வலசக்காடு பூ.அரங்கநாதன் பெருமிதம்…
சிதம்பரம் கழக மாவட்டத்தின் பொதுக்குழு உறுப்பினராக தற்போது இயக்கப் பணியாற்றி வரும் 83 வயதை கடந்த வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த பூ. அரங்கநாதன் சாலை ஆய்வாளராக நீண்ட காலம் விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றியவர். விழுப்புரம் பகுத்தறிவாளர் கழக செயலாளர், பகுத்தறிவாளர் கழக வட்ட அமைப்பாளர், கீரப்பாளையம் ஒன்றிய தலைவர், வலசக்காடு கிளைக் கழகத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். வளவனூரில் அவர் பணியாற்றிய காலம் இயக்கப் பணியில் சிறப்பாக தொண்டாற்றிய காலமாகும்.
“மதுரையில் ஈழ ஆதரவு மாநாடு பற்றிய வழிநடை பிரச்சார பயண குழுவினர் வளவனூர் வருகை தந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பார்ப்பனர்கள் வசித்த தெருவில் தகராறு ஏற்பட்டது. அதன் விளைவாக பார்ப்பனர்கள் ஒருங்கிணைந்து மவுன ஊர்வலம் நடத்தினர். சங்கராச்சாரியை வரவழைத்து வீரவாஞ்சி பட்டம் கொடுத்தனர். எங்களைப் பற்றியும் கழகத்தைப் பற்றியும் தாறுமாறாக பேசினர். செய்தி அறிந்த கழகத் தலைவர் வழக்குரைஞர் வீரசேகரனை அனுப்பி வைத்து எங்களுக்கு வழிகாட்டுதல் செய்தார். பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க நாமும் ஒரு கூட்டம் போட வேண்டும் தலைவரை அழைத்து என்று முடிவு செய்தோம். புதுச்சேரிக்கு வந்திருந்த தலைவரை (ஆசிரியரை) நேரில் சென்று பார்த்து நடந்த விபரங்களை கூறினோம். அவரும் பொதுக்கூட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்தோம். ஆனால், அப்போது இருந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு நம்முடைய கூட்டத்தை நடக்க விடாமல் செய்வதற்காக காவல்துறை மூலமாக 144 தடை உத்தரவை பிறப்பிக்க செய்தார். நீதிமன்றத்தின் மூலம் நாமும் முயற்சி செய்து ஊர்வலத்தை நடத்தாமல் பொதுக்கூட்டத்தை மட்டும் நடத்துவதற்கு அனுமதி பெற்றோம். சுடுகாட்டுக்கு பக்கத்தில் அனுமதி கொடுத்தார்கள். அப்போதைய தி.மு.க. மாவட்ட செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் பெரிதும் உதவினார். கூட்டத்தை சிறப்பாக நடத்தினோம். பார்ப்பனர்களின் திமிர் அடக்கப்பட்டது. வளவனூரில் கழகத்தின் பல்வேறு பேச்சாளர்களை அழைத்து ஏராளமான கூட்டங்களை நடத்தியிருக்கிறோம்” என்றார்.
இயக்கத்தில் தாங்கள் எப்படி சேர்ந்தீர்கள்? தொடக்க கால பணி பற்றி கூறுங்கள் என்று கேட்டபோது, பதினோராம் வகுப்பு படித்தபோது இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. சேங்கனூர் காளி எனும் தோழர் எங்கள் ஊரில் (கொண்டாயிருப்பு) கோயில் கட்டுவதற்காக வந்திருந்தார். இரவுப் பொழுதில் அவருடன் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. அவர் பெரியாரின் கொள்கைகளை கருத்தாகவும் பாடலாகவும் கூறினார். அதில் ஏற்பட்ட ஈர்ப்புதான் என்னை இயக்கவாதி ஆக்கியது. அதன் பிறகு இயக்கத்தை தொடங்குவதற்காக கழக கொடியினை ஏற்றுவதற்காக அணைக்கரை சென்று டேப் தங்கராசு அவர்களை அழைத்தோம். தொடர்ந்து அவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக பாவலர் பாலசுந்தரம் அவர்களை அழைத்து முதல் கூட்டம் நடத்தினோம். அடுத்து, என்.சி.ராசன் கலைக் குழுவினரின் கலா நிகழ்ச்சி நடத்தினோம். எஸ்.டி.விவேக்கை அழைத்து கூட்டம் நடத்தினோம். இப்படியாக எனது தொடக்க கால இயக்கப் பணி அமைந்தது.
குடந்தையில் மயிலாடுதுறையில் இங்கிருந்து மிதிவண்டி மூலமே சென்று தந்தை பெரியாரின் பேச்சை கேட்டது என் உள்ளத்தில் ஆழ்ந்த கொள்கை பற்றுதலை வலிவை ஏற்படுத்தியது. 1960இல் தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்பு போராட்டம் எங்கள் ஊரில் நடத்தினோம். நான் சிறுவனாக இருந்த காரணத்தால் என்னை காவல்துறையினர் கைது செய்யாமல் விட்டு சென்றனர். தொடர்ந்து ஏராளமான இயக்கப் பணிகள் பல கிராமங்களில் 1962 முதல் சாலை ஆய்வாளராக கண்டரக்கோட்டையில் கழக கூட்டம் நடத்தினோம்.
அடுத்து வளவனூருக்கு மாற்றலாகி சென்ற பிறகு விழுப்புரத்தில் தந்தை பெரியாரை அழைத்து கூட்டம் நடத்தினோம். வளவனூரில் தாமு, கிருஷ்ணன், மணி, ராஜாராம் என பல தோழர்கள் என்னோடு இணைந்து பணி செய்தனர். பொற்காலம் போல் இயக்கப் பணியாற்றிய காலம் அது. மு.ராமச்சந்திரன், கலைச்செல்வன், புலவர் ஜானகிராமன், திரு. பாண்டியன், கஜேந்திரன் மாதிரி மங்கலம் தண்டபாணி, விட்டல் நாதன் என்று ஏராளமான தோழர்கள்.
வலசகாட்டில் தங்கள் பணி பற்றி கூறுங்கள் என்று வினவியதும், புன்னகையோடு கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். ஆசிரியர் அவர்களை அழைத்து ஊரில் திருமணம் நடத்தியது – எங்கள் குடும்பத்தில் திருமணம் நடத்தியது, முரசொலி முகிலன் கலை நிகழ்ச்சி நடத்தியது – பேராசிரியர் இறையனாரை அழைத்து இராமாயண விளக்க பிரச்சாரம் நடத்தியது – நாடகம் போட்டது என்று தன்னுடைய பணிகளை அடுக்கிக் கொண்டே போனார்.
தற்போதைய விருப்பம் பற்றி கூறுங்களேன் என்றதும், “எனது கிராமத்தில் தந்தை பெரியாருக்கு சிலை வைப்பதும் பெரியார் படிப்பகம் அமைப்பதும் அவசியம் என கருதுகிறேன். அதற்கான பணிகளை செய்வதே தற்போதைய எனது ஆசை. தமிழர் தலைவர் ஆசிரியரின் அதிகபட்ச உழைப்பு, ஓய்வில்லாப் பயணம் இயக்கத்தின் பால் ஏராளமான இளைஞர்களை ஈர்த்து வருவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
மதவெறி அமைப்புகளுக்கு மாற்று திராவிடர் கழகமே, திராவிடர் கழகத்தால் மட்டுமே பழைமையை, வைதிகத்தை, மத வெறியை, ஜாதியத்தை எதிர்த்து முறியடிக்க முடியும். கிடைப்பதற்கு அரிய ஆசிரியர் தலைமை அதற்கு உதவும். கிராமப்புறங்களை குறிவைத்து இயக்கப் பிரச்சாரங்களை இன்னும் வலுவாக வேர் பிடிக்க செய்ய வேண்டும்” என்பது என் கருத்து.
தோழர் அரங்கநாதனின் திருமணம் சீர்திருத்த சுயமரியாதைத் திருமணமாகவே நடைபெற்றது. அவருக்கு நாலு பிள்ளைகள். தமிழ்மணி, அன்னை மணி என்று இரண்டு மகள்களும், வீரமணி, கருணாநிதி என்று இரு மகன்களும் இருக்கிறார்கள். அனைவரும் இயக்க கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படக் கூடியவர்களே ஆவர்.
– நேர்காணல் செய்தவர்:
முனைவர் துரை. சந்திரசேகரன்,
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்