சென்னை, ஜன. 26- வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான வருவாயை இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
சென்னை, நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், வணிக வரி அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது:
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில், கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் கிடைத்த வருவாயானது, இந்தாண்டு ஜன. 24ஆம் தேதிக்குள் பெறப்பட்டுள்ளது. வணிகவரித்துறையை பொறுத்தவரை ரூ.1,04,059 கோடியும், பதிவுத்துறையில் ரூ.13,631 .33 கோடி எனரூ.1,17,690.33 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல்பதிவுத்துறையில் சீர்திருத்தங் களால் வருவாய் கடந்தாண்டைவிட உயர்ந்துள்ளது.
வரி வருவாயை உயர்த்த கடந்த கால ஆட்சியில், ஜிஎஸ்டி வரம்புக்குள் 4,80 லட்சம் பேர் இருந்தனர். ஒன்றரை ஆண்டுகளில் 1.20லட்சம் பேரை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலமும், பல்வேறு புதிய நடைமுறைகளாலும் வணிக வரித்துறை வருவாய் உயர்ந்துள்ளது. அதுபோல், பதிவுத்துறை சீர்திருத்தங்களாலும் வருவாய் உயர்ந்துள்ளது.வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.366கோடி வசூலித்துள்ளோம். ரோந்துப்படை மூலம் ரூ.166 கோடி வசூலித்துள்ளோம். வரி ஏய்ப்பு செய்தவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.