‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள் – சமூகநீதி,
மாநில உரிமை, தமிழின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்
எமது பிரச்சார திட்டத்தில் முக்கிய இடம் பெறும்!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
சென்னை, பிப்.2 ஈரோடு முதல் கடலூர் வரை மேற்கொள்ளும் 40 நாள் தமது பிரச்சாரச் சுற்றுப் பயணம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று முற்பகல் சென்னைப் பெரியார் திடலில் அளித்த பேட்டி வருமாறு:
இன்று (2.2.2023) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
அனைவருக்கும் வணக்கம்!
எமது சுற்றுப் பயணத்தின் நோக்கம் என்ன?
நாளை (3.2.2023) அண்ணா அவர்களுடைய நினைவு நாள். இந்த நினைவு நாளையொட்டி, ஈரோட் டிலிருந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள், பெருநகரங்கள், கிராமங்கள் இவற்றையெல்லாம் இணைத்த ஒரு நீண்ட சுற்றுப் பயணம் – பெரும்பயணம் சமூகநீதிக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய, ஏற்கெனவே ராமன் பாலம் என்று சொல்லி, நிறுத்தப்பட்ட அந்தத் திட்டம் தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் தமிழின உணர்விற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடியவர்களுக்கே வேலை வாய்ப்புகள் கொடுப்பது ஒரு பக்கம் – இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு இருக்கின்ற மத்திய தொழிற்சாலைகள், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்றவை – மீண்டும் விரிவாக்கத்திற்காக 23 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் தேவைப்படுகின்றன என்று கேட்கக் கூடியவர்கள், அந்நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்காக தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒருவரைக்கூட தேர்வு செய்யாத அளவிற்கு அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
எனவேதான், இவற்றையெல்லாம் மக்களிடையே எடுத்துச் சொல்லவும், எல்லாத் தொழில்களும் கார்ப்பரேட் மயமாக ஆகுவதைக் கண்டித்து, தமிழ்நாட் டினுடைய பொருளாதார வளம் சுரண்டப்படுவதையும் எதிர்க்கக் கூடிய அளவிலே ஒரு வாய்ப்பாக உருவாக்கிக் கொண்டு, இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துப் பிரச்சாரம் செய்து, அதிலும் குறிப்பாக EWS என்று சொல்லக்கூடிய 10 சதவிகித இட ஒதுக்கீடு, இன்னொரு பக்கத்தில் உச்ச, உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்திலும் உயர்ஜாதிக்காரர்களையே மீண்டும் மீண்டும் கொண்டு வந்து அடைக்கிறார்களே தவிர, வாய்ப்பில்லாத மற்ற சமூக மக்களுக்கு வாய்ப்பைத் தர அவர்கள் மறுக்கிறார்கள்.
ஈரோட்டில் தொடங்கி
கடலூரில் நிறைவு பெறும்
இவற்றைப்பற்றியெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி ஒரு பெருந்திரள் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும்; அறப்போராட்டத்தை உருவாக்க வேண்டும்; தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விழிப்பு ணர்வை உருவாக்கவேண்டும் என்பதற்காக நான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளேன்; என்னோடு 25 தோழர்கள் வருவார்கள்; 4, 5 வாகனங்கள் வரும்; ஒவ்வொரு நாளும் இரண்டு கூட்டங்கள் நடைபெறும். ஒரு பெரிய நகரம்; முக்கிய பெரிய கிராமம் இவற்றை மய்யப்படுத்தி நாளை பிரச்சாரத்தைத் தொடங்கி, அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதி கடலூரில் சுற்றுப்பயணத்தை முடிக்கவிருக்கின்றேன். எல்லா மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்தப் பிரச்சாரப் பயணத்தை நடத்தவிருக்கின்றோம். அந்தக் கருத்துகளை செய்தியாளர்களிடையே உங்களிடையே பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். வந்திருக்கின்ற உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சுற்றுப்பயண விவரங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
சுற்றுப் பயணத்தில் முதலமைச்சர்
கலந்து கொள்வாரா?
செய்தியாளர்: உங்களுடைய பயணத்தில் தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
தமிழர் தலைவர்: கடந்த முறை சென்ற சுற்றுப் பயண நிறைவு விழாவில் பங்கேற்று வாழ்த்தி னார் முதலமைச்சர் அவர்கள். என்னுடைய வயதின் காரணமாக, இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சொன்னார். வெளியூர் பிரச்சாரத் தைத் தவிர்த்துவிடுங்களேன் என்று சொன்னார்.
பரவாயில்லை, அது ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொன்னேன். என்னுடைய சுற்றுப்பயணத்தில், தி.மு.க. பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் தோழமைக் கட்சிக் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் ஆங்காங்கே பங்கேற்கிறார்கள்.
காலையில்கூட ”முதலமைச்சர் அவர்கள் உங்களோடு தொலை பேசியில் பேசவேண்டும் என்று சொன்னார்” என்று எனக்குத் தகவல் வந்தது.
அவர் வேலூரில், கள ஆய்வில் இருக்கிறார். அநேக மாக வாழ்த்து சொல்வதற்காகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
முதலமைச்சர் அவர்களுக்கு ஏராளமான பணிகள் இருப்பதினால், நாங்களும் அவரை வற்புறுத்தவில்லை.
கடலுக்குள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச் சூழல் பாதிக்கும் என்கிறார்களே!
செய்தியாளர்: மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான கலைஞர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் இருவேறு கருத்துகள் இருக்கின்றன. கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று சொல்கிறார்களே, உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு – ஏற்கெனவே கடலினுள் சிலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இப்பொழுதுகூட மும்பையில் மிகப்பெரிய அளவில், சிவாஜி சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து கலைஞர் நினைவுச் சின்னம் அமைப்பவர்கள் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அல்ல.
ஆகவே, சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்வார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்துவது என்பது இப்பொழுது புதிதல்ல.
கலைஞருக்கு எதிராகப் பயன்படுத்துவது, கலைஞரின் சிலைக்கு எதிராகப் பயன்படுத்துவது என்பதும் புதிதல்ல.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியவர்கள் யார்?
ஏற்கெனவே 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், ராமன் பாலம் என்று சொல்லி, இன்னும் 23 கிலோ மீட்டர் பணிகள் மீதமுள்ள நிலையில், அந்தப் பணிகள் நீதிமன்றத்தால் தடையாணை வாங்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருக்கின்ற அந்தத் திட்டத்தை தொடங்கும்பொழுது, பல விஷயங்களைக் கிளப்பினார்கள்.
டி.ஆர்.பாலுவோ, தி.மு.க.வோ அந்தத் திட்டத்தைத் தொடங்கக் கூடாது என்பதற்காக, மீனவர்களை ஒரு பக்கத்தில் கிளப்பிவிட்டு, அவர்களுக்குப் பாதிப்பு என்று சொன்னார்கள். பிறகு அவர்களையெல்லாம் அழைத்து விளக்கம் சொல்லி, உணர்த்திய பிறகு, அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
அதேபோல், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்கிற இதே வாதத்தை அப்போதும் சொன்னார்கள். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தால் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று சொன்னார்கள்.
ஆகவேதான், சுற்றுச்சூழலைப்பற்றி இந்த அளவிற்குக் கவலைப்படுபவர்கள், இதுவரை சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை கொஞ்சம் விளக்கிவிட்டு, பிறகு சுற்றுச்சூழலைப்பற்றி கவலைப்பட்டால் நன்றாக இருக்கும்.
ஆகவேதான், உள்நோக்கத்தோடு சொல்லப்படுகிற குற்றச்சாட்டிற்கு எந்த மரியாதையும் கிடையாது. சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற அளவிற்கு, கலைஞரின் நினைவுச் சின்னம் அமையாது; ஏனென்றால், அரசாங்கத்திற்கு இருக்கின்ற பொறுப்பு என்பது மற்ற எல்லோரையும்விட அதிகமாக இருக்கிறது – சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்காக.
சுற்றுச்சூழலுக்காக ஓர் அமைச்சரே இருக்கிறார். சுற்றுச்சூழலை வைத்துத்தான் எல்லா பணிகளையும் செய்துகொண்டிருக்கின்றார்கள். அந்த சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அரசாங்கத்திற்குத்தான் கெட்டப் பெயர் ஏற்படும் என்பதால், அதில் அவர்கள் கவனத்தோடு இருப்பார்கள்.
எனவே, இந்தக் குற்றச்சாட்டு என்பது ஒரு பாசாங்குத்தனமே தவிர, உண்மையல்ல.
கலைஞர் பேனாவில் பெரியார் இருப்பாரா?
செய்தியாளர்: கலைஞரின் நினைவுச் சின்னம் அமைப்பதில், பேனா முக்கிய பங்கு வக்கிறதே, அந்தப் பேனாவில் பெரியாரியம் இருக்குமா? இல்லையா?
தமிழர் தலைவர்: பேனாவில் இருக்கின்ற மை பெரியார். அதனால் எப்பொழுது அது கொட்டுகிறதோ, அப்பொழுது அது தெளிவாகத் தெரியும்.
செய்தியாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக இருக்கக் கூடிய பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்பினர் சொல்லுகிற கருத்துகளை கவனித்தீர்களா?
தமிழர் தலைவர்: நிச்சயமாக. அந்தக் கருத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்த்து பணிகளைத் தொடங்குவார்கள். ஏனென்றால், அவர்கள் சொல்லுவது என்பது, நல்லெண்ணத்தோடு சொல்லப்படுவது.
கருத்தில், இரண்டு வகை இருக்கின்றன.
அரசியல் ரீதியாக, உள்நோக்கத்தோடு சொல்லப்படுகின்ற கருத்துகள் அலட்சியப்படுத்தப்படும்.
நல்லெண்ணத்தோடு சொல்லப்படும் கருத்துகள் ஏற்கப்படும்.
ஆகவேதான், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், கலைஞரின் நினைவுச் சின்னம் அமைக்கப்படாது என்று ஏற்கெனவே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஆகவே, பூவுலகின் நண்பர்களால் சொல்லப்படுகின்ற கருத்துகள் உள்நோக்கத்தோடு சொல்லப்படுகின்ற கருத்துகள் அல்ல; நல்லெண்ணம் கொண்டதுதான். அவற்றை நிச்சயமாக முதலமைச்சர் கவனிக்காமல் இருக்கமாட்டார். அவருடைய கவனத்திற்கு நாங்களும் கொண்டு செல்வோம்.
கருத்துக் கேட்பு என்கிற கட்டமே முதல் கட்டம்தான். அந்தக் கருத்துகளை ஆலோசனை செய்வார்கள்.
சுற்றுப்பயணத்தில் ஆளுநர் பற்றிப் பேசப்படுமா?
செய்தியாளர்: உங்களுடைய சுற்றுப் பயணத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கிறோம் என்று சொன்னீர்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலில், ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்தும் உங்களுடைய சுற்றுப்பயணத்தில் பேசப்படுமா?
தமிழர் தலைவர்: ஆளுநரைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாடு எப்படி இருக்கிறது கொஞ்சம் நாடிப் பிடித்துப் பார்த்தார். இப்பொழுது புரிந்துகொண்டார்.
ஆகவே, அவர் ஒரு பொருட்டே அல்ல. நாள்தோறும் அவர் செய்தித் தலைப்பாகவேண்டும் என்று நினைக்கிறார். இப்பொழுதுகூட ஓமாந்தூராரைக் கண்டுபிடித்திருக்கிறார்.
ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ்.சில் காங்கிரஸ் தலைவர்களைத் தவிர சொல்வதற்கு யாருமில்லை. காமராஜரைத்தான் கொண்டு வரவேண்டும்; வ.உ.சி.யைத்தான் கொண்டு வரவேண்டும். ஓமந்தூராரைத்தான் காட்டவேண்டும். வேறு யாரையும் அவர்களால் காட்ட முடியாது. செப்டம்பர் 17 தந்தை பெரியார் நினைவு நாளில் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்!
முதலில் ஆளுநர் படமெடுத்துப் பார்த்தார்; படமெடுத்த பாம்பு இப்பொழுது பெட்டிக்குள் போயிருக்கிறது. ஆனால், பாம்பு பாம்பாகத்தான் இருக்கும் என்பதை புரிந்துகொண்டு, நாங்கள் எப்படி பாம்பாட்டிகளாக இருக்கவேண்டுமோ, அப்படி இருப்போம்.