அய்தராபாத்,ஜன.27- ஒன்றிய பாஜக அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசமைப்புச்சட்டத்துக்கு விரோ தமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாடு, கேரளா, டில்லி, மேற்கு வங்கம் வரிசையில் தெலங்கானாவில் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு அம்மாநிலத்தில் வெடித்துள்ளது. குடியரசு நாள் விழா ஆளுநர் மாளிகைக்குள் முடங்கிவிட்டது. அதிலும் அம்மாநில முதல மைச்சர் கே.சந்திரசேகரராவ் பங்கேற்கவில்லை.
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதலமைச்சர் கே.சந்திர சேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடரில் ஆளுநரை புறக் கணிப்பு, ஆளுநரின் விருந்தை முதலமைச்சர் புறக்கணிப்பது போன்ற தொடர்செயல்களால் மோதல் வலுவடைந்துள்ளது.
இந்நிலையில், ஆண்டுதோறும் செகந்திரா பாத்தில் உள்ள காவல்துறை பயிற்சி மைதானத் தில் மாநில அரசு ஏற்பாடு செய்யும் குடியரசு விழாவை இந்தாண்டு கரோனாவை காரணம் காட்டி தெலங்கானா அரசு ரத்து செய்வதாக அறிவித்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனை உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. ஆளுநரை தவிர்ப்பதற்காகவே விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அய்தராபாத் உயர்நீதிமன்றத்தில் குடியரசு விழாவை மாநில அரசு நடத்த வேண்டுமென்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நிதிபதிகள், மாநில அரசு குடியரசு நாள் விழாவை நடத்தியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், மாநில அரசுத் தரப்பில் குடியரசு விழா ஏற்பாடு செய்யப்படாததால், ஆளுநர் மாளிகையில் நேற்று (26.1.2023) குடியரசு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்காமல் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் புறக் கணித்தார்.