பொதுத் துறைகள் தனியார்த் துறைக்குத் தாரை வார்க்கப்படுகின்றன
தனியார்த் துறையிலோ இட ஒதுக்கீடு கிடையாது!
பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி
பெருந்திரள் கிளர்ச்சியை நடத்திடுவோம்!
கோபிசெட்டிபாளையம், பிப்.5 பொதுத் துறைகள் தனியார்த் துறைக்குத் தாரை வார்க்கப்படுகின்றன; தனியார்த் துறையிலோ இட ஒதுக்கீடு கிடையாது! பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பெருந்திரள் கிளர்ச்சியை நடத்திடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
நேற்று (4.2.2023) கோபிசெட்டிபாளையத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
சுற்றுப்பயணத்தினுடைய நோக்கம் என்ன?
செய்தியாளர்: சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பயணத்தினுடைய நோக்கம் என்ன? எத்தனை மாவட்டங்களில், எத்தனை நாட்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவு நாளினையொட்டி (3.2.2023) ஈரோட்டில் தொடங்கப்பட்டு, அன்னை மணியம் மையார் அவர்களுடைய பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதி நிறைவடையவிருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கிற அத்துணை மாவட்டங் களிலும் நாங்கள் ஒரு பெருநகரம், இன்னொரு பெரிய கிராமம் இவற்றை உள்ளடக்கி, நாளொன்றுக்கு இரண்டு பொதுக்கூட்டங்கள் – அதற்கு முன்பாக கழகத் தோழர்கள் பிரச்சாரம் செய்வார்கள். நான் இறுதியில் பரப்புரை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
முதல் கூட்டம் கடந்த 3.2.2023 அன்று குமார பாளையத்தில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தையும் அதில் இணைத்துச் செய்தோம்.
இன்றைக்குக் கோபிசெட்டிபாளையம் – நாளைக்குக் கோவையில் கூட்டம் முடித்து, காரமடைக்குச் செல்ல விருக்கிறோம். இப்படி தொடர்ந்து ஒரு 56 கூட்டங்களை நடத்தவிருக்கின்றோம்; சுமார் 40 நாள்களுக்குமேலாக இந்தச் சுற்றுப்பயணம் நடைபெறவிருக்கிறது.
இடையிடையே ஒரு சில நாட்கள் மட்டுமே விடுமுறை போன்று எடுக்கவிருக்கிறோம். ஓட்டுநர்கள், மற்ற தோழர்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக.
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு
வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்
எங்களுடைய சுற்றுப்பயணத்தின் நோக்கம், ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சாதனைகளை விளக்கிட வேண்டுமென்பதாகும். அந்த ஆட்சிக்குத் தடையாக இருக்கக் கூடிய தடைக்கற்கள், தடங்கல்கள் எப்படிப்பட்டவர்களால் உருவாக்கப்படுகிறது என்ப தைப்பற்றிய – பொதுமக்களுக்கு விளக்க உரையும் எங்களது பயணத்தில் அமையும். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்ற மக்களுக்குப் பயன்படும் திட்டத்தை முடக்க, ராமர் பாலம் என்ற ஒரு புரளியைக் கிளப்பி, அந்தத் திட்டத்திற்குத் தடையாணை பெற்று நிறுத்தினர். 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் செல வழித்து, இன்னும் 23 கிலோ மீட்டர் பணிகளே மீதமுள்ள நிலையில், அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், இலட்சக்கணக் கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத் திருக்கும். தென் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கும். வேலை வாய்ப்புகள் செழுமையாக ஆகியிருக்கும்.
அதேபோல, இந்திய நாட்டினுடைய பாதுகாப்பும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின்மூலம் உரு வாகக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எரிபொருள் சிக்கனமும் ஏராளமாகக் கிடைத்திருக்கும்.
இப்படி பல்வேறு வகையான நன்மைகளை உள்ள டக்கிய ஒரு திட்டத்தை, வெறும் மூடநம்பிக்கையை வைத்துக் கொண்டு, இல்லாத ஒன்றைச் சொன்னார்கள்.
நாடாளுமன்றத்திலேயே மோடி அவர்களுடைய அரசில் அங்கம் வகிக்கிக் கூடிய அமைச்சரான ஜிதேந் திர சிங், மிகத் தெளிவாக ராமர் பாலம் இருந்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதைத் தெளிவு செய்த பிறகு, இன்னமும் அந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்தாமல், விரைவாக முடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்கள் மத்தியில் அந்தப் பிரச்சாரத்தை செய்வோம்.
அரசமைப்புச் சட்டத்தினுடைய தத்துவங்களுக்கும், சமூகநீதிக்கும் விரோதமானது!
அதேபோல, சமூகநீதிக்கு எதிரான பல்வேறு நிலைப் பாடுகளை ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டி ருக்கிறது. அதில் ஒன்றுதான், உயர்ஜாதியில் பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு என்று சொல்வது, அரசமைப்புச் சட்டத்தினுடைய தத்துவங் களுக்கும், சமூகநீதிக்கும் விரோதமானதாகும்.
அதேபோல, உச்ச, உயர்நீதிமன்றங்களில் ஏரா ளமான நீதிபதிகள் பதவியிடங்கள் காலியாக உள்ளன. நியமனம் செய்யப்படும் நீதிபதிகள்கூட உயர்ஜாதி யினராகவே இருக்கிறார்கள். 77 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் உயர்ஜாதிக்காரர்கள் நீதிபதிகளாக இருக் கிறார்கள்.
ஏராளமான ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், தகுதி படைத்தவர்கள் இருந்தும்கூட, அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை.
கார்ப்பரேட் முதலாளிகளான
அம்பானி, அதானி, டாடா போன்றவர்களுக்கே கொடுக்கிறார்கள்
அதேபோல, பொதுத் துறை நிறுவனங்களை யெல்லாம், தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசான மோடி அரசு. அதிலும் குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி, டாடா போன்றவர்களுக்கே வாய்ப்புகளைக் கொடுக்கிறார்கள்.
இதன்மூலமாக மக்கள் மிகப்பெரிய அளவிற்குப் பொருளாதார இழப்பிற்கு ஆளாகிறார்கள்.
இன்னொரு பக்கம் தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால், பொதுத் துறையாக இருக்கும்பொழுது கிடைத்த இட ஒதுக்கீட்டுப் பலன், தனியார்த் துறையாக அது மாற்றப்படும்பொழுது இல்லை என்பதையும் பொதுமக்களிடையே விளக்கி, தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதை யும் விளக்கிச் சொல்லவிருக்கின்றோம்.
இறுதியில் ஒரு பெருந்திரள் கிளர்ச்சியை நடத்துவதற்கு மக்களை ஆயத்தப்படுத்தவேண்டும்
இன்றைய திராவிட மாடல் ஆட்சி எப்படிப்பட்ட ஒரு சமூகநீதியையும், சுயமரியாதையையும் கடைப் பிடித்து ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படக்கூடிய ஓர் ஆட்சியாக இருக்கிறது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். அந்த ஆட்சியை நேரிடையாக எதிர்க்க முடியாதவர்கள், மறைமுகமாக, ஆளுநர் மூலமாக, மற்றவர்கள்மூலமாக ஒரு போட்டி அரசை நடத்துவதைப்போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் – ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடைச் சட்ட மசோதாவை இன்னமும் ஆளுநர் தாமதப்படுத்திக் கொண்டிருப்பது தவறு என்பதை மக்களுக்கு விளக்கி, இறுதியில் ஒரு பெருந்திரள் கிளர்ச்சியை நடத்துவதற்கு மக்களை ஆயத்தப்படுத்தவேண்டும் என்பதுதான் இந்தச் சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
எனவே, மக்களை ஆயத்தப்படுத்திய பிறகு, நாடு தழுவிய அளவில், மிகப்பெரிய ஒரு கிளர்ச்சியை உரு வாக்குவதற்கு, கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு உருவாக்குவதுதான் இந்தப் பயணத்தினுடைய நோக்கமாகும்.
கிராமப்புற நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை வெகுவாகக் குறைத்திருக்கிறார்கள்
செய்தியாளர்: ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், தனிநபர் வருமான வரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதுகூட, அதானி குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்ட கடன் போன்றவற்றை மக்களிடையே இருந்து மறைப்பதற்காகத்தான் என்று சொல்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: தனி நபர் வருமான வரம்பு 7 லட்சம் ரூபாய் என்று சொல்கிறார்களே, அது ”புண்ணுக்குப் புனுகு பூசுவது” போன்றதாகும்.
அதிலேகூட பல இடங்களில், பிராக்கட்ஸ் நிறைய இருக்கிறது. ‘விடுதலை’யில் இன்றைக்குக்கூட அறிக்கை எழுதியிருக்கிறேன்.
அதில், வறுமை ஒழிப்புத் திட்டமாக இருந்தால், கிராமங்களில்தான் வறுமை இருக்கிறது. அம்பானிக்கும், அதானிக்கும் இருக்கிற வறுமையை ஒழிப்பதற்காக அல்ல இந்த பட்ஜெட்.
பட்ஜெட் என்பது மக்களுக்காகத்தான். வாக்களித்த வர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள்தான்.
33 சதவிகிதம் கிராமப்புற நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை வெகு வாகக் குறைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த நிதியைக் குறைத்துக்கொண்டே வருகிறார்கள்.
ஒரு பக்கம் அது மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபொழுது உருவாக்கிய திட்டம் என்பதினால்.
இன்னொரு பக்கம் சமானிய மக்களுக்காகத்தான் பட்ஜெட். ஆனால், கிராம மக்களைப்பற்றியோ, சாமானிய மக்களைப்பற்றியோ அவர்கள் கவலைப் படுவதே இல்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருக்கிறார்களா?
அதேபோன்று, மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை வரும் என்று சொல்லி எவ்வளவோ நாட்களாயிற்று? அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருக்கிறார்களா? அதைப்பற்றி ஏதாவது கவலைப்படுகிறார்களா? என்ற வினாவிற்குப் பதில் இல்லை.
தமிழ்நாட்டையும் அவர்கள் பெரிய அளவிற்கு மதிக்கவில்லை; அதேநேரத்தில், ஏழை, எளியவர் களையும் அவர்கள் சிறப்பாக கவனத்தில் கொள்ள வில்லை. அல்லது சிறுபான்மை சமுதாய மக்களுக் காவது சிறப்பான பட்ஜெட்டை போட்டிருக்கிறார்களா? என்றால், அதுவும் இல்லை.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகப்பெரிய அளவிற்குக் குறைக்கப்பட்டு இருக்கிறது. அவர் களுக்குக் கொடுக்கப்பட்ட உதவித் தொகைகள்கூட ரத்து செய்யப்படக் கூடிய அளவிற்கு, நிதியைக் குறைத்திருக்கிறார்கள்.
இப்படி ஏராளமான செய்திகள் இருக்கின்றன. எல்லோருக்கும் தெரிந்த உலகறிந்த ஒரு செய்தி என்னவென்றால், இப்பொழுது ஒன்றியத்தில் நடை பெறுவது உயர்ஜாதிக்காரர்கள் ஆட்சி மட்டுமல்ல; கார்ப்பரேட் என்ற உயர்ரக பெரு முதலாளிகளின் ஆட்சிதான்.
அண்ணாமலையின் நிலை
பரிதாபமாக இருக்கிறது
செய்தியாளர்: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் பி.ஜே.பி. போட்டியிடப் போவதில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறதே?
தமிழர் தலைவர்: அண்ணாமலை, தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது, வளர்ந்திருக்கிறது என்று சொன்னார்; அவருடைய கட்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதற்கு இதைவிட நல்ல அருமையான சந்தர்ப்பம் வேறு எதுவும் இல்லை.
இன்னுங்கேட்டால், நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சொல்லி, அ.தி.மு.க.வை கீழே தள்ளி மேலே ஏறி நின்றார்கள்.
அதை நிரூபிக்க ஓர் அருமையான வாய்ப்பு வந்திருக்கிறது; அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிரூபிக்கலாம் .இன்னமும் கால அவகாசம் இருக்கிறது; அவரே இத்தேர்தலில் நிற்கலாம், அவருடைய கட்சி வேட்பாளராக. மற்றவர்களைவிட, தகத்தகாய எதிர்க்கட்சித் தலைவராக நான் இருக்கிறேன் என்று காட்டக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
ஏன் அதிலிருந்து பின்வாங்குகிறார் என்று தெரிய வில்லை மற்றவர்களை முன்னால் தள்ளி விடுகிறார்.
”புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது வந்து விழுங்கள்” என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணன் ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோன்று, அண்ணா மலையின் நிலை பரிதாபமாக இருக்கிறது; அதைவிட பரிதாபத்திற்குரியவர்கள் அவருக்குப் பின்னால் ஓடக்கூடிய அடமானப் பொருள்களான அ.தி.மு.க.
அண்ணா தி.மு.க.விலிருந்து அண்ணாவை இப்பொழுது நீக்கிவிட்டார்கள்; அடமானத் தி.மு.க.வாக இருக்கிறது. அந்த அடமானத் தி.மு.க. எப்பொழுது வெளியே வரப் போகிறது?
எங்களுக்குக்கூட மனசு சங்கடமாக இருக்கிறது; என்ன இருந்தாலும், எல்லோருக்கும் தாய்க்கழகம் நாங்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு தங்களுடைய குடுமிகளை ஒருபக்கத்தில் டில்லியில் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்; இன்னொரு பக்கத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. வழக்கு என்பது ”வக்கீல்களின் சொர்க்கமாக” இருக்கிறது
எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அவர்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில், அரசமைப்புச் சட்டத் தைப்பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்.
Indian Constitution is a Lawyers Paradise என்று. ”இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது வக்கீல்களின் சொர்க்கம் – அங்கே சென்றால், அனுபவிப்பதற்கு நிறைய இருக்கும்” என்பதுதான் அதனுடைய அர்த்தம்.
அதுபோன்று, இப்பொழுது அ.தி.மு.க. வழக்கு என்பது ”வக்கீல்களின் சொர்க்கமாக” இருக்கிறது.
செய்தியாளர்: குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஒன்றிய அரசு மூடி மறைக்கிறதா?
தமிழர் தலைவர்: பிபிசி நிறுவனம் என்பது நேர்மையான நிறுவனமாகும். அந்த நிறுவனத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்; கருத்துரிமையைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசுக்கு தாக்கீது அளித்திருக்கிறது. அந்த வழக்கில் ஒன்றிய அரசு என்ன பதில் கூறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
”கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை;” அந்த ஆவணப் படத்தைப் பார்த்துதான் எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என்ற நிலை இல்லை.
ஒரே ஒரு கேள்வியை நான் கேட்கிறேன்; வாஜ் பேயி பிரதமராக இருந்தபொழுது, மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். அந்த சம்பவங்கள் அப்பொழுதுதான் நடைபெற்றன.
”ராஜதர்மம் என்ற ஒன்று உண்டு; அந்த ராஜ தர்மத்தை முதலமைச்சர் கடைபிடிக்கவேண்டும்” என்று அன்றைய பிரதமர் வாஜ்பேயி சொன்னார்.
ஏன் சொன்னார்? எதற்காக சொன்னார்?
ஜார்ஜ பெர்னாண்டஸ் இராணுவ அமைச்சராக இருந்தபொழுது, எதற்காக ராணுவத்தை குஜராத்திற்கு அனுப்பினார்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை கிடைத்தால், பிபிசியின் ஆவணப் படம் சரியா? தவறா? என்பது தெளிவாகத் தெரியும்.
சாதாரணமாக கைப்புண்ணைக்கூட நீங்கள் மறைத்துவிடலாம்; ஆனால், மனப்புண்ணை ஒரு காலத்திலும் மறைக்க முடியாது. இன்றைக்கு இல்லா விட்டால், என்றைக்காவது ஒரு நாள் வெளியே தெரியும்.
உதாரணமாக, நாகசாகியிலும், ஹிரோஷிமாவிலும் அணுகுண்டு போட்ட ஜப்பான் மன்னிப்புக் கேட்டது.
மதமே கூட தன்னைத்
திருத்திக் கொண்டிருக்கிறது
இன்னுங்கேட்டால், கலிலியோவை தூக்கிலிட்ட அந்த கிறித்துவ மதம் – போப்பாண்டவர், கலிலியோ விற்குத் தண்டனை கொடுத்தது தவறு என்று சொன்னதுண்டு. மதமே கூட தன்னைத் திருத்திக் கொண்டிருக்கிறது.
எனவேதான், இங்கே சீப்பை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டால், திருமணம் நின்றுவிடாது.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.