கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இம்மாதம் 27.2.2023 அன்று நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் – ஆதரவு திரட்டி வாக்குக் கேட்போரின் பணிகள் அதிவேகமாக நடைபெறுகிறது, மகிழ்ச்சி!
ஆனால், அண்மைக் காலத்திலிருந்து சில விரும்பத்தகாத கூத்துகளும், நிகழ்வுகளும் நடைபெறுவது நமது ஜனநாயகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
வாக்குச் சேகரிக்கச் செல்லும்போது வேட்பாளர்களும், ஆதரவாளர் களும் டீ போடுவது, தோசை சுடுவது, பரோட்டா போடுவது, வடை சுடுவது மற்றபடி காபி ஆற்றுவது, இஸ்திரி போடுவது போன்ற பணிகளைச் செய்து வாக்கு சேகரிப்பது தேவைதானா?
சட்டமன்றத்திற்கு இதற்காகவா வாக்காளர்கள், வெற்றி வேட் பாளர்களை அனுப்புகிறார்கள்?
அவர்களது பணி சட்டமன்றத்தில் விவாதிப்பதும், சட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளாக இருப்பினும் கடமை ஆற்றுவதற்குத் தானே!
இந்த விசித்திர விளம்பர வித்தைகள் தேவையா?
இவற்றை நிறுத்திவிட்டு, முறைப்படி வாக்காளர்களிடம், தங்களது கொள்கைகள், சாதனைகள், எதிர் வேட்பாளர் – கட்சியின் குறைகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்கலாமே!
பொது ஒழுக்கம் காப்பாற்றப்படவே நாம் இதனைச் சுட்டிக் காட்டுகிறோம்.
யாரையும் சங்கடப்படுத்த அல்ல; யாராவது வெளிநாட்டுக்காரர் பார்த்தால், இதுபற்றி என்ன நினைப்பார்கள் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்!
எனவேதான், அன்புடன் சுட்டிக்காட்டுகிறோம்!