சென்னை, பிப்.5 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.18.38 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றியகல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள ராணி லட்சுமி பாய் தற்காப்பு கலை பயிற்சி திட்டத்தின் கீழ், 2015-ஆம் ஆண்டு முதல் அரசு நடுநிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான (2022-2023) தற்காப்பு கலை பயிற்சிக்காக 6,744 நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10.11 கோடி நிதியை திட்ட இயக்குநரகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல 5,519 மேல்நிலைப் பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சிக்காக ரூ.8.27கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்க வேண்டும். பயிற்சியாளர்கள் ஊதியம் மற்றும் மாணவி களுக்கான சிற்றுண்டி செலவினத்தை வழங்கப்பட்டுள்ள நிதி மூலம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியில், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக, மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருட்களைக் கொண்டு தங்களை தற்காத்துக் கொள்வது தொடர்பாக பயிற்சிகளைக் கற்றுத் தர வேண்டும். இது சார்ந்து உரிய நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.