சென்னை, ஜன. 25- சென்னையில் உள்ள அரசு பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கட்டணத்திலேயே எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த மருத்துவமனையின் டீன் விமலாதெரிவித்தார்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, அவரது சமூக வலைதள பக்கத்தில், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், எக்ஸ்ரே எடுக்க ரூ.5-க்கு பதிலாக, ரூ.20 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு பல் மருத்துவமனை டீன் விமலா கூறும்போது, “பல் வலி காரணமாக சிகிச்சைக்கு வருவோருக்கு, நான்கு நிலைகளில், எக்ஸ்ரே தேவைப்படுகிறது. எனவே, ஒரு நிலைக்கு ரூ.5 என மொத்தம் ரூ.20 வசூலிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கும், நான்கு நிலைகளில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று எடுப்பதன் மூலமாக மீண்டும், மீண்டும் அவர்கள் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படுவதுடன், நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமமும் தவிர்க்கப்படும். மற்றபடி ரூ.5 கட்டணத்திலேயேதான் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.