பல்லாவரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
சென்னை, பிப்.11 காதலர் தினத்தன்று பசு மாட்டைத் தழுவ வேண்டுமா? ஒன்றிய அரசின் கிறுக்குத் தனத்தைக் கண்டு உலகமே கைகொட்டி சிரித்ததால் – ஒன்றிய அரசின் ஆணை திரும்பப் பெறப்பட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (10.2.2023) பல்லாவரத்தில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
மனிதநேயத்திற்கே முரணானது!
செய்தியாளர்: பிப்ரவரி 14 மாடுகளைக் கட்டித் தழுவவேண்டும் என்ற அறிவிப்பை பல்வேறு எதிர்ப்புகளின் காரணமாக, பிராணிகள் நல வாரியம் வாபஸ் வாங்கியிருக்கிறதே, அது குறித்து தங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: நம் நாட்டில் மனிதர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதர்களைத் தொடக்கூடாத வர்களாக்கிவிட்டு, மனிதர்களை அருகில் வரக்கூடாத வர்களாக ஆக்கி விட்டு, மாடுகளை நாங்கள் கட்டித் தழுவுவோம் என்று சொல்வது இருக்கிறதே, அது மனிதநேயத்திற்கே முரணானது என்பதை எல்லோருமே இடித்துக் காட்டினார்கள்.
அந்த மாட்டிலேகூட, எருமை மாடு, காளை மாடு போன்றவற்றைப் பற்றி பிராணிகள் நல வாரியம் கவலைப்படாமல், பசு மாடுதான் வேதத்தில் ‘புனிதமானதாக’ சொல்லப்பட்டு இருக்கிறது என்ற காரணத்தினால், பிப்ரவரி 14 ஆம் தேதி பசு மாடுகளைக் கட்டித் தழுவவேண்டும் என்று ஓர் அறிவிப்பை கொடுத்தது. இதற்கு எங்களைப் போன்றவர்களுடைய எதிர்ப்பு மட்டுமல்ல; நாடு தழுவிய அளவிற்கு எதிர்ப்பு எழுந்தவுடன், உலக நாடுகள் கைகொட்டிச் சிரிக்கும் நிலையில், வேறு வழியில்லாமல் அவர்கள் இளைஞர்களைக் கொச்சைப்படுத்த இனிமேல் முடியாது; இளைஞர்களுடைய வாக்குகளும் மிக முக்கியம் என்று நினைத்திருக்கக் கூடும். ஆகவே, அந்த அறிவிப்பை அவர்கள் திரும்பப் பெற்றார்கள். இனிமேலாவது இதுபோன்ற கோமாளித்தனங்களைக் கைவிடவேண்டும்.
இதுபோன்று பல விஷயங்களில் அவர்கள் முன் யோசனையில்லாமல் நடந்துகொள்கிறார்கள்.
மதச்சார்பற்ற தன்மையை மீண்டும் மீறக்கூடாது என்பதற்கு இது ஒரு பாடம்!
அந்த அறிவிப்பை சொன்னது ஒன்றிய அரசினு டைய துறை – இது மதச்சார்பற்ற அரசு என்று அவர் கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதற்கே விரோதமாகும்.
இதிலிருந்து மதச்சார்பற்ற தன்மையை அவர்கள் மீறக்கூடாது என்பதற்கு மீண்டும் ஒரு பாடம் கற்றுக் கொண்டார்கள்.
ஆளுநர் ரகசியக் காப்பை மீறியிருக்கிறார்!
செய்தியாளர்: நாடாளுமன்றத்தில், கனிமொழி எம்.பி., அவர்கள் தமிழ்நாட்டின் 20 மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது என்று சொன்னதற்கு, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 15 மசோதாக்கள்தான் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: 15 மசோதாவோ, 20 மசோதாவோ அது முக்கியமல்ல; 15 மசோதாக்கள் என்றால் மட்டும் நிறுத்தி வைக்கலாமா?
அதில் மிக முக்கியமானது ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவாகும். அது கிடப்பில் போடப்பட்டதால், தற்கொலைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
அடுத்ததாக, அந்த மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைப்பதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இவர் என்ன ராஜ்பவன் செய்தித் தொடர்பாளரா? ஆளுநருக்கு மட்டும் ரகசியமாகத் தெரிந்த விஷயம்; அண்ணாமலைக்கு எப்படி தெரிந்தது? ஆளுநர் ரகசியக் காப்பை மீறியிருக்கிறார்; அவர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை உண்டா என்பதுதான் நம்முடைய கேள்வி.
சமூகநீதியை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம்!
செய்தியாளர்: உச்ச, உயர்நீதிமன்றங்களில் உயர் ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் கண்டித்தும், தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும் நாளை ஆர்ப் பாட்டம் நடத்துகிறீர்களே, அப்போராட்டத்தின் நோக்கம் குறித்து சொல்லுங்களேன்?
தமிழர் தலைவர்: சமூகநீதியைக் காப்பாற்றவேண்டியது நீதிமன்றம். பல நேரங்களில் நீதிமன்றத்தில், சமூகநீதியைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, வேறு விதமாக நடப்பதற்கு என்ன காரணம் என்றால், நீதிபதி நியமனங்களில் தொடர்ச்சியாக 77 சதவிகிதம் உயர்ஜாதிக்காரர்களாகவே நியமிக்கிறார்கள் என்று புள்ளி விவரம் வந்திருக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மத்தியில், தகுதி மிக்க வழக்குரைஞர்கள், சட்ட நிபுணர்கள் இருந் தாலும், அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகளை நியமனம் செய்தார்கள். அதிலேகூட 2 பேர் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதம் என்றால், அவர்களின் சதவிகிதத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் 32 இடங்களில், ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி, ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் இருக்கிறார். இது போன்ற சமூக அநீதி இருக்கிறது.
ஏன் இவர்களுக்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது? மாவட்ட நீதிபதி வரையில் இட ஒதுக்கீடு உண்டு என்றால், ஏன் உச்ச, உயர்நீதிமன்றங்களில் கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்முடைய கேள்வி.
எல்லா சட்டங்களும் இறுதியில் செல்லுமா? செல்லாதா? என்று முடிவு செய்யவேண்டிய இடம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்.
எனவேதான், அங்கே ஒரு ஜாதியினரின் ஆதிக்கம் இருந்தால், நீதி பாதிக்கப்படும். ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற நிலை – மனுநீதி வரக்கூடிய வாய்ப்பு இருக்கும்.
ஆகவேதான், சமூகநீதி அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அந்த அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டுதான் நீதிபதிகள் பதவியேற்கிறார்கள். எனவே, அவர்களு டைய நியமனங்களிலும் சமூகநீதி தழைக்கவேண்டும்; சமூகநீதிப்படி நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நாளை (11.2.2023) நடைபெறவிருக்கிறது. சென்னையில் என்னுடைய தலைமையில் நடைபெற விருக்கிறது.
தமிழ்நாடு முழுக்க மாவட்டத் தலைநகரங்களில் (11.2.2023) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில், தோழமைக் கட்சியினரும் பங்கேற்க உள்ளனர்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.