உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பானங்கள்
இந்த கோடை காலத்துக்கு ஏதுவாக சில வகை பானங்களை பருகுவதன் மூலம் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.
கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா (சி.எஸ்.அய்) அறிக்கையின் படி, மூன்று இந்தியர்களில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உப்பின் அளவை குறைக்கவும், அதிகம் சோடியம் உள்ளடங்கிய உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த கோடை காலத்துக்கு ஏதுவாக சில வகை பானங்களை தயாரித்தும் பருகி வரலாம். அவை உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.
மாதுளை சாறு:
பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாதுளம் பழத்தில் பொட்டாசியம் அதிகம் நிரம்பி உள்ளது. அதனால் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் மாதுளை சாறு பருகலாம். கிரீன் டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றை விட மாதுளை சாற்றில் மூன்று மடங்கு அதிக ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. தினமும் மாதுளை சாறு குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சியா விதை நீர்:
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்து உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. சியா விதைகள் கலந்த நீரை தயாரிக்கும் செயல்முறை எளிதானது. சியா விதைகளை தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பின்பு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி, பருகி விட வேண்டி யதுதான். ஒரு மாதம் தொடர்ந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காண்பீர்கள்.
ஆப்பிள் சிடேர் வினிகர்:
இதில் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளன. உடலில் இருந்து தேவையற்ற சோடியம் மற்றும் நச்சுப் பொருட்களை நீக்கும் தன்மையும் ஆப்பிள் சிடேர் வினிகருக்கு உண்டு. மேலும் ஆப்பிள் சிடேர் வினிகரில் உள்ள என்சைம்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீரில் சில துளிகள் ஆப்பிள் சிடேர் வினிகர் மற்றும் தேன் கலந்து குடித்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எலுமிச்சை சாறையும் பயன்படுத்தலாம்.
வெந்தய நீர்:
இந்த பானத்தில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து உள்ளது. வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை மட்டும் வடிகட்டி குடித்து வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். பல்வேறு நோய்களில் இருந்து விலகியும் இருப்பீர்கள்.