(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா? (2)
நேற்றைய (28.10.2023) தொடர்ச்சி….
எடுத்துக்காட்டு; ஒன்று
ஓ உலகம் போற்றும் இந்திரனே! ஸீஷ் ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது படை களையும் உன் தேர்ச் சக்கரத்துக்கு இரையாக்கிக் கொன்று ஆரியர்களுக்கு உதவி புரிந்தாய். (ரிக்வேதம் மண்டலம் 1 மந்திரம் 53, ஸ்லோகம் 9, அதர்வணவேதம் காண்டம் XX மந்திரம் 21, ஸ்லோகம் 9)
– – – – –
எடுத்துக்காட்டு: இரண்டு
ஓ இந்திரனே! பிப்ரூ, மிருஷய அசுர அரசர்களை ஆரிய மன்னனான விதாதின் புத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப்படுத்தினாய்! அய்ம்பதாயிரம் கறுப்புப் படைகளை செயித்தாய். முதுமை உயிரை மாய்ப் பதுபோல் அனேக கோட்டைகளையும் பாழாக்கினாய்.
(ரிக்வேதம் மண்டலம் IV மந்திரம் 16, ஸ்லோகம் 13)
– – – – –
எடுத்துக்காட்டு: மூன்று
ஆரிய அரசன் தாவிதியின் நன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திர சக்தியினால், ஓ இந்திரனே எமனுலகு அனுப்பினாய்!
இப்படி ஏராளம் உண்டு. (ரிக்வேதம் மண்டலம் IV மந்திரம் 3 ஸ்லோகம் 21)
சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிடர் நாகரி கமே என்று தொல்லியல் ஆய்வாளர்கள் அய்ராவதம் மகாதேவன் முதல் பலரும் அறுதியிட்டுள்ளனர். (தினமணி, 2.5.2006)
இந்நிலையில் இந்தியாவின் பண்டைய நாகரிக மானது – முதல் நாகரிகமானது சிந்துவெளி நாகரிகம் ஆகும்.
அந்த நாகரிகத்தை ஆரியர்கள் எப்படியெல்லாம் சிதைத்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு.
சிந்துசமவெளி திராவிடர்கள் அணைக்கட்டுகளைக் கட்டி விவசாயம் உள்ளிட்ட தொழில்களைச் செய்தனர்.
அணையைக் காவல் காத்த விருத்திரன் என்ப வனை இந்திரன் என்னும் ஆரியத் தலைவன் கொன்று அணையை திறந்துவிட்டான் என்கிறது ரிக்வேதம்.
(பி.இராமநாதன், எம்.ஏ, பி.எல், எழுதிய “சிந்து வெளி நாகரிகத்தை ஆரியர் சிதைத்தது எவ்வாறு?” செந்தமிழ்ச்செல்வி 1986 மார்ச்) எனத் தனிக் கட்டு ரையே தீட்டியுள்ளார்.
தந்தை பெரியார் 1972இல் (9.2.1972) ‘விடுதலை’யில் எழுதிய தலையங்கம் ஒன்றில் ஆரியர்களின் நிலை குறித்துத் தெற்றென விளக்கும் கருத்து ஆராய்ச்சி அறிஞர்களாலேயே மறுக்க இயலாததாக உள்ளது.
இந்தியாவில் ஆரியர்கள் நுழைந்த காலம் காட்டு மிராண்டிக் காலம் என்றபோதிலும் திராவிடர்களைவிட ஆரியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்துள்ளனர் என்பது அவர்களுடைய கற்பனைக் கருத்துகள், புனைந்த கதைகள், பின்னர் அவர்களைத் தழுவிவந்த நூல்களின் அடிப்படையில் இருந்துள்ளது என்று தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.
அதேவேளையில் திராவிடர் நிலையை அறிய பவுத்த ஆட்சி, பவுத்தக் கருத்துகள் சான்றாக விளங்கு கின்றன எனக் கூறுகிறார்.
இராம-இராவணப் போரைத் தந்தை பெரியார் ஆரியர் – திராவிடர் போர் எனக் காட்டுகிறார்.
இதற்கு எடுத்துக்காட்டாக இராவணன் பார்ப் பனர்கள் செய்த வேள்வியை, உயிர்க் கொலையைக் கொலைச் செயல்களைத் தடுத்தமையால்தான் என்று அவர்கள் குற்றம் சாட்டியிருப்பதை எடுத்துக்காட்டு கிறார்.
ஆரியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதனைப் பொருத்தமாக தந்தை பெரியார் எடுத்துக் கூறுகிறார்.
“அவர்கள் வாழ்ந்த தன்மை அக்காலங்களில் காட்டுமிராண்டித் தன்மையதாய் இருந்தது என்பதற்கு அவர்கள் எழுதிய உலக சிருஷ்டி முறைகள். அவர்கள் குறிப்பிடும் காலங்கள், அக்காலத் தேவர்கள், கடவுளர்கள், அவர்களது யாக முறைகள், புணர்ச்சி முறைகள், நீதி முறைகள் முதலியவைகளும் மற்றும் அவர்கள் கற்பித்துக்கொண்ட தேவர்கள், கடவுளர்கள், ரிஷிகள் முதலியவர்களின் பிறப்பு முறை, செய்கை முறை, ஆயுள் முறை, வாழ்க்கை முறை, நீதிமுறை, புணர்ச்சி முறை முதலியவைகளில் எது – இன்றைக்கு அவர்களாலேயே ஒப்புக்கொள்ளத் தக்கதாய் மனிதத் தன்மையுடையதாய் நடப்புக்கு ஏற்றதாய் இருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.
இறுதியாகப் பெரியார் தம் பாணியிலேயே “மனிதப் பிறப்பு எப்படியோ நாசமாய்ப் போனாலும் இவர்கள் கூறும் கடவுள்கள் – கந்தன், கணபதி முதலியவர்கள் பிறப்பும் அவதாரக் கதைகளும், பகுத்தறிவுள்ள மனிதன் என்பவனால் சிந்திக்கத் தக்கவையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்” என்கிறார்.
டி.ஆர். சேஷையங்கார் என்பார் எழுதிய “DRAVIDIAN INDIA” எனும் ஆங்கில நூலை தமிழில் முனைவர் க. ப. அறவாணன் மொழிபெயர்த்துள்ளார்.
இந்நூல் ஆரியர்-திராவிடர் குறித்த பல அரிய செய்திகளை அளிக்கிறது. அதில் திராவிடக் கட்டடக் கலையைப் பாராட்டுகிறார். ஆரியருக்குக் கட்டடம் கட்டும் திறன் இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார். இந் தியப் பண்பாட்டில் திராவிட செல்வாக்குத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. சுமேரியரும் திராவிடரும் வெற்றிக்கு வகை செய்யும் குதிரைகள் போன்ற வேகமான விலங்குகளைப் பெற்றிருக்க வில்லை. பண்பாட்டில் நாகரிகத்தில் செல்வத்தில் ஆரியரைவிடப் பல மடங்கு உயர்ந்த நிலையில் வாழ்ந்து வந்தனர் என்கிறார்.
ஆரிய – திராவிட நாகரிகக் கலப்பிற்கான காரண மாகத் திராவிடர்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டு கிறார். இந்தியப் பூர்வீகக் குடிகள் ஆரிய நாகரிகத்திற்கே அடிப்படைப் பொருள்களை வழங்கினர் எனும் கென்னடி என்ற ஆரியர் கருத்தையும் சேஷயங்கார் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இத்தகு கருத்துகளின் அடிப்படையில் திராவிடர்- தமிழர் குறித்த தந்தை பெரியாரின் கருத்தைக் கவனிக்க வேண்டும்.
திராவிடரும் தமிழரும் ஒன்றே!
திராவிடர் -தமிழர் என்று சொல்லப்பட்டாலும் வார்த்தை வேறுபாடுகளே தவிர இன வேறு பாடல்ல. திராவிடத்திலிருந்து தமிழ் வந்தது என்றும், தமிழி லிருந்து திராவிடம் வந்தது என்றும் தமிழ் அறிஞர்கள் கூறுவதுண்டு.
தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை திரு இடம் என்பது தான் திராவிடம் என்று ஆயிற்று என்று கூறுகிறார்.
(17.11.1942 இல் திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து)
தமிழம் என்பது-த்ரமிள (ம்) த்ரவிட (ம்)- த்ராவிட (ம்) என்னும் முறையில் தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும் என்கிறார் திராவிட மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவணார் (ஒப்பியல் மொழி நூல் 2000 ஆண்டு பதிப்பு – பக்கம் 28)
இன்றைய பார்ப்பனர்கள் வேறு- ஆரியர்கள் வேறு என்று கூறுவோரும் உண்டு.
ஆனால் நடைமுறை உண்மைக்கு மாறான கருத்து இது.
மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் என்றே குறிப்பிடுகின்றனர். (ஆதாரம் ‘வேளாளர் நாகரிகம்’ நூலில் கட்டுரையின் தலைப்பு “ஆரியப் பார்ப்பனர் தமிழையும் சிவத்தையும் இகழ்தல்”)
“ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட் டங்கள்” என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் தனி நூலே எழுதியுள்ளார்.
தந்தை பெரியார் ஆச்சாரியாருக்கும் பதில் கூறும் விதமாக பொருத்தமான விளக்கம் தருகிறார்.
பார்ப்பனர்களை நான் ஆரியர் என்று குறிப்பிட்டு வருவதில் ஒரு பெரிய ஓட்டையைக் கண்டு பிடித்து விட்டதாகக் கருதிக் கொண்டு நமக்கு ஆச்சாரியார் (ராஜாஜி) முட்டாள் பட்டத்தையோ, பைத்தியகாரப் பட்டத்தையோ கட்டி வந்தாலும், ஆச்சாரியார் இந்த ஓட்டையை வேண்டுமென்றே கற்பித்து மக்களை மயக்கப் பேசுகிறார் என்றேதான் கருகிறேன்.
ஏனெனில், பார்ப்பனர் ஆரிய இனத்தின் கலப்பு என்று ஆச்சாரியார் கூறுவதை நாம் ஒப்புக்கொண் டாலும், திராவிடர்களும் ஓர் அளவுக்காவது அதுபோல் இருக்கலாம் என்றாலும் நாம் ஆரியர்- திராவிடர் (அல்லது தமிழர்) என்பதன் கருத்தும் உண்மையும் என்ன என்பதை பலமுறை வெளியாக்கி இருக்கிறோம்.
அதாவது, பார்ப்பனர் தமிழர் கலப்பு உடையவர்கள் ஆனாலும், ஆரிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறவர் கள் ஆவார்கள். அதுவும் தங்களை தங்கள் பிறவியை உயர்த்திக் கொள்ளவும் மற்றவர்களை தாழ்த்திக் கொள்ளுகிறவர்கள். இதனாலேயே இதற்காகவே அவர்கள் தங்களை மற்ற தமிழர்களிடமிருந்து வாழ்க்கை முறையில் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி வருகிறோம். எதுபோல் என்றால் நம் நாட்டில் உள்ள சட்டைக்காரர்கள் அல்லது ஆங்கிலோ இந்தியர்கள் என்கின்ற பிரிவார் அய்ரோப்பியர் அல் லர், வெள்ளைக்காரர்களும் அல்லர். தமிழர் பெண் களுக்கும் அய்ரோப்பிய ஆண்களுக்கும் பிறந்தவர் கள், அப்படி இருந்தாலும் அவர்கள் தகப்பனையே முக்கியமாய் கருதி, தாயை மறந்து அய்ரோப்பிய கலாச்சாரத்தை அதாவது பழக்க வழக்கம் மனப் பான்மை ஆகியவற்றைக் கையாண்டு தங்களை சட் டைக்காரர்-இந்தோ-அய்ரோப்பியன் என சொல்லிக் கொண்டு வெள்ளையன் காலத்தில் உயர் வாழ்வு, உயர்ந்த சலுகைப் பெற்று, துரை என்னும் பெயரால் தொப்பி போட்டுக்கொண்டு வாழ்ந்ததைப் போல், இந்தப் பார்ப்பனர்கள் தங்களை ஆரியப் பட்டமாகிய பிராமணர்கள், அய்யர், ஆச்சாரியார், ரிஷிகள் முதலிய பட்டத்தை வைத்துக்கொண்டு, ஆரிய சின்னமாகிய பூணூலை தரித்துக்கொண்டு ஆரிய உடை அணிந்து கொண்டு, ஆரிய பழக்க வழக்க நடப்பு மனப்பான்மை யைக் கொண்டு தனிச் சலுகை, தனி உரிமை முதலியவைகளை அனுபவித்துக்கொண்டு நம்மை தலையெடுக்க வொட்டாமல் செய்து வருகிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன். (“ராஜாஜியின் பேயாட்டம்” எனும் தலைப்பில் பெரியார்- விடுதலை 21.6.1956)
இதே கருத்தை அண்ணா அவர்களும் இவ்வாறு கூறுகிறார்.
தமிழர் என்றால் தமிழகத்திலே பிறந்து தமிழ் பேசும் அனைவரும் தமிழரே என்று. ஆனால் உள்ளூர உணர்வர். தமிழர் என்றால், தமிழ் மொழியினர் என்பது மட்டுமல்ல, மொழி, வழி, விழி மூன்றிலும் தமிழர்! நோக்கம் நெறி இரண்டும், (விழி, வழி) தமிழருக்குத் தனி! ஆரிய நோக்கம் வேறு, மார்க்கம் வேறு! தமிழர் எனில் தனி இனம் என்ற கருத்தே தவிர, மொழியிலே மட்டுமல்ல!
(-அறிஞர் அண்ணா விடுதலைப் போர் பக்கம்-30)
ஆரியராவது, திராவிடராவது என்று தங்களுக்கு நெருக்கடி வரும் பொழுது தட்டிக்கழிப்பார்கள். இது வெள்ளைக்காரன்கட்டி விட்ட கைச்சரக்கு என்று கேலி கூடப் பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் அவர் கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் முக்கியமானவரான கோல்வால்கர் – BUNCH OF THOUTHTS எனும் தமது நூலில் என்ன கூறுகிறார்?
“நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை. ஒரு வழியில் நாம் அநாதிகள். துவக்கம் இல்லாதவர்கள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; நாம் அறிவுத்திறம் கொண்டவர்கள், இயற்கையின் விதி களை அறிந்தவர்கள் நாம்தான். ஆன்மாவின் விதி களை அறிந்தவர்களும் நாம்தான். மனிதனுக்கு எவை எவைகள் நன்மை பயக்குமோ, அவை அவைகளை எல்லாம், மனித சமூகம் நன்மை பெறுவதற்கே வாழ்க்கைக்குக்கொண்டு வந்தது நாம்தான்! அப்போது நம்மைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாகத்தான் அறிவற்றவர்களாகவே இருந்த னர். எனவே தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதை யும் அவர்கள் சூட்டவில்லை. சில நேரங்களில்-நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத்திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்ற வர்கள் எல்லாம் மிலேச்சர்கள்.
(The origin of our People is unknown to scholors of history. In a way we are anadhi; without a beginning or we existed when there was no need of any name. We were the good, the enlightened people. We were the people who know about laws of nature the laws of spirit. We had brought into actual life almost every thing that was beneficial to maknkind. Then the rest of humanity was just bipeds and no distinctive name was given to us. Sometimes in trying to distinguish our people from others, we ere called the enlightened- the Aryas-and the rest the melacher.
– (From Bunch of Thoughts)
இன்றைய நிலை
டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் 2000-2001 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து “திரவிடியன் என்சைக்ளோபீடியா’ என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள ‘திரவிடியன்’ என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அமைச்சரை நோக்கி, நீங்கள் நாட்டுப்பண்ணிலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கிவிடுங்கள்; நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து ‘திராவிடம்’ என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றார். இது 2003 பிப்ரவரியில் வெளியான DLA News’ இல் காணப்படுகிறது.
ஒரு ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடியவர். ஒரு வரலாற்றுப் பெயரை மறைக்க விரும்புவதை இங்குக் கவனிக்க வேண்டும்.
“திராவிடியன் என் சைக்ளோ பீடியா” எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு வெளிவருவதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால் அதே நேரத்தில் ஆரியர்கள்தான் அறி வாளிகள், மற்றவர்கள் மிலேச்சர்கள் என்று அவர் சாந்திருக்கும் அமைப்பின் நிறுவனர் கோல்வால்கர் எழுதியுள்ளது குறித்து அவர்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி நீச்சல்தான்.
ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை திராவிடர்கள் என்றோ தமிழர் என்றோ சொல்லிக்கொள்வதில்லை. காரணம் அவர்களுக்கு அந்த உணர்வு என்பது கிடையாது.
எடுத்துக்காட்டாக தமிழ் செம்மொழியாக அங்கீ கரிக்கப்பட்ட நிலையயில்,
அது பற்றி ‘தினமலர்’ வாரமலர் (13.6.2009) என்ன எழுதிற்று? தமிழ்மொழியை செம்மொழி ஆக்கினால் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாதவர்களுக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கப் போகிறது பாருங்கள் என்று ஏகடியம் செய்தது கவனிக்கத்தகுந்ததாகும்.
“பெங்களுரூ திருவள்ளுவர் சிலை திறந்திட்டோமா, இல்லையா – அதுக்கப்புறம் டெல்டா பகுதிகளில் முப்போகம் விளையாதா என்ன?’
(தினமலர் 18.8.2009 பக்.10) என்று கிண்டல் செய்வதையும் கவனிக்க வேண்டும்)
யதார்த்தமான இந்த நிலையின் அடிப்படையில் தான் இந்த நாட்டில் திராவிடர் இயக்கம் தோன்றியது. பார்ப்பனர் எதிர்ப்பு என்பது ஒரு ஆதிக்கத்தை எதிர்த்தே பெரும்பாலான மக்களுக்காக உரிமைகளை, சுயமரியாதையை, சமத்துவத்தை நிலைநாட்டவே யாகும். அது ஒரு காலத்திலும் தனிப்பட்ட பார்ப்பன பகைமையாக இருந்ததில்லை.
தேர்தலில்கூட வெளிப்படையாக பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையில் களம் அமைவதை நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
இங்கு நடைபெறுவது வெறும் அரசியல் போராட் டமல்ல. ஆரியர்-திராவிடர் போராட்டமே என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு (‘விடுதலை’ 22.5.1967)
தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே தமிழ்நாட் டின் நிலை என்று சி.ராஜகோபாலச்சாரியார் (18.9.1953 அன்று சென்னை திருவொற்றியூரில் உரையாற்ற வில்லையா?
இந்தியத் தேசிய கீதத்திலும் ‘திராவிட’ இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ் வாழ்த்திலும் ‘ஆரியம்’ இடம்பெற்று இருக்கிறது. வரலாறு வரலாறு தானே – மறைக்க முடியுமா?