திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.
எத்தனை எத்தனை மாநாடுகள் – தொடர் பிரச்சாரச் சுற்றுப்பயணங்கள், தீர்மானங்கள், போராட்டங்கள் – சொல்லி மாளாது.
தி.மு.க.வைப் பொறுத்த வரையிலும் இந்த நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறது – வந்து கொண்டும் இருக்கிறது – இடதுசாரிகளும் அப்படியே!
மக்கள் வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை முடக்க மூடநம்பிக்கைகளையும், புராதனப் புரட்டுக் கதைகளையும் குறுக்கே கொண்டு வந்து போடுவது மன்னிக்கத் தக்கது தானா?
மக்கள் நல ஆட்சி என்பதற்கு (Well -Fare State) அடையாளம் மக்கள் வளர்ச்சித் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவது தானா?
அரசியலுக்காக முன்பு ஒன்று சொல்லுவதும் பிறகு, அதற்கு நேர் முரணாகக் கூறுவதும் நடந்து கொள்வதும் கடைந்தெடுத்த அறிவு நாணயமற்ற செயல் அல்லவா!
மக்களின் மறதி என்ற துணிவில் இப்படி நடந்து கொள்ளலாமா? ஆனால் திராவிடர் கழகம் கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற தன்மையில் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் – மக்களிடத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும்.
பிரச்சாரம், போராட்டம் என்பதுதான் அதன் அணுகுமுறை! எடுத்துக்காட்டாக அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் தனது தேர்தல் அறிக்கைகளில் (2001 மே சட்டமன்றத் தேர்தல், 2004 மே மக்களவைத் தேர்தலில்) சேதுசமுத்திரத் திட்டத்ததைப் பற்றி வானளவு புகழ்ந்ததும் 2009ஆம் ஆண்டு தேர்தலின் போது- இராமன் பாலம் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்குமுன் இராமனால் உருவாக்கப்பட்டது என்றும் அந்தர்பல்டி அடித்தாரே!
முந்தைய தேர்தல் அறிக்கைகளில் ஜெயலலிதாவே கூறிய மணல் திட்டு, 2009இல் இராமன் பாலம் ஆனது எப்படி?
அண்ணா முதல் அமைச்சர் ஆன நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று எழுச்சி நாள் கொண்டாடவில்லையா? அந்த அண்ணாவைக் கட்சியின் பெயரிலும் கட்சியின் கொடியிலும் பொறித்திருக்கும் அண்ணா தி.மு.க. அந்த அண்ணாவையே அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதை நாட்டு மக்களும் குறிப்பாக அண்ணா திமுக தோழர்களும் புரிந்துகொண்டு நல்லறிவு பெறல் வேண்டும்.
அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எந்த அளவுக்கு இத்திட்டத்தை உச்சிமோந்து பாராட்டு மழையில் குளிப் பாட்டினார்? இதோ அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலிருந்து…
“சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டுமல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும் வாணிபமும், தொழிலும் பெருகும். வெளிநாட்டுச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயண தூரம் பெருமளவுக்குக் குறையும் – எரிபொருளும், பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழ்நாட்டின் தென் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்புப் பெருகும். தூத்துக்குடி துறைமுகம் பன்னாட்டு அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்னும் பல நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை, முக்கியத்துவத்தை உணர்ந்து நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மய்ய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்” என்று தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் தான். ஆதம்பாலம் – வெறும் மணல் மேடு என்று சொன்ன ஜெயலலிதாதான் 2009 தேர்தல் அறிக்கையில் குட்டிக் கர்ணம் போட்டு இராமர் பாலத்தை இடிப்பதா என்றும் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமபிரான் எழுப்பிய பாலம் என்றும் கூறியதோடு சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார் என்றால் இந்த அப்பட்டமான வாக்கு மீறலை, முரண்பாட்டின் மொத்த வடிவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஜெயலலிதா தேர்தல் அறிக்கைகளில் (2001,2004) கூறிய அத்தனைக் கருத்தையும் நாம் வழிமொழிகிறோம். அவர் பட்டியலிட்ட அத்தனை நலன்களையும் வரவேற்கிறோம். அதன் அடிப்படையில் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, ஜெயலலிதா மொழியில் கூற வேண்டுமானால் ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றும்படி வலியுறுத்துகிறோம்.
திராவிடர் கழகம் நடத்திய மதுரை திறந்த வெளி மாநாட்டின் நோக்கமும் இதுதான்.
இதற்கான விழிப்புணர்வுப் பயணத்தையும், சமூகநீதியின் தேவையையும் முன்னிறுத்தி வரும் பிப்ரவரி 3 – அண்ணா நினைவு நாளில் அய்யா பிறந்த ஈரோட்டில் தொடங்கி தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் தொடர் பிரச்சாரத்தை 90 வயதைக் கடக்கும் திராவிடர் கழகத் தலைவர் மேற்கொள்ள இருக்கிறார்.
ஒத்த கருத்துள்ள கட்சித் தலைவர்களும் ஆங்காங்கே பங்கேற்றுப் பேசுகிறார்கள்.
கழகத் தோழர்களே, காலத்தால் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தை வெற்றி பெறச் செய்வீர்! செய்வீர்!!