சென்னை, அக். 31- பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க காவலர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க கோரியும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. கொடிக் கம்பத்தை காவல்துறையினர் அகற்றினர். அப்போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி, ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்ததாக பா.ஜ.க. மாநில திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவரான அமர் பிரசாத் ரெட்டியை கானத்தூர் காவலர்கள் அக்.21இல் கைது செய்தனர்.
இந்நிலையில் ஏற்கெனவே பதிவாகி இருந்த 2 வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்துள்ள காவலர்கள் அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் மீதுபொய் வழக்குகளைப்பதிவு செய்துஅவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும், எனவே தனது கணவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தடை விதிக்கக்கோரியும் அவருடைய மனைவி நிரோசா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.