சென்னை, பிப். 5- பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடிக் கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
இரிடியம் என்பது ஒரு மிகவும் கடினமான தன்மை கொண்ட உலோகம் மட்டுமே, அரிதாக கிடைத்தாலும் இது விலைமதிக்க முடியாத உலோகம் அல்ல, மேலும் இத்தனி மத்திற்கு எந்த ஒரு சிறப்பு குணமும் கிடையாது.
சேலம், கோவை போன்ற மாவட்டங்களில் சிலர் ரூ.40 கோடி வரை கூட இரிடியம் கும்பலிடம் ஏமாந்துள்ளனர். கடந்த ஆண்டு திரைப்பட நடிகர் விக்னேஷ் இரிடியம் மோசடி கும்பலிடம் ரூ. 1.5 கோடி ஏமாந்துள்ளார். ஒன்றுமில்லாத ஒரு இற்றுப்போன பழைய சொம்பை தெய்வ அருள் கொண்ட இரிடியம் என்று விற்கின்றனர். இதனையும் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் 50 ரூபாய்க்கூட பெறாத பொருளை பல கோடிகளில் வாங்குகின்றனர்.
இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடிக் கும்பல் ஏமாற்றி வருவதாக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அக்கும்பல் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபடு வதாக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இது தொடர்பாக சேலம் கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கேரளாவிலிருந்தும் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.