புதுடில்லி, அக்.31 தமிழ்நாட்டிற்கு காவிரியில் நவம்பர் 15-ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கருநாடக அரசும் அந்த மாநில விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த 15-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் அக்.30-ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு கருநாடக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாட் டிற்கு காவிரி நீர் திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து மண்டியாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டதால் கடந்த 5 தினங்களாக 500 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 89ஆ-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டில்லியில் நேற்று (30.10.2023) நடைபெற்றது. காணொலி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் குழுவின் செயலாளர் டி.டி.சர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழ்நாடு அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலை வர் சுப்பிரமணியம் பங்கேற்றனர். கருநாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மய்ய வல்லுநர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கருநாடக அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு ஆகி யவை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் பேசும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழ்நாட் டிற்கு அக்டோபர் மாதம் வரை 140.099 டிஎம்சி நீரை கருநாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 56.394 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட் டுள்ளது. 83.705 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 18 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. விவசாய பாசனத்துக்காக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தமிழ்நாடு விவசாயிகளின் நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டுமா னால் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கருநாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும். அதேபோல நிலுவையில் உள்ள 83.705 டிஎம்சி நீரை திறக் கவும் வலியுறுத்த வேண்டும்” என கோரினார்.
இதற்கு கருநாடக அரசின் தரப்பில் கூறும்போது, ‘‘கருநாடகா வில் கடும் வறட்சி நிலவி வருகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் குறைந்த அளவிலேயே நீர் இருப்பில் உள்ளது. அணை களுக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. எனவே தமிழ் நாட்டின் கோரிக்கையை நிறை வேற்ற முடியாத நிலையில் கருநா டகா இருக்கிறது” என தெரிவிக்கப் பட்டது. இதை தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா கூறும்போது, ‘‘தமிழ்நாட்டின் விவசாய தேவைக்காக கருநாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து நவ.15 வரை விநாடிக்கு 2,600 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது அக்.31 முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,600 கனஅடி நீர் தமிழ்நாட்டிற்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என பரிந்துரை செய்தார்.
இதற்கு கருநாடகாவில் விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பி னரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். பாஜக, மஜத ஆகிய எதிர்க் கட்சியினர் காவிரி நீரை தமிழ் நாட் டிற்கு திறந்துவிடக்கூடாது என கருநாடக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
கருநாடக துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை பொறுப்பு அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது. கருநாடக அணைகளுக்கு நீர்வரத்து சுழியமாக இருக்கிறது. எனவே தமிழ்நாட்டிற்கு நீரை திறந்துவிட முடியாது. தற்போது அணைகளில் உள்ள நீரைக் கொண்டே அடுத்த ஆண்டு வரை குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டி யுள்ளது. இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு, அடுத்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த இருக்கி றோம்” என தெரிவித்தார்.