ஒசாகா, அக்.30- ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் கடந்த 26ஆம் தேதி ஒசாகா/கான்சாய் ஜப்பான் சுற்றுலா கண்காட்சி-2023 தொடங்கி நேற்று (29.10.2023) வரை நடந்தது. இதில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச் சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் புகழ்பெற்ற குதிரை சிற்ப தூண்களின் மாதிரி வடிவம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு ஒளிப்படங்களும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்த கண்காட்சிக்கு வந்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன் ஆகி யோர், தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை ஜப்பான் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் ஒளிப்படங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு கண்காட்சிக்கு வந்த ஜப்பான் நாட்டுசுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்களிடம் வழங்கினர்.
கண்காட்சியில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து ஜப்பானிய மொழியில் தெரிவிக்க ஜப்பான் நாட்டவர் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஜப்பானிய குழந்தைகளுக்கு கைவினைக் கலைஞர் களால் தயாரிக்கப்பட்ட யானை பொம்மை நினைவுப் பரிசாக வழங்கப்பபட்டது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய தின்பண்டமான கடலை யில் வெல்லம் கலந்து செய்யப்பட்ட கல்கோனா என்றழைக்கப்படும் கம்மர் கட் மிட்டாய்கள் சிறுவர், சிறுமிகளுக்கு வழங்கப்பட்டன. அவற்றை ஜப்பானிய குழந்தைகள் விரும்பி உண்டனர். குழந்தைகள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மற்றும் பொய்க்கால் குதிரை பொம்மை ஆகியவற்றை ஆட்டி பொம்மைகள் ஆடும் அழகை கண்டு மகிழ்ந்தனர்.