இலியாஸ் அவர்கள்; பெரியார் வருகைக்கு முன்பே பெரியாருடைய கொள்கைகள் எப்படி சிங்கப்பூரில் பரவத் தொடங்கியது என்பதையும், “தமிழர் சீர்திருத்த சங்கம்” என்பது பெரியாரின் வருகைக்குப் பின்னர் தோற்றுவிக்கப்பட்டது என்ற வரலாற்று செய்திகளை நினைவுக்கூர்ந்து, 90 வயதில் 80 வயது பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரும், 88 ஆண்டுக்கால விடுதலையின் 60 ஆண்டுக்கால ஆசிரியருமான, ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே இயக்கம், ஒரே கொடி என்று எண்பது ஆண்டுகாலமாக ஆசிரியர் பயணிக்கிறார் என்பதை நெகிழ்ந்து பாராட்டி, 2005 ஆம் ஆண்டு ஆசிரியர் அவர்கள் தான் சிங்கப் பூரில் சந்தித்த ஏராளமானவர்களை பற்றி நினைவு கூர்ந்த போது, இதைத் தான் ஒரு நூலாகக் கொண்டு வருகிறேன் என்று ஆசிரியரிடம் ஒப்புதல் கேட்டதையும், அதற்கு அவர் இசைவு தெரிவித்து இன்று இரண்டு தொகுதிகள் வந்திருக்கிறது என்பதை கூறி 2032-இல் ஆசிரியரின் நூற்றாண்டு விழாவின் போது, சிங்கப்பூரில் தமிழர் தலைவர் தொகுதி மூன்றையும் வெளியிடுவதற்கு ஆசிரியர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறி வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தொகுப்பு: சே.மெ.மதிவதனி