– கி.வீரமணி
‘சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவில், அரசியல் கருத்தரங்கில் கலந்து உரையாற்றினேன். அங்குத் தங்களைப் பற்றியும், நமது இயக்க வரலாறு பற்றியும், அண்ணாவைப் பற்றியும், இன்றைய தமிழ்நாடு அரசு பற்றியும் அமெரிக்க மாணவர்களும் பேராசிரியர்களும் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்மவர்கள்தான் தமிழ்நாட்டில் நமது வளர்ச்சியை, சூரியனை மேகத்தால் மூட நினைப்பதுபோல், இருட்டடிப்புச் செய்ய முனைகிறார்களே தவிர, உலகின் பல்வேறு நாடுகளில் நமது பணியின் பயன்பற்றிப் பேசப்படுகிறது.
“சிகாகோ பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி, தங்கள் ஓயாத தொண்டு, தங்கள் காலத்திலேயே கொள்கைகள் பெற்றுவரும் வெற்றி குறித்தெல்லாம் குறிப்பிட்டேன். பேச்சுக்குப் பிறகு, தங்களைப் பற்றியும், தன்மான இயக்க வளர்ச்சி பற்றியும் நிறைய வினாக்கள் எழுப்பினார்கள். பதில்களை விளக்கமாக அளித்தேன்.’’
– தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழர் தம் தனிப் பெருந்தலைவரும், தன்மான இயக்கமெனும் நம் பெருங்குடும்பத்தின் வழிகாட்டியுமான தந்தை பெரியார் அவர்களுக்கு நியூயார்க் நகரத்திலிருந்து எழுதிய கடிதத்தின் ஒரு பகுதிதான் மேலே காட்டப்பட்டுள்ள வரிகள்!
உலக வரலாற்றில் வைர வரிகளால் எழுதப்பட வேண்டிய அளவுக்குத் தனிப் பெருஞ் சாதனைகளைக் குவித்துவரும் இயக்கம் நமது இயக்கம் – ஆம், திராவிடர் இயக்கம்!
உரிமைப் போர் நடத்தி வெற்றி பெறும் இயக்கம் மட்டுமல்ல இது; அறியாமையை, மூட நம்பிக்கையை தற்குறித்தனத்தை, மவுடீகத்தை, பழைமையை, வைதீகத்தை, பாசிசத்தைவிடக் கொடிய ஆரியத்தை எதிர்த்து, வெற்றிவாகை சூடிவரும் சமுதாயப் புரட்சி இயக்கமாகும் இது!
நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பற்பல வளர்ச்சிகள், உருமாற்றங்கள் முதலியன பெற்றாலும் திராவிட மக்களிடையே இன உணர்ச்சியையும், உரிமை வேட்கையையும் தன்மான உணர்வையும், சுதந்திரமாகச் சிந்திக்கச் செய்யும் ஆற்றலையும் வளர்க்க, அரை நூற்றாண்டுக்கு மேல் இவ்வியக்கம் செய்துள்ள சாதனை, சரித்திரப் புகழ் பெற்ற சாதனைகள் என்றால் அது மிகையாகாது!
எதிரிகள் நம் இயக்கத்தின் கொள்கைகளை இருட்டடித்தது ஒரு கட்டம்; பிறகு, அலட்சியப்படுத்தப் பார்த்தனர். இது இரண்டாவது கட்டம்.
விஷமப் பிரச்சாரம் செய்து, திரித்துப் பிரச்சாரம் செய்தனர். இது மூன்றாவது கட்டம்.
இப்போது எதிரிகள் எதிர்த்துப் பிரச்சாரம் செய்து, சரணாகதி அடைந்தாவது இதனை ஒழித்து விடலாமா என்று யோசிக்கின்றனர்.இது நான்காவது கட்டமாகும்.
உள் நாட்டிலேயே, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களை நாள்தோறும் சந்தித்து – பொதுக் கூட்டங்கள் மூலம் – அறிவுப் பிரச்சாரம், கொள்கைப் பிரச்சாரம் நடத்திப் புதுப் பாணி வகுத்ததே இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றிலேயே நமது இயக்கந்தான்!
அதற்கு முன் கூடுவார்கள் – சிறிய சிறிய மண்டபங்களில். வீதிகளிலும், தெருக்களிலும், பாதைகளிலும், கடற்கரைகளிலும், பூங்காக்களிலும் பத்தாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களைக் கூட்டி, அவர்களுக்கு அறிவு கொளுத்தும் பிரச்சாரத்தை ஊட்டும் முறை – தமிழ்நாட்டில் நமது இயக்கம் உண்டாக்கிய புதுமுறையாகும்.
வடநாட்டு மாநிலங்களில் இப்போதும் எல்லாம் “ஹால் மீட்டிங்குகள்’’தான். மிகப் பெரிய தேசியத் தலைவர்கள் வந்தால்தான் டில்லி, பம்பாய், கல்கத்தா போன்ற பெருநகரங்களில் மைதானப் பொதுக்கூட்டங்கள்!
இப்படிப் புதுமை வகுத்துங்கூட இங்குள்ள ஏடுகள், நமது கொள்கைகளை, இயக்கத்தினை இருட்டடிக்கவே செய்தனர். மக்கள் ஆதரவே இல்லாதவர்களுக்கு மலையளவு விளம்பரம் தரும் ஏடுகள்கூட. லட்சோபலட்சம் மக்கள் கூடும் நமது கூட்டங்களையோ, மாநாடுகளையோ, ஊர்வலங்களையோ விளம்பரப்படுத்துவதில்லை!
என்றாலும் தந்தை பெரியார் அவர்களோ, பேரறிஞர் அண்ணா அவர்களோ இப்போக்கு கண்டு தளரவில்லை; சலிக்கவில்லை. “ஊதுகிற சங்கை ஊதுவோம்; விடிகிறபோது விடியட்டும்’’ என்று இடைவிடாமல் எடுத்துக் கூறிக் கொண்டே வந்தார்கள். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகர்ந்துதானே ஆகவேண்டும்?
சுழன்றடித்த சுயமரியாதைச் சூறாவளியால் அறியாமையின், ஜாதி ஆணவத்தின் அடிபீடம் ஆட்டங்கண்டது.
டாக்டர் கலைஞர் அவர்கள் கவிதை நடையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பாடியதுபோல், “பாராட்டிப் போற்றிவந்த பழைமை லோகம், ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’’ என்றபடி, இடிந்துவிட்டது! அந்த இடிபாடுகளுக்கிடையே தோன்றியதுதான் பகுத்தறிவாளர் ஆட்சியான இன்றைய தி.மு.க. ஆட்சியாகும்!
பத்திரிகைகளின் கட்டுப்பாடான இருட்டடிப்பு, விஷமப் பிரச்சாரம் – இவைகளையும் தாண்டி இந்த இயக்கம் – திராவிடர் இயக்கம் உலக வரலாற்றின் ஒளிமிகுந்த பக்கங்களில் ஏற இருக்கிறது!
உலகம் இன்று இரண்டு பெரும் வல்லரசு அணிகளாக நிற்கின்றது. ஒன்று சோவியத் ரஷ்ய அணி. மற்றொன்று அமெரிக்க அணி. இவ்விரண்டு நாடுகளிலும் நம் இயக்கத்தைப் பற்றி, நமது அடிநாள் தொண்டினைப் பற்றி, நமது கொள்கைகள் எவ்வளவு புரட்சிகரமானது என்பதைப் பற்றி இப்போது அவ்விரு வல்லரசு நாடுகளின் வரலாறுகளும் பலமாகத் தெரிவிக்கின்றன!
லெனினையும், ஏங்கல்ஸையும் நமது இயக்கம் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்திற்று. அதே போல, அமெரிக்க இங்கர்சாலையும், ஆபிரகாம் லிங்கனையும் நமது இயக்கம் தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தியது!
உலகில் எங்குமில்லாத அளவுக்கு மூடநம்பிக்கைகள் பற்றிப் படர்ந்து கொண்டுள்ள இங்கு உலகில் எங்கும் காண முடியாத அருமையானதொரு கருத்துப் புரட்சி வெற்றி, ஆயுதம் ஏந்தாத மவுனப் புரட்சியாகவே சாதித்துக் காட்டி வருகிறோம்.
இதனால் உலகின் பார்வை நம் மீது இன்று வீழ்ந்து இருக்கிறது! பல மேல் பட்டப்படிப்பு ஆராய்ச்சியாளர்கள் நம்மை, நமது இயக்கத்தை, நாம் பெற்ற கொள்கை வெற்றிகளை மய்யமாகக் கொண்டு தங்களது ஆராய்ச்சியை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
திரு.ஹார்ட் கிரேவ் ஜூனியர் என்பவர் “திராவிடர் இயக்கம்’’ என்ற தலைப்பில் ஒரு சிறந்த நூலை 1967ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். அதன்மூலம் அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் நமது இயக்கம் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்!
டாக்டர் யூஜின் இர்ஷிக் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்து வரலாற்றுத் துறையின் துணைப் பேராசிரியர் அவர்கள் “தென்னிந்தியாவில் அரசியல் சமூகப் போராட்டங்கள் 1914 முதல் 1920 வரை – பார்ப்பனரல்லாதவர் இயக்க வரலாறு’’ என்ற தலைப்பில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சி செய்து, தமிழ்நாட்டிலும், இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் மியூசிய நூலகத்திலும் உழைத்து சிறப்பான ஒரு நூலை எழுதி, இவ்வியக்கத்தின் சாதனை மகத்தானது என்று காட்டியுள்ளார்!
மலேசியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான திரு.விசுவநாதன் அவர்கள் ஆஸ்திரேலியாவில், ஒரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் அவர் டாக்டர் (பிஎச்.டி.) பட்டம் பெறுவதற்குத் தேர்ந்தெடுத்துக் கொண்ட தலைப்பு, “தமிழ்நாட்டில் வட்டார இயக்கங்களின் வரலாறு (History of Regional movements in Tamil Nadu)” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து வருகின்றார்.
அதுபோலவே தற்போது, சுவீடன் நாட்டைச் சார்ந்த குமாரி.அனிதாடேல் அம்மையார் (Miss Anita Deal) தரங்கம்பாடியில தங்கி, நமது இயக்கம் பற்றி மேலும் ஒரு தீவிர அராய்ச்சியில் (ஆராய்ச்சிப் பட்டத்தைப் பெறுவதற்கு) ஈடுபட்டுள்ளார்!
திருமதி பார்னெட் (Mrs.Barnet) என்ற ஒரு நீக்ரோ அம்மையாரும் இப்படி ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் சில பல காலம் இங்கிருந்து விட்டுப் பிறகு அங்கே போயிருக்கிறார்!
பேரறிஞர் அண்ணா அவர்கள் 1968இல், அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ‘சப் ஃபெலோ ஷிப்’ பெற்று, நமது இயக்கத்தினைப் பற்றியும், அதன் தன்னிகரற்ற சாதனைகளையும் பற்றி எடுத்துரைத்தார்கள்.
நமது முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த போதும், உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட போதும், அண்மையில அமெரிக்காவிற்குச் சென்று, சிக்காகோ பல்கலைக்கழகம் நியூயார்க், வரவேற்பு போன்ற பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட போதும் நமது இயக்கம்; கொள்கைகள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியவர்களது சாதனை, தி.மு.க. ஆட்சியின் வெற்றிகள் – இவைகளையெல்லாம் மிகவும் தெளிவுடன் குறிப்பிட்டுவிட்டு திரும்பி இருக்கிறார்கள்!
இன்று நமது இயக்கம்,கொள்கை நமது தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், வடநாட்டு மாநிலங்களில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பரவிப் புகழ் ஈட்டுவனவாய் அமைந்திருக்கின்றன!
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறை சேற்றால் தாமரையின் வாசம் போமோ? என்றார், புரட்சிக்கவிஞர்!
ஆம்; கட்டுப்பாடான இருட்டடிப்பு என்ற காரிருள் இப்போது விலகி வருகிறது! அறிவியக்கம் என்ற நம் உதய சூரியன் தன் ஒளிக்கதிர்களைத் திசையெட்டும் பரப்பி வருகிறான்! நம் இதயங்கள் பெருமிதத்தால், மகிழ்ச்சியால் விம்முகின்றன!
நன்றி: தமிழர் தலைவர் கி.வீரமணி – முரசொலி மலருக்கு எழுதிய கட்டுரை (1972)