மேடை நாடகங்களின் நீட்சியாகத் தொடங்கிய தொலைக்காட்சித் தொடர்களைப் போல, திரைப்படங்களின் நீட்சியாக இணையவழித் தொடர்கள் பெருகிவருகின்றன. கையடக்கக் கருவிகளிலேயே தரமான, நேர்மையான வழியில் படங்களைப் பார்க்கக் கிடைத்திருக்கும் இந்தத் தொழில்நுட்பம், திரையரங்குகளின் பெரும் வணிகக் கணக்குகளைத் தாண்டிய வாய்ப்புகளைப் புதிய படைப்பாளிகளுக்கு உருவாக்கியிருக்கிறது.
ஓடிடி தளங்களில் தமிழில் வெளியாகும் தொடர்கள் பெரும்பாலும் திகில் கதைகளையும், துப்பறியும் கதைகளையுமே கொண்டிருந்த சூழலில் இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘அயலி’ முற்றிலும் மாறுபட்ட பாராட்டத்தக்க படைப்பு.
Zee 5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகியிருக்கும் எட்டுப் பகுதிகளைக் கொண்ட ‘அயலி’யின் டிரைலர் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தொடர் வெளிவந்து, அந்த எதிர்பார்ப்புக்கும் வரவேற்புக்கும் நியாயம் கற்பித்திருக்கிறது.
கதைப்படி, வீரப்பண்ணை என்ற கிராமத்தில் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களே வசிக்கின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்த மக்கள் வாழ்ந்த கிராமத்திலிருந்து தொற்று நோய்கள், பஞ்சம், அழிவு போன்றவற்றால் புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள். பழைய கிராமத்தில் வேற்று ஜாதி இளைஞனைத் திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு ஒரு பெண் வெளியேறியதால் ஏற்பட்ட தெய்வத்தின் கோபமே தங்கள் கிராமத்திற்கு ஏற்பட்ட துயரத்திற்குக் காரணம் என்று நம்பிய மக்கள் தாங்கள் புதிதாக வந்த கிராமத்திலும் அத்தகைய கட்டுப்பாடுகளைப் “பண்பாடு, பாரம்பரியம்” என்ற பெயரில் பின்பற்றுகின்றனர்.
இந்தப் பின்னணியில் தான் கதை தொடங்குகிறது. 1990-ஆம் ஆண்டுகளில் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பண்பாட்டின் பெயரால் பெண்கள் மீது மட்டும் சுமத்தப்பட்ட இந்த நெருக்கடி அவர்களின் கல்வியையும், சுதந்திரத்தையும் பறிக்கிறது. கல்விக்குப் பெரிதாக முக்கியத்துவம் தராத அந்த ஊரில் பருவம் எய்தியதுமே படிப்பை நிறுத்திவிட்டுப் பெண்களுக்குத் திருமணம் செய்துவிடுகிறார்கள்.
பத்தாம் வகுப்பில் எந்த ஒரு மாணவனும் தேறியதேயில்லை. பத்தாம் வகுப்பில் எந்த மாணவியும் படித்ததேயில்லை என்பதுதான் அந்த ஊரின் நிலவரம். பள்ளியின் காலை கூடுகையில் 9-ஆம் வகுப்புப் பெண்கள் வரிசையில் யார் முன்னால் நிற்பது என்பதற்குக் கூட தயங்கி, பின் வரிசைக்கு ஓடும் மனநிலை தான் அங்குள்ள பெண் குழந்தைகளுடையது.
கதையின் நாயகி தமிழ்ச்செல்வி ஒன்பதாம் வகுப்பு மாணவியாகப் பெருமையோடு அந்த வரிசையில் முன் நிற்க விரும்புபவர். பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று, பள்ளியின் பெயர்ப் பலகையில் முதலாக இடம்பெற விரும்புபவர். மருத்துவர் படிப்பு வரை செல்ல வேண்டும் என்பதும் அவரது ஆசை.
அதற்கான பாதையில் தடையாக, பருவமெய்துதல் என்னும் இயற்கை வளர்ச்சி அமையும்போது அதைக் கடந்து அவர் வெற்றி பெறுகிறாரா? அதற்குத் தடை செய்கிறதா அயலி கடவுளின் கோபம்?தமிழ்ச் செல்வியின் ஆசைக்குக் குறுக்கே வருவோர் யார்? எது? எப்படி? என்பதைச் சுவையாகவும், நேர்த்தியான திரைக்கதை, உரையாடலுடனும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார்.
கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் அவருடன் இணைந்து சச்சின், வீணை மைந்தன் ஆகியோரின் பங்களிப்பு போற்றத்தக்கது.
மிக நுணுக்கமான காட்சிகளும், வசனங்களும் இந்தப் படத்தைச் சிறப்பான திரைப் படைப்பாகவும், சமூக அக்கறை கொண்ட படமாகவும் அடையாளப்படுத்துகின்றன.
“ஆணாதிக்கத்துக்கு வாய்ப்பில்லை என்றால், ஆண்களெல்லாம் சேலை கட்டிக் கொண்டு போக வேண்டியதுதான்” என்று பேசுபவரிடம், “கட்டிக்க… பொறக்கும்போதே வேட்டி சட்டையோடவா பொறந்து வந்த?” என்ற கேள்வி பளார் என்று ஆணாதிக்க முகத்தில் சாத்துகிறது.
மீண்டும் மீண்டும் படத்தில் சொல்லப்படும் கருத்து ‘யார் சொல்லியிருந்தாலும் உன் அறிவுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்’ என்பதுதான். இந்தக் கருத்தைச் சொன்ன தந்தை பெரியாரின் சிந்தனைகள் தான் இந்தத் தொடர் எங்கும் நிறைந்திருக்கிறது.
கல்வி எத்தகைய விழிப்புத் தரும் என்பதை உணர்த்தும் காட்சிகள் அத்தனையும் அழகு. துணுக்குகளாக இல்லாத நகைச்சுவைக் காட்சிகளும், வசனங்களும் சமூகத்தின் மீதான எள்ளல். பாசம், பண்பாடு, பெருமை என்பன எல்லாம் பெண்களின் அடிமைத்தனத்துக்கு எப்படித் துணைசெய்கின்றன என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது அயலி.
‘ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவியாகத்தான் கடவுள் பயன்படும். ஒரு வேளை ஆதிக்கத்துக்கு எதிராகக் கோயில், கடவுளோ பயன்பட்டால், அந்தக் கடவுளையும் ஆதிக்கவாதிகள் ஒழிக்கத் தயங்க மாட்டார்கள்’ என்பதை மிகத் தெளிவாக இந்தத் தொடர் சொல்கிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்குரியோர்.
ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் ரசித்துச் சொல்ல ஏராளம் இருக்கிறது அயலியில்!
பார்க்கவும், பாராட்டவும், பரப்பவும் செய்ய வேண்டிய தொடர் ‘அயலி’. – சமா.இளவரசன்
சமூக ஊடகங்களில்
குவியும் பாராட்டுகள்:
அம்மாக்கள் எப்படி தங்களை அறியாமலேயே தங்களது மகள்களுக்கு எதிரியாக மாறிவிடுகிறார்கள் என்பதை இயக்குநர் அருமையாக சித்தரித்து இருக்கிறார்.
உள்ளூர் ஆணாதிக்க அரசியல்தான் அயலி எனும் சாமியை உருவாக்கி அந்த ஊரையும், பெண் இனத்தையும் ஆட்டிப் படைக்கிறது எனும் உண்மை மெல்ல மெல்ல உணர்த்தப்படுவது ஓர் இலக்கிய அழகு.
– ம.தொல்காப்பியன், எழுத்தாளர், இயக்குநர்
அயலி என்ற படம் ஒவ்வொரு காட்சிகளையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மூடநம்பிக்கைகளை கடுமையாக விமர்சித்து சாடும் படமாக உள்ளது. ஆத்தா சொல்லுது ஆத்தா சொல்லுது அந்த ஆத்தா யாரிட்ட தான் சொல்லுது. அப்படி சொல்லுச்சுன்னா, ஏன் என்கிட்ட வந்து சொல்லல. இப்படி உள்ள கேள்விகள் சிந்திக்க வைக்கிறது. நான் ஆம்பள அப்படி இப்படித்தான் இருப்பேன், நீ பொம்பள இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களுக்கு முடிவுகட்டக்கூடிய படம் அயலி. இத்தொடரை பெண்கள் பார்க்க வேண்டும் என்று சொல்வதற்கு முன் ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தான் சொல்வேன்.
– பிரியதர்சினி, சென்னை மாநகராட்சி உறுப்பினர்
நாயகியான தமிழ்செல்வியின் படிக்கும் ஆசை, அதற்கு வரும் முட்டுக்கட்டை, அவள் அதை ஒவ்வொரு முறையும் எப்படி கடக்கிறாள், அய்யோ அந்த பெண் மாட்டிக் கொள்ள கூடாதே என நம்மையும் அவளோடு சேர்ந்து பதை பதைக்க வைத்து இருக்கிறார்கள் படக்குழுவினர்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்று என்றால், நாயகி மட்டுமல்லாது, இப்படத்தின் அனைத்து கதாப்பாத்திரங்களும் நம்மை சுற்றி நாம் பார்த்த பார்க்கின்ற மனிதர்கள் தான். அனைவரின் நடிப்பும் வெகு இயல்பு. அதே போல பளிச் பளிச் வசனங்கள். இந்த படத்தை பார்க்கும் பெண்கள் தங்களை அந்த படத்தின் சம்பவங்களோடு பொருத்திப் பார்த்து கொள்வதை தவிர்க்கவே முடியாது..
– கமலி பன்னீர்செல்வம்
‘அயலி’ வெப்சீரிஸ் பெரியாரியச் சிந்தனைகளைக் கலைத்தன்மையுடன் முன்வைக்கும் படைப்பு. பண்பாடு, பாரம்பரியம், திருமணம் என்ற பெயரில் பெண்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகள், பெண்கல்வியின் அவசியம், பெண்களுக்கான சுயமரியாதை, ஜாதி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகியவற்றை உயிரோட்டமுள்ள காட்சிகள் வழியாகவும் வலிமையான வசனங்கள் மூலமும் விவரிக்கிறது.
வைதீகத்துக்கு அப்பாலான நாட்டார் தெய்வங்களில் உள்ள மக்கள் பண்பாட்டுக்கூறுகளைப் புரிந்துகொள்வது என்பதைத் தாண்டி நாட்டார் தெய்வ வழிபாட்டைத் திருநிலைப்படுத்தும் நிலை தொடர்கிறது. நாட்டார் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க, ஜாதியக் கறைபடிந்ததுதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள் அயலி. தமிழின் முதல் அரசியல் வெப் சீரிஸ் என்று அயலியைச் சொல்லலாம்.
– சுகுணா திவாகர், எழுத்தாளர்,
அயலி – சமூக ஊடகங்களில்…
அயலியில், செயற்கைத்தனமும் இல்லை. மக்களின் வாழ்வியலைச் சொல்கிறோம் என்ற பெயரில் ஜாதிய, ஆணாதிக்கப் பண்பாடுகளைப் பரப்பவும் இல்லை. மாறாக எளிய மக்களின் விடுதலையை எளிமையாக, சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறது.
பெரியாரையும் – சமுதாயத்தையும் ஒருசேரப் படித்து புரிந்த ஒரு குழுவால் மட்டுமே அயலியைப் படைக்க முடியும். குழுவினர் அனைவருக்கும் நன்றி நன்றி!
– அதி அசுரன், எழுத்தாளர்,
அயலி வெப்சீரிஸ் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும், இந்த சீரிஸில் வரும் ஏதாவது ஒரு பெண்ணுடனோ, அவளின் சூழலுடனோ தன்னை நெருக்கமாக உணரமுடியும்.
நல்ல கருத்தை சொல்லும் பல படைப்புகளில் சுவாரசியம் குறைவாகவும், போதிக்கும்தன்மை அதிகமாகவும், நிஜத்திற்கும் ஒவ்வாத புரட்சியும்தான் பெரும்பாலும் இருக்கும். அதேபோல வணிகரீதியாக வெற்றிபெறும் பெரும்பான்மை படைப்புகளில் சமூக மாற்றத்திற்குத் தேவையான கருத்துக்கள் இருப்பதில்லை. இந்த இரண்டுக்குமான இடைவெளியை இட்டுநிரப்பும் அயலி டிரெண்ட் செட்டராக விளங்குகிறது. இந்த சீரிஸை தயாரித்த Zee5 நிறுவனத்தாருக்கு கனிவான வாழ்த்துகள்.
இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை. அம்மாக்கள் தம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறையை வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டு, தமக்குள்ளே சமாதானம் செய்து கொண்டு, கசப்புகளை விழுங்கிக் கொண்டு இயல்பாக வாழ்வதும், அடுத்த தலைமுறை கேள்வி கேட்கும் போது அதிலுள்ள நியாயத்தை உணர்ந்தாலும், கட்டுப்பாட்டை மீறவும் முடியாமல், மகள்களின் விருப்பத்தை மறுக்கவும் இயலாமல் தவிப்பதுமான போராட்டத்தை யதார்த்தமாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். படிப்பைத் தொடர்வதற்காக தமிழ்செல்வி கையாளும் உத்திகள் கிராமத்துப் பெண்களுக்கே உரிய புத்திசாலித்தனத்தையும், துணிச்சலையும் போகிறபோக்கில் சொல்லிவிடுகின்றன. குடும்ப நிர்ப்பந்தத்தால் பணியும் இளம்பெண்களின் `எப்படியாவது மீண்டு விடமாட்டோமா’ என்ற துடிப்பும், அவர்களின் துயரும் கனமாக பதிவாகியுள்ளது.
ஆண் கதாபாத்திரங்கள், சண்டை போடும் அப்பத்தாக்கள், பேச முடியாதவரின் உடல்மொழி, ஏமாற்றுக்காரர் பேசும் நியாயங்கள், ஒரு வார்த்தை கூட பேசாமல் தனது கெத்தைக் காட்டும் பெண் போலீஸ் என்று எல்லோரையும் ரசிக்க முடிகிறது.
இந்த சீரிஸில் எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும், மாதவிடாயைக் காரணம் காட்டி மதத்தை வைத்து பெண்ணை ஒடுக்கும் மூடப்பழக்கத்தை, அதே மதத்தை சுட்டிக்காட்டி, மறுதலித்து, பெண் வெற்றி பெறுவதாகக் காட்டி இருப்பது மிகப் பிடித்திருக்கிறது. சமூக மாற்றத்தை நோக்கிய நகர்வு இது. கதை 90களில் நடப்பதாகக் காட்டி இருந்தாலும் இன்றைக்கும் பல பெண்கள் பத்தாவதாவது படித்து முடிக்க மாட்டோமா என்று போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ‘அயலி’ நம்பிக்கையளிக்கிறாள்.
வசனங்கள் கூர்மை. ஒளிப்பதிவும், இசையும் (பெண் இசையமைப்பாளர் ரேவா) அந்தச் சூழலுக்கு நம்மை கூட்டிச் செல்கின்றன. இதில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். மொத்த படக்குழுவினருக்கும் அன்பும் பாராட்டுகளும்.
அயலியின் கதை நம்முடன் வாழும் ஒவ்வொரு பெண்ணின் கதையும் கூட. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பார்க்க வேண்டிய சீரிஸ் இது.
– கீதா இளங்கோவன், எழுத்தாளர், இயக்குநர்