திருடனை விரட்டிப்பிடித்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!
சென்னையை அடுத்த தாம்பரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர் தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிய வடமாநில வாலிபர், சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த காவலர் காளீஸ்வரி, அந்த வாலிபரிடம் விசாரிக்க முயன்றார். ஆனால், அந்த வாலிபர் தப்பி ஓடினார். உடனே, காளீஸ்வரி விரட்டிச்சென்று அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தார். அதில் அந்த வாலிபரின் சட்டைப் பையில் விலை உயர்ந்த அலைபேசி இருந்தது.
அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில் அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டோ (வயது 19) என்பதும், கூடுவாஞ்சேரி அரசுப் பேருந்தில் இருந்த பயணி ஒருவரின் விலை உயர்ந்த அலைபேசியை திருடியதும் தெரிந்தது. இதற்கிடையில் அலைபேசியைப் பறிகொடுத்தவர் அதே எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடம் காவலர்கள் விவரங்களை தெரிவித்து காவல் நிலையம் வரவழைத்தனர். விசாரணையில் அவர் ஆண்டிமடத்தை சேர்ந்த மாயவேல் (30) என தெரியவந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அலைபேசியை திருடிய சோட்டோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு அலைபேசி திருடனை விரட்டிப்பிடித்த பெண் காவலர் காளீஸ்வரிக்கு பொதுமக்கள் பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தாம்பரம் தலைமை காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் உடன் பணியாற்றும் காவலர்கள் காளீஸ்வரியை சால்வை அணிவித்து பாராட்டினர்.