உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு என்ன பதில்?
மதுரை திறந்தவெளி மாநாட்டில் தி.மு.க. பொருளாளர்
டி.ஆர்.பாலு எம்.பி. ஆணித்தரமான பேச்சு
மதுரை, பிப்.3 அமைச்சரவை முடிவு செய்து, நிதி ஒதுக்கப்பட்டு ஒரு திட்டம் செயல்பட ஆரம்பித்தால் தடுக்க முடியாது! உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு என்ன பதில்? என்றார் மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தி.மு.க. தலை வருமான டி.ஆர்.பாலு அவர்கள்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு
கடந்த 27.1.2023 மாலை மதுரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலி யுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. பொருளாளரும், நாடாளு மன்ற குழுத் தி.மு.க. தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
மக்களின் மத நம்பிக்கை
ஒரே மாதிரியாகத்தான் இருக்கவேண்டும்!
மக்களின் மத நம்பிக்கை என்பது இடத்திற்கு இடம் மாறாது; ஒரே மாதிரியாகத்தான் இருக்கவேண்டும்.
மோனுமென்ட் ஆக்ட் (புராதனச் சின்னம் சட்டம்) 1958 இல் வருகிறது.
நிலவியல் அறிஞர்
டாக்டர் ஜோன்ஸ் வால்டர்
புராதனச் சின்னம் என்பது, ஆதாம் பாலத்தை ஆய்வு செய்வதற்காக ஜோன்ஸ்வால்டர் என்பவர் ஒருவர் வருகிறார்.
அவர் யார் என்றால், ஜெர்மனி பல்கலைக் கழகத்தினுடைய பேராசிரியர். அவர் ஆதாம் பாலத்தை, கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, ஆய்வு செய்கிறார். ஆழமாகத் தோண்டிப் பார்க்கிறார்; ஃபோர் வெல் போட்டுப் பார்க்கிறார். மனித உருவாக்கமே கிடையாதே – வெறும் கூழாங்கற்களும், மணல் படிவங் களும்தானே இருக்கின்றன என்று மிகப்பெரிய அறிஞர் நிலவியல் அறிஞர் டாக்டர் ஜோன்ஸ் வால்டர் சொல்கிறார்.
ஆனால், ஜெயலலிதா அம்மா என்ன சொல்கிறார்? இது ‘‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’’ பத்திரிகையில், 15.9.2007 ஆம் ஆண்டு செய்தி வந்திருக்கிறது.
17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் பிறந்தார் என்று.
மனிதன் வந்ததே 5 லட்சம் ஆண்டுகளிலிருந்து 7 லட்சம் ஆண்டுகளுக்குத்தான். இதுதான் வரலாற்று ஆய்வு.
‘‘நம்பிக்கை’’தான் – ஆதாரம் கிடையாது
என்று சொல்கிறார்கள்
ஆனால், 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமன் பிறந்தான் என்று சொல்கிறார்கள்.
எப்படி என்று கேட்டால், ‘‘நம்பிக்கை”தான் – இதற் கெல்லாம் ஆதாரம் கிடையாது என்று சொல்கிறார்கள்.
நீங்கள் எதை வேண்டுமானாலும் நம்புவீர்கள்; அதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா? இந்தக் கேள்வியை நீதிமன்றத்தில் கேட்கமாட்டார்களா?
நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது, அதனால்தான்.
சரி, 1958 இல் சட்டம் வந்துவிட்டது. அந்த சட்டம் என்ன சொல்லுகிறது என்பதை மட்டும் நாம் பார்ப்போம்.
இராமர் பாலம் என்ற பிரச்சினை – ஒன்றிய அரசாங்கம் முடிவெடுக்கவேண்டிய ஒன்று என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.
ஒன்றிய அரசிடம் சுப்பிரமணியசாமி, ‘‘இராமர் பாலம் புராதன சின்னம்” என்று சொல்லப் போகிறாராம்.
எப்படி புராதனச் சின்னம்?
17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றெல்லாம் சொல்வார்கள்.
புராதனச் சின்னம் சட்டம் – 1958
இதோ 1958 இல் இருக்கிற சட்டம் –
This Act may be called as the Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958.
“Ancient Monument” means any structure, erection or monument, or any tumulus or place of interment, or any cave, rock-sculpture, inscription or monolith which is of historical, archaeological or artistic interest and which has been in existence for not less than 100 years and include –
remains of an ancient monument,
site of an ancient monument
such portion of land adjoining the site of an ancient monument as
may be required for fencing or covering in or otherwise preserving
such monument, and
the means of access to, and convenient inspection of, an ancient monument;
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், புராதனச் சின்னம் நூறு ஆண்டுகளாக இருக்கவேண்டும். அதற் கொரு வேலி போட்டு இருக்கவேண்டும். விஞ்ஞானிகள் போய் வருவதற்கு – ஆய்வு நடத்துவதற்கு வழிகோல வேண்டும்.
புராதனச் சின்னம் என்றால்,
நூறு ஆண்டுகள் இருக்கவேண்டும்!
புராதனச் சின்னம் என்றால், நூறு ஆண்டுகள் இருக்கவேண்டும் என்றால், ஆடம்ஸ் பாலத்தில், மணல் திட்டுகள் இருக்கின்றன என்று அறிஞர்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
விஞ்ஞான ரீதியாக அங்கே ஒன்றுமேயில்லை.
நீர்க்குமிழி வரும், காற்றடித்தால் காணாமல் போய் விடும். அதுபோலத்தான், மணல் திட்டுகள்; காற்றினால் மணல் அடித்துக்கொண்டு வரும். வடகிழக்குப் பருவக் காற்று – தென்மேற்குப் பருவக் காற்று அடிக்கும்; அலை களும் அதற்கேற்றாற்போல் ஓடிவரும்; தனுஷ்கோடியில் அப்படித்தான்.
ஒரு நாள் முழுவதும் நாசா படமெடுத்ததா?
நீர் மட்டம் உயரமாக இருக்கின்றபொழுது, மணல் திட்டுகள் கரைந்து கரைந்து பள்ளத்திற்குச் சென்றுவிடும். இதைத்தான் மணல் திட்டுகளைத்தான் நாசா படமெடுத் தது. ஒரு நாள் முழுவதும் நாசா படமெடுத்ததா? ஒரு சீசன் முழுவதும் படம் எடுத்ததா?
நாசாவிற்கு நாங்கள் கடிதம் எழுதிக் கேட்டபொழுது, நாங்கள் எடுத்த படம் சரிதான்; ஆனால், அவர்களுடைய கருத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தமே கிடையாது. நாங்கள் எடுத்த செகண்டில் படம் வந்தது; அது உண்மைதான். ஆனால், அவர்கள் சொல்கிற கதை வியாக்கியானம் எல்லாம் கட்டுக்கதை.
ஒன்றிய அமைச்சராக இருந்த நான் இதைக் கேட் டிருக்கமாட்டேனா? விஞ்ஞானிகளை அழைத்துக் கேட்டிருக்கமாட்டேனா?
நான் ஏன் அமைதி காத்தேன்?
நாங்கள் அமைதி காத்ததினால் ஏற்பட்ட விளைவுகள் என்பதை நான் நன்றாகவே உணருகிறேன். நான் ஏன் அமைதி காத்தேன்?
எனக்குத் திட்டம் முக்கியம். அரைகுறையாகப் பேசி திட்டத்தை நிறுத்திவிடக் கூடாது.
இதற்காக, என் பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.
பிள்ளையைப் படிக்க வைக்க வேண்டும்; பணம் கிடையாது. ஆனால், ஏதாவது ஒரு தொழில் செய்து, பிள்ளைக்குப் படிப்பை கொடுத்துவிடுகிறார் அல்லவா! அவர் ஒரு பொறுப்புள்ள தாய் ஆயிற்றே. அப்படிப்பட்ட தாய் உலகத்தில் இல்லையா? இன்றைக்கும் இருக்கிறார் அல்லவா!
குறைந்தபட்சம் அறிவு, புத்தி இல்லாமல் இருப்பவர்கள் ஒரு கட்சியின் தலைவர்களாக இருக்கிறார்கள்!
மணல் திட்டுகள் வடகிழக்குப் பருவக் காற்றினால் அடித்துக் கொண்டுவரப்படும். அது அப்படியே கிடக்கும்.
குறைந்தபட்சம் அறிவு, புத்தி இல்லாமல் இருப்ப வர்கள் ஒரு கட்சியின் தலைவர்களாக இருக்கிறார்களே, இது நியாயமா?
அதை நினைத்தால் எங்களுக்கெல்லாம் கஷ்டமாக இருக்கிறது. 66 ஆண்டுகள் அரசியலில் இருந்தாயிற்று. யார் யாரோடெல்லாம் சண்டை போட்டோம்; அறி ஞர்கள்கூட சண்டை போட்டோம், அவர்கள் எதிரிகளாக இருந்தாலும்கூட. அறிவியல் வல்லுநர்களிடம் சண்டைப் போட்டோம். பெரிய பெரிய தலைவர்களிடம் சண்டை போட்டோம்.
அப்படி இருக்கும்பொழுது, சின்னச் சின்ன ஆள்களிடமெல்லாம் பதில் சொல்லவேண்டும் என்று எனக்கு அவசியமே இல்லை. இந்த அவமானத்தை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள்கூட தோற்றுவிடுவார்கள்!
தயவு செய்து ஒவ்வொரு கட்சிக்கும், நல்ல தலை வரைப் போடுங்கள். எங்கள் தோழமை கட்சித் தலைவர் களைப் பாருங்கள்; திருமா பேசுகிறாரே, ஆணித்தரமாக வாதிடுகிறாரே, உச்சநீதிமன்ற நீதிபதிகள்கூட தோற்று விடுவார்கள். நீங்களே சென்று நீதிமன்றத்தில் வாதாடி யிருக்கலாம்.
நிச்சயமாக நடக்காது;
நடக்கவும் விடமாட்டேன்!
இப்படி நிரந்தரமான கட்டமைப்பு அங்கே இல்லை. ஆகவே, புராதனச் சின்ன சட்டத்தின்கீழ் உங்களால் கொண்டு வர முடியாது என்று ஆணித்தரமாக நான் சொல்லுகிறேன்; நிச்சயமாக நடக்காது; நடக்கவும் விடமாட்டேன்.
ஏனென்றால், நீர்க்குமிழியை நிரந்தரமான கட்ட மைப்பு என்று சொல்வீர்களா?
அடுத்த கேள்வி இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
ஜெயலலிதா அம்மா என்ன சொன்னார்கள்?
இது நிரந்தரமான கட்டமைப்பு – நம்புங்கள்; 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விஷயம் என்றார்.
புராதனச் சின்னம் சட்டத்தின்படி
நடவடிக்கை எடுத்தீர்களா?
சரி, அது நிரந்தரமான கட்டமைப்புதானே – மணல் திட்டுகள் இருக்கும் நாசா படத்தை நம்பினீர்கள் அல் லவா! அங்கே ஒரு வேலி அமைத்து, அதை பத்திரமாகப் பாதுகாப்பதற்காக 1958 புராதனச் சின்னம் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தீர்களா? பாதுகாப்பு செய்தீர்களா?
பாதுகாப்பு செய்யவில்லை. ஏனென்றால், அது புராதானச் சின்னம் அல்ல – ஆகவே, நீங்களே முடிவு செய்துவிட்டீர்கள், அதற்குப் பாதுகாப்பு தேவையில்லை என்று.
என்றைக்காவது ஒரு நாளாவது
உள்ளே சென்று பூஜை செய்திருக்கிறீர்களா?
சரி, அப்படியே இருந்தாலும்கூட, அது இராமர் கட்டிய பாலம் – மத நம்பிக்கை என்று சொல்கிறீர்களே, என்றைக்காவது ஒரு நாளாவது உள்ளே சென்று பூஜை செய்திருக்கிறீர்களா?
அய்யாவிற்குப் பூஜை பிடிக்காது; ஆனால், அம்மா விற்குப் பூஜை பிடிக்கும். அப்படி பூஜை பிடிக்கும் அம்மா சென்று பூஜை செய்தார்களா? சரி, அங்கே நடந்தாவது சென்றார்களா? நடந்து போக முடியாது; ஏனென்றால், அது புதை மணல். அப்படியே உள்ளே இழுத்துக்கொண்டு விடும்.
இப்படிப்பட்ட இடையூறுகள் எல்லாம் இருக்கின்ற இடம் அது.
திருவண்ணாமலை கோவில் புராதனச் சின்னம்
மாமல்லபுரம் புராதனச் சின்னம்
மதுரை கோவில் புராதனச் சின்னம்
அங்கேயெல்லாம் சுற்றுச்சுவர் இருக்கிறது; பாதுகாப் பாக இருக்கிறது. நிரந்தர கட்டமைப்பு இருக்கிறது; நீங்கள் அதையெல்லாம் பார்க்கலாம்.
புரட்சி வெடித்திருக்க வேண்டாமா?
ஆனால், இராமர் பாலத்தை யாராலாவது பார்க்க முடியுமா? என்ன கட்டுக்கதையைக் கட்டுகிறார்கள்; நம்முடைய தமிழ்நாடு மக்கள் இதையெல்லாம் கேட்டு விட்டு, இந்நேரம் புரட்சி வெடித்திருக்க வேண்டாமா?
ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன்; பனாமாவில் 400 ஆண்டுகளாக பொதுமக்கள் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள். அதை கொலம்பியா ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால், பனாமாவில்தான், பனாமா கால்வாய் தோண்டவேண்டும்; அப்படி தோண்டவில்லை என்றால், 12 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டுதான் வரவேண்டும். இதற்கு எவ்வளவு செலவாகும்?
பனாமா கால்வாய்!
கொலம்பியா நாடாளுமன்றத்தில், அந்தத் திட்ட மசோதா தோற்றுப் போய்விட்டது. பனாமா கால்வாய் கையறு நிலையிலேயே இருந்தது. அப்பொழுது புரட்சி ஏற்பட்டது; சமாளிக்க முடியவில்லை. அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உடனே ரூஸ்வெல்ட் பைனான்ஸ் செய்தார்.
அப்படி பைனான்ஸ் செய்து பனாமா கால்வாய் கட்டப்பட்டது. 15 லட்சம் தொழிலாளர்கள் அதற்காகப் பயன்படுத்தப்பட்டனர். ஒன்றரை லட்சம் பேர் மஞ்சள் நோயால், பெரிய பெரிய வண்டுகள் கடித்து இறந்தனர்.
1903 ஆம் ஆண்டு தொடங்கிய அந்தத் திட்டம், 1914 திறப்பு விழா செய்தார்கள்.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு மிகப்பெரிய செய்தி வந்திருக்கிறது.
70 சதவிகித வியாபாரம்
அங்கே சென்றுவிட்டது!
அது என்னவென்றால், மீண்டும் பனாமா கால் வாயைப் பெரிதுபடுத்துவதற்காக, 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மீண்டும் கட்டிவிட்டார்கள்.
ஆக மொத்தம் சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் ஆகிய இரண்டும் சேர்ந்து, அகில உலகத்தில் உள்ள வியாபாரத்தில், 70 சதவிகித வியாபாரம் அங்கே சென்றுவிட்டது.
நமக்கும் கொஞ்சம் வந்திருக்கவேண்டும்; கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால், அப்படி வந்திருக்கும்.
நாம் போட்ட திட்டமும் அப்படிப்பட்டதுதானே! செங்கடலையும், மத்தியத் தரைக் கடலையும் இணைப் பது சூயஸ் கால்வாய் – அப்பொழுது அதில் எத்தனைக் கப்பல் போனது? 2, 3 கப்பல்கள்தான். பனாமாவில் 6 கப்பல், தொடக்கத்தில்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால், இங்கே கப்பலே போகாது என்றார்கள்.
ரூ.270 கோடி எரிபொருள் செலவு மிச்சமாகும்!
நான் சொல்கிறேன், 70 சதவிகித கப்பல், இந்தியத் துறைமுகங்களுக்கு வருகின்ற கப்பல்கள் நம்முடைய சேது சமுத்திரக் கால்வாய் வழியாக போகும்.
ஓராண்டுக்கு சாதாரணமாக ரூ.270 கோடி எரிபொருள் செலவு மிச்சமாகும்.
ஓராண்டுக்கு ரூ.270 கோடி லாபம் வரும் திட்டத்தை முடக்கிப் போட்டார்களே, நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீர்களா, ‘பாவிகளா!’
‘பாவி’யையும் நம்ப மாட்டார்;
பார்ப்பானையும் நம்பமாட்டார்!
உங்கள் சார்பில்தான் நான் கேட்கிறேன்; ‘பாவி’ என்றெல்லாம் நான் பேச மாட்டேன், ஆசிரியர் அய்யா அவர்களை வைத்துக்கொண்டு.
ஏனென்றல், ‘பாவி’யையும் நம்ப மாட்டார்; பார்ப்பானையும் நம்பமாட்டார். அவர் நம்புவதெல்லாம் பகுத்தறிவைத்தான்.
நான் நம்புவது சாபத்தை – சார், அவர்கள் ‘சாபம்‘ விட்டால் பலிக்கும்; நான் ‘சாபம்‘ விட்டால் பலிக்காதா?
நான் உண்மையைத் தவிர எதையும் சொல்ல மாட்டேன். வெளிப்படையாகத்தான் இருப்பேன். கொஞ் சம் முரடனாக இருப்பேன் என்று சொல்கிறார்களே, அது சரிதான்.
நான் எப்பொழுது முரடனாக இருப்பேன் என்றால், தவறு நடக்கும்பொழுது முரடனாக இருப்பேன். அதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்னால்.
உங்களை எவராவது சீண்டினால் நான் சும்மா இருப்பேனா?
உங்களால் திருப்பி அடிக்க முடியாது; பலம் கிடை யாது. ஆனால், எனக்குப் பலம் இருக்கிறது, அவர்களைத் திருப்பி அடிப்பேன்.
அவனுடைய கையை வெட்டுவேன்;
இது என்னுடைய தர்மம்!
என்னுடைய கட்சித் தலைவரைத் தீண்டினால், என் கட்சித் தலைவரின் கிட்டே வந்தால், – எவனாவது ஒருவன் அய்யாவின்மேல் கையை வைக்க வந்தால், அவர் உயிருக்கு ஆபத்து என்றால், அவனுடைய கையை வெட்டுவேன். இது என்னுடைய தர்மம்.
எதற்காக? அதன் நோக்கத்தை நீங்கள் நோக்க வேண்டும்.
அங்கே நிலையான கட்டமைப்பு இல்லை; நீர்க்குமிழி போன்று இருக்கின்ற இடம்; நூறாண்டு பழைமையும் கிடையாது.
இன்னொன்றை சொல்கிறேன்,
நாளைக்கு ஒன்றியத்தில் ஆட்சி நடத்தப் போகின்ற வர் இந்த மேடையில் இருக்கிறார், அண்ணன் அழகிரி அவர்கள்.
ஒன்றியத்தில் நிச்சயமாக
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்!
சிரிக்காதீர்கள், ஆட்சி நிச்சயமாக காங்கிரஸ் இயக் கத்திற்கு மீண்டும் வரும். நீங்கள் மட்டும் தமிழ்நாட்டில் 40-க்கு 40 இடங்களைக் கொடுங்கள்.
இந்த 40 இல்லாமல், ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க முடியாது. 40-க்கு 40-அய் அய்யா வாங்கிக் கொடுத்தால், அருமைத் திருமா வாங்கிக் கொடுத்தால், அழகிரி அவர்கள் வாங்கிக் கொடுத்தால், சி.பி.அய்., சி.பி.எம். சேர்ந்து இதற்காக உழைத்தால், நிச்சயமாக நாளை நமதாக இருக்கும்; 40-ம் நமதாக இருந்தால், ஒன்றிய அரசு நம்மைக் கேட்டுத்தான் எதையும் செய்யும். அன்றைக்கு யு.பி.ஏ. அரசு கேட்டுத்தானே செய்தது.
தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையில் நான் சொல்கிற திட்டம் – ஆடம்ஸ் பாலம்; 32 கிலோ மீட்டரில், நமது 16 கிலோ மீட்டர்; இலங்கைக்கு 16 கிலோ மீட்டர்.
நாளைக்கு சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்திற்குச் செல்கிறார், அவர் சொல்கிறார் இராமர் பாலத்தை, புராதனச் சின்னமாக அறிவியுங்கள் என்று.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி
எதுவரை அறிவிக்க முடியும்!
சரி, புராதனச் சின்னமாக அறிவிக்கலாம். எதுவரை அறிவிக்க முடியும்? இந்திய அரசமைப்புச் சட்டப்படி எதுவரை அறிவிக்க முடியும்? 16 கிலோ மீட்டர் வரைதானே அறிவிக்க முடியும். மீதம் உள்ள 16 கிலோ மீட்டரை யார் அறிவிப்பார்கள்? முடியாது அல்லவா!
அப்படியானால், இலங்கைக்குச் சொந்தமான 16 கிலோ மீட்டரை யார் அறிவிப்பது?
அறிவிக்க முடியாது. கவைக்கு உதவாத விஷயங் களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையிடம் கெஞ்சிக் கூத்தாடி அதற்கான அனுமதியை நான் வாங்கினேன்!
ஒட்டுமொத்தமாக பாலத்தை புராதன நினைவுச் சின்னம் என்பதற்கு மொத்த கட்டமைப்பு இவர்களிடம் இல்லை. நான் போடுகிற 300 மீட்டர் அகலத்திற்கே, இலங்கையிடம் கெஞ்சிக் கூத்தாடி அதற்கான அனுமதியை நான் வாங்கினேன்.
ஆதாம் பாலத்தில் 300 மீட்டர்தான் நான் உடைக் கிறேன். அதையே நான் கெஞ்சிக் கூத்தாடி வாங்கினேன். நீ எப்படி 16 கிலோ மீட்டருக்கு அனுமதியை வாங்குவாய்? அவர்களுடைய அனுமதி இல்லாமல் எப்படி நீ புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க முடியும்?
பெண்கள் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் –
பாதி புனிதவதி; மீதி பாதி கெட்டவர்
என்று சொல்ல முடியுமா?
ஒரு பெண் தவறு செய்து விடுகிறார். அப்படி தவறு செய்தவரை நீங்கள் ஒரு பெயர் கொண்டு கூப்பிடுவீர்கள். அந்தப் பெண் பாதி புனிதவதி; மீதி பாதி கெட்டவர் என்று சொல்ல முடியுமா?
போனது, போனதுதானே!
தந்தை பெரியார் பிறந்த நாளில், 2016, செப்டம்பர் 17 ஆம் தேதி ஏதாவது ஒன்று செய்யவேண்டும் என்று நினைத்தோம்.
நர்மதா அணைத் திட்டம் குறித்து, பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெறுகின்றன. 4, 5 மாநிலங்கள் அதில் அடக்கம்.
தீர்க்க முடியாத பிரச்சினையானது; எப்படியென்றால், பொதுநல வழக்கை ஒருவர் தொடர்ந்திருந்தார்.
நர்மதா அணைத் திட்டம்குறித்த வழக்கும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!
அந்த வழக்கை தள்ளுபடி செய்யும்பொழுது, உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்தது.
When such projects are undertaken and hundreds of crores of public money is spent, individual or organisations in the garb of PIL cannot be permitted to challenge the policy decision taken after a lapse of time. It is against the national interest and contrary to the established principles of law that decisions to undertake developmental projects are permitted to be challenged after a number of years during which period public money has been spent in the execution of the project.
இதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
பணம் செலவழித்துவிட்ட பிறகு, ஓர் அமைச்சகம் கொள்கை முடிவு எடுத்த பிறகு, திட்டத்தை தொடங்கிய பிறகு, அந்தத் திட்டத்தை நிறுத்துவதற்காக வழக்குப் போடுவது நியாயமில்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது.
பொதுநல வழக்குத் தொடர்ந்தால்,
அந்த வழக்கு நிற்குமா?
அப்படியென்றால், நம்முடைய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் என்ன பதில் வரும்? பொதுநல வழக்குத் தொடர்ந்தால், அந்த வழக்கு நிற்குமா?
மேற்கண்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றே போதும்.
ஆக, இப்படி பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். நேரம் போதாது; நானும், அண்ணன் ஆசிரியர் அவர்கள் மட்டும் பேசினால் பரவாயில்லை. நிறைய தலைவர்கள் வந்திருக்கிறார்கள்; வரமாட்டாங்க என்று நினைத்த தலைவர்கள் எல்லாம் வந்திருக் கிறார்கள்.
தோழமை இயக்கத்தினுடைய ஒவ்வொரு தலைவருக்கும் தனிச் சிறப்பு உண்டு!
இப்படித்தான் இருக்கவேண்டும் தமிழ்நாடு. என்றைக்கும் மேடை நிறைந்த தலைவர்கள் கூட்டம் நம்மிடம் இருக்கிறது. இதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், இன்றைக்கு நம்மிடம் இருக்கின்ற ஒற்றைத் தலைமை – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை யில் இருக்கின்ற ஒற்றைத் தலைமை – ஆசிரியர் அய்யா அவர்களுடைய அரும் ஆற்றலால், பெருந்தன்மையால், இயக்கப்படுகின்ற தோழர்களை இயக்குங்கள் – இந்தத் தோழமை இயக்கத்தினுடைய ஒவ்வொரு தலை வருக்கும் தனிச் சிறப்பு உண்டு.
திருமா அண்ணன் பேசியதை, அழகிரி அண்ணன் பேசவில்லை; அழகிரி அண்ணன் பேசியதை, மற்ற சி.பி.அய்., சி.பி.எம். பேசவில்லை. இது எப்படி முடிகிறது?
அவரவர்களுக்குள்ள தனித்தன்மை. அப்படி பேசு கின்ற ஆற்றலும், திறமையும், கடமையுணர்வோடும் இருக்கிறார்கள்.
அன்புத் தலைவர் தளபதி அவர்களுடைய ஆட்சியில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறும்!
இப்படி மாபெரும் தலைவர்கள் இருக்கின்ற தோழமை இயக்கத்தில், அடிமட்டத் தொண்டனாக இருக்கக்கூடிய நான், என்னுடைய அன்புத் தலைவர் தளபதி அவர்களுடைய ஆட்சியில், இந்தத் திட்டம் மிகச் சிறப்பாக எடுத்து நிறைவேற்றித் தருவது என் னுடைய கடமையாகும்.
சென்னையிலிருந்து கார் மூலமாக இராமேசுவரம் – தனுஷ்கோடிக்குச் சென்றேன். அப்பொழுதெல்லாம் ஒரு வழி சாலைகூட சீரானதாக இருக்காது. சாலை வழியாக போனால், காடும், கரம்பும்தான். வெயில் நன்றாக அடிக்கிறது. அங்கே ஒரு சிறிய கும்பல் அமர்ந் திருந்தது. அப்பொழுது நான் அமைச்சராக இருந்ததால், என்னுடைய காருக்குப் பின்னால், நிறைய கார்கள் வரும். நீங்கள் எல்லாம் போங்கள், நான் வருகிறேன் என்று சொன்னவுடன், எல்லா கார்களும் எனக்கு முன் சென்றுவிட்டன.
கொடி கட்டிய காரைப் பார்த்தவுடன், அங்கே அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து, ‘‘அய்யா, அய்யா’’ என்று சொல்லி, கும்பிட்டார்கள்.
‘‘என்ன என்னைப் பார்த்து அய்யா, அய்யா என்று சொல்கிறீர்களே’’, என்று கேட்டேன்.
‘‘நீங்கள் அமைச்சர் அல்லவா!’’ என்றார்கள்.
‘‘சரி, அமைச்சர் என்பதால், கும்பிடு போடுகிறீர்களா? சரி, பரவாயில்லை. நான் உங்களைப் போலத்தான், விவசாயிதான். இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்களே, என்ன செய்கிறீர்கள்?’’ என்றேன்.
வேலிகாத்தான் விறகு எரிந்து, காய்ந்து,
கரியான பிறகு…
‘‘வேலிகாத்தான் விறகை வெட்டிப் போட்டு, எரிய வைத்திருக்கின்றோம்’’ என்றனர்.
‘‘என்ன விறகு?’’ என்றேன். அப்பொழுது மதியம் ஒரு மணி.
‘‘வேலிகாத்தான் விறகு எரிந்து, காய்ந்து, கரியான பிறகு, அதை ஓட்டல்காரர்களிடம் கொடுத்து, காசு வாங்கி, எங்களுடைய குழந்தைகளுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுப்போம்’’ என்றனர்.
தமிழர்களுடைய நிலை எப்படி என்று பாருங்கள்.
அதைக் கடந்து கொஞ்சம் தூரம் சென்றேன்.
ஒரு பானையில் கம்பங்கூழ் வெந்து கொண்டிருந்தது. அருகே பனை மரத்தில் இருந்து ஒருவர் நுங்கு வெட்டி குழந்தைகளுக்குக் கொடுத்திருந்தார்.
நான் அங்கு சென்று, நுங்கு வெட்டி சாப்பிடுகிறீர்களா? எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன் என்றேன்.
அய்யா, இந்தாங்க எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
பரவாயில்லை, சும்மா கேட்டேன் என்றேன்.
இது என்ன கூழா? என்றேன்.
ஆமாங்க, மதியத்திற்கு பிள்ளைகளுக்குக் கூழ் கொடுத்துவிடுவோம் என்றார்.
நுங்கை வெட்டி எடுத்துக்கொண்டு போய் விற்று, அதை காசாக்கி, இரவு சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்வோம் என்றார்.
இது இரண்டாவது நிகழ்வு.
10 ஏக்கர் நிலம்
எங்களுடையதுதான் என்றனர்!
முதலில் பார்த்த கும்பலிடம், உங்களுடைய பேக் ரவுண்ட் என்னவென்று கேட்ட நேரத்தில், இங்கே இருக்கிற 10 ஏக்கர் நிலம் எங்களுடையதுதான் என்றனர்.
30, 40 ஏக்கர் நிலம்
பரம்பரை சொத்து என்றனர்
அடுத்து கூழ் காய்ச்சுகின்ற குழுவினரிடம் கேட்ட பொழுது, கிட்டத்தட்ட 30, 40 ஏக்கர் நிலம் பரம்பரை சொத்து என்று சொன்னார்கள்.
இவ்வளவு பேரும் சொத்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும், அது தேவையில்லாத சொத்து. 100, 500 ரூபாய்க்குக்கூட ஒரு ஏக்கர் நிலம் வாங்கமாட்டார்கள், அந்த சமயத்தில்.
அவர்களிடம் நான் கூழ் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தபொழுதே, மனதில் என்னவோ போன்று இருந்தது.
அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா?
என்று நினைத்தேன்
அன்றைக்கு நான் நாலைந்து இலாகாக்களுக்கு அமைச்சராக இருந்தேன். அந்த இலாகா ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி, அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா? என்று நினைத்தேன்.
அருகில் இருந்த என்னுடைய செயலாளரிடம் கேட்டேன்; அண்ணே, இப்படி செய்யலாம் என்றார்.
அன்று மாலையே விமானத்தில் டில்லிக்குச் சென்றோம். மறுநாள் காலையில் திட்டத்தைத் தயார் செய்தோம். ஆனால், எப்பொழுதுமே அதிகாரிகள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
நிதியமைச்சர் சொல்கிறார், முடியாது என்று.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரம் என்னிடம்தான் இருந்தது.
ஆனால், அது தேசிய நெடுஞ்சாலை இல்லையே – அதை தேசிய நெடுஞ்சாலை ஆக்கினால்தானே நீங்கள் சொல்வது நடக்கும் என்றனர்.
ஏழை, எளியவர்கள் எல்லாம் ஒரே நாளில், பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா!
உடனே நான் தனுஷ்கோடி வரைக்கும் திட்டம் வகுத்தேன். இவ்வளவு பெரிய நிலப்பரப்பு வைத் திருந்தவர்கள் எல்லாம், ஏழை, எளியவர்கள் எல்லாம் ஒரே நாளில், பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா என்று நினைத்தேன். அது என்னுடைய பேராசைதான்.
அந்தத் திட்டத்திற்குக் கையெழுத்துப் போட எந்த அதிகாரியும் ஒத்து வரவில்லை. நானும், என்னுடைய செயலாளரும் மட்டும்தான் அந்தத் திட்டத்தை வகுத்தோம்.
நான் பொறியியல் படிப்பு படித்தது அன்றைக்குப் எனக்குப் பயன்பட்டது. அந்தத் திட்டத்தை வகுத்து, நாங்களே கையெழுத்துப் போட்டு அனுப்புவோம். அதிகாரிகளிடமிருந்து மீண்டும் அந்தக் கோப்பு வரும்.
மூன்று பேர் கையெழுத்துப்
போடவேண்டும்!
அந்தத் திட்டத்தை நிறைவேற்றவேண்டுமானால், மூன்று பேர் கையெழுத்துப் போடவேண்டும்.
அங்கேதான் அழகிரி அண்ணன் இருக்கிறார். மூன்று அமைச்சர்கள் கையெழுத்துப் போடவேண்டும். ஆனால், மிகமிகக் கண்டிப்பாக இருக்கிறார் ஓர் அமைச்சர். அவருடைய பெயரை நான் சொல்ல மாட்டேன். அவர் அந்தக் கோப்பில் கையெழுத்துப் போடமாட்டேன் என்கிறார்.
திட்டக் குழுக் கையெழுத்துப் போடவேண்டும்; அட்மினிஸ்ரேட்டிவ் மினிஸ்டர் கையெழுத்துப் போடவேண்டும்.
அலுவாலியா சிங் என்று ஒருவர் இருந்தார். அவர் வீட்டிற்குக் காலையிலேயே சென்றேன்.
என்னங்க, காலையிலேயே வந்துவிட்டீர்களே பாலு, என்ன விஷயம் என்றார்.
காபி சாப்பிடுங்கள் என்றார்.
சரி, சாப்பிடுகிறேன்; இதைக் கொஞ்சம் பாருங்கள் என்றேன்.
என்ன? என்றார்.
இன்னும் 2, 3 மாதங்களில் தேர்தல் வரப் போகிறது என்றேன்.
தேர்தல் வந்தால் என்ன?
எனக்கு ஒரு திட்டத்தை நிறைவேற்றித் தரவேண்டும் என்றேன்.
முயற்சி செய் என்றார் அலுவாலியா!
செய்துவிடுவோம்; நீங்கள் கையெழுத்துப் போடுங் கள்; அவரிடம் கையெழுத்து வாங்கி வாருங்கள்; நானும் கையெழுத்துப் போடுகிறேன் என்றார்.
அவரிடமெல்லாம் கையெழுத்து வாங்க முடியாதுங்க என்றேன்.
முயற்சி செய் என்றார்.
நானும் முயற்சி செய்தேன், முடியவில்லை.
மறுநாள் அலுவாலியா அவர்களிடம் சென்று, ‘‘நீங்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றேன்.
எப்படி நிறைவேற்றுவாய்? என்றார்.
நான் நிறைவேற்றுகிறேன், நீங்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள் என்றேன்.
கையெழுத்துப் போட்டு – அதைப் பரிந்துரை செய்து அலுவலகத்திற்கு அனுப்பினேன்!
அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்; நானும் கையெழுத்துப் போட்டேன். அதைப் பரிந்துரை செய்து அலுவலகத்திற்கு அனுப்பினேன். கீழே எழுதினேன்.
Out of Three Ministers –
Administration Minister Sign, Planning Commissioner Sign, Out of Three, two has got majority hence these following project declared as National Highways
என்று எழுதினேன்.
அப்படி வந்ததுதான் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம்.
இப்பொழுது 5 கோடி ரூபாய்க்குக் கூட கொடுக்கமாட்டார்கள்!
தேசிய நெடுஞ்சாலையானவுடன், 2 ஆயிரம், 3 ஆயிரம் என்று விலை போன ஒரு ஏக்கர் நிலம்; ஒரு கோடி ரூபாய், 2 கோடி ரூபாய் ஆயிற்று; இப்பொழுது 5 கோடி ரூபாய்க்குக் கூட கொடுக்கமாட்டார்கள்.
ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடைய நிலம், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு ஆண்டில் ‘கோடீசுவரர்களாக’ ஆகினர்.
அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கச் செல்லும் பொழுது, என்னைப் பார்த்து சிரித்து, அய்யா, அய்யா என்று என்னை சூழ்ந்து கொள்வார்கள்.
ஒரு சிறிய சாலை அமைத்ததற்கே
ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது
அந்த அளவிற்கு அன்பும், பாசமும் கொண்ட இந்தத் தென் தமிழ்நாடு, பொருளாதார ரீதியாக, ஒரு சிறிய சாலை அமைத்ததற்கே ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.
நான் கொண்டு வந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறியிருந்தால், எப்படி இருந்திருக்கும்?
செல்வச் சீமான்கள் வாழுகின்ற பகுதியாக இந்தத் தென் தமிழ்நாடு மாறியிருக்கும்.
இன்றைக்கு அய்யாவினுடைய தலைமையில் நிறைவேறி இருக்கிறது!
அதற்காகத்தான் நண்பர்களே, அன்றைக்கு கண்ணகி, தன்னுடைய கணவன் நிரபராதி என்பதற்காக பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்தாளே, அதுபோல, உங்களிடம் வழக்குரைப்பதற்காகத்தான் வந்தேன். அந்த வழக்குரை காதை இன்றைக்கு அய்யாவினுடைய தலைமையில் நிறைவேறி இருக்கிறது.
ஒரு நல்ல முடிவு வரும்
நிச்சயமாக, ஒரு நல்ல முடிவு வரும் என்று எண்ணி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!
– இவ்வாறு மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தி.மு.க. தலை வருமான டி.ஆர்.பாலு அவர்கள் சிறப்புரையாற்றினார்.