புழல்,பிப்.15, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் புழல், அம்பத்தூர் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
புழல் காவாங்கரை பகுதியில் 14-02-2023 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்ற திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெ.பாஸ்கர் அனைவரையும் வர வேற்று பேசினார். மண்டல தலைவர் தி.இரா.இரத் தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், பொதுக்குழு உறுப்பினர்கள் விசயகுமார், கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் இரணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி கேயன், மாவட்ட மகளிரணி தலைவர் ராணி, மாவட்ட மகளிரணி செயலாளர் நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரா விடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற் றினார்.
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரையாற்றிட நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
விடுதலைக்கு 20 ஆயுள் சந்தாக்கள்!
ஆசிரியர் தனது உரையில், முன்னதாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் சுதர் சனம் விடுதலைக்கு 20 ஆயுள் சந்தாக்களை சேர்த் துக் கொடுத்துவிட்டு ஈரோடு பரப்புரைக்கு சென்றுவிட்ட தாக பேசியதால், அதை நினைவுபடுத்தி, ஏன் விடுதலை முக்கியம்? ஏன் விடுதலை நமது கொள்கை போர்வாள்? என்று பேசினார். அதற்கு எதிராக இருக்கும் பா.ஜ.க. பற்றி சொல்ல வந்தவர், ’கொள்கையை புரிந்து கொண்டு மக்கள் அந்தக் கட்சிக்கு செல்லவில்லை. பணபலத்தினால் செல் கிறார்கள். அங்குதான் இடங்களும் காலியாக இருக்கின்றன. தேடப்படும் குற்றவாளிகள் எல்லாம் இப்போது அங்குதான் இருக்கிறார்கள்’ என்றார். தொடர்ந்து எங்களை பொறுத்தவரையில் பஞ்சாயத்து உறுப்பினருக்கு நிற்க அனு மதிக்காதவர்கள். ஆகவே நாங்க புழலில் இருப்பதும் ஒன்றுதான். புழல் சிறையில் இருப்பதும் ஒன்றுதான்! என்று குறிப்பிட்டார். மேலும், ’இங்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வந்தி ருக்கிறோம்’ என்று முன்னோட்டமாக சில கருத்துகளைக் கூறி விட்டு, கூட்டத்தின் மய்யக்கருத்துக்கு வந்தார்.
திராவிடர் இயக்கம் 100 ஆண்டு களுக்கு முன்பிருந்த நிலையை எப்படி மாற்றியது? கல்வியைப் பெற்றுத் தரு வதற்கு எப்படியெல்லாம் போராடியது. வேலைவாய்ப்பு பெறுவதற்கு சமூக நீதி தத்துவத்தை கொடையாக கொடுத்து அதன் மூலம் கல்வி கற்றவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பைப் பெற்றுத்தந்தது? இப்போது ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டுள்ளது? திராவிட மாடல் அரசு சொன்ன வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றிக் கொண்டு வருகிறது? இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக்கு தொழிற்சாலைகள் பல கொண்டுவந்தாலும் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்பைக் கொடுப் பதற்கு இப்போதிருக்கும் வாய்ப்பு என்ன? என்கிற கருத்தமையத்தான் பேசி வருகிறார்.
சுதந்திர நாடா? சமத்துவ நாடா?
அந்த வகையில், ‘சுதந்திர நாடு என்கிறோம். ஆனால் சமத்துவ நாடாக இல்லையே’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதை எடுத்துரைத்தார். இதன் மூலம் இன்னும் மக்களுக்கு சமத்துவம் வரவில்லை என்பதை எடுத்துரைத்துவிட்டு, ஒன்றிய அரசு இப்போதும் செய்வதென்ன என் பதைச் சொன்னார். அதாவது, காதலர் தினமான பிப்ரவரி 14 க்கு எதிராக பரப்புரை செய்ய வேண்டும் என்ற கருத்தில் அரசு நிறுவனமான அனிமல் வெல்ஃபேர் வாரியமே “பசு அரவ ணைப்பு தினம் கொண்டாட வேண்டுமென்று ஆணை பிறப்பித்ததைச் சொல்லி, பசுவை அரவ ணைக்கிறான். ஆனால் மனிதனை தொடமாட் டேங்கிறான். ஆனால், சமூக ஊடகங்களில் எதிர்ப்பு அதிகமானதும் அந்த ஆணையை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இந்த வெற்றி 2024 லிலும் தொடர வேண்டும் என்றதும் மக்கள் பலத்த கையொலி கொடுத்து அதற்கு ஏற்பளித்தனர். அதைத் தொடர்ந்து தான், ‘படிக்காதேன்னு சொல்ல ஒரு மதம்! ஒரு கட்சி! என்னய்யா கொடுமை இது? என்று வேதனையோடு கேட்டார். இதற்கு ஆதாரமாக கோல்வால்கர் எழுதிய பார்ப்பன மதத்தின் வேதப்புத்தகமான மனுஸ்மிருதியில் உள்ளவற்றை பக்கம் சொல்லி படித்துக் காட்டினார். அத்தோடு விட்டுவிடவில்லை. மனுஸ்மிருதிக்கு எதிராக நாம் செய்திருக்கும் பரப்புரை ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை எடுத்துரைத்தார்.
மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க.!
திராவிட மாடலைப் பற்றி பேசும் போது, ’கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் திராவிட மாடல்’ என்றார். அதை நீதிக்கட்சியின் சர்.பிட்டி தியாகராயரை துணைக்கழைத்து பகலுணவு கொண்டு வந்தது எதற்காக என்பதைப் பற்றி சொன்னார். அந்தத் திட்டம் எப்படிப்பட்டது. அதையே கல்வி வள்ளல் காமராசர் எப்படிக் கையாண்டார். கலைஞர் அதில் பதித்த முத்திரை! இப்போது தளபதி மு.க. ஸ்டாலின் செய்துள்ள மகத்தான சாதனை! என்பவற்றை எல்லாம் பட்டியலிட்டார். இதனால் கல்வியில் நாம் எட்டியுள்ள உயரத்தை சுட்டிக்காட்டினார். மேலும், பெண் விடுதலையில் 1929 லிருந்து தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளதை சாதனையாகக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வஞ்சித்த பா.ஜ.க. அரசை, அவர்கள் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் முன் எடுத்துவைத்து அம்பலத்திப்படுத்தினார். அதற்கு திராவிட மாடல் அரசு முன்வைக்கும் சேது கால்வாய் எனும் தமிழன் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தி தமிழ் நாடு மட்டுமல்ல, இந்திய ஒன்றியமே பயன்பெறும் என்று கூறு உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் இராஜேந்திரன், தி.மு.க.வட்ட செயலாளர் சந்துரு, தி.மு.க.24 ஆவது வட்ட செயலாளர் சுந்தரேசன், ம.ம.க.மாநில அமைப்பு செயலாளர் ஷேக் முகமது அலி, சி.பி.அய். மாதவரம் பகுதி செயலாளர் கமலநாதன், சி.பி.அய். பகுதி குழு உறுப்பினர் மோகன், புழல் ஒன்றிய செயலாளர் உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் பொறுப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் புழல் நகர கழக தலைவர் சோமு நன்றி கூறினார்.
அம்பத்தூர்
அங்கிருந்து புறப்பட்டு அம்பத்தூர் வந்தடைந்தது பயணக்குழு. நிகழ்ச்சி அம்பத்தூர் பழைய நகரம் பேருந்து நிலையம் அருகில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்விற்கு அம்பத்தூர் நகரச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். அம்பத்தூர் பகுதி கழக தலைவர் இராமலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கழக அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்வேந்தன்,மண்டல செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரையாற்றிய பின்னர் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா.சுப.வீரபாண்டியன் கருத்துரை வழங்கிய பிறகு நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நாங்கள் கொள்கைக்காக வாழ்கிறோம்!
ஆசிரியர் தனது உரையில், ’காலித்தனம், காவித்தனம் பேதமில்லாமல் நடந்து கொண்டு இருப்பதற்கு என்ன காரணம்’ என்று தொடங்கி, ‘அதற்கு ஜாதி தான் காரணம்’ என்றார். இந்த ஜாதித்தன்மையை வெளிநாட்டுக்காரர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை’ என்றொரு கருத்தைச் சொல்லி, ஜாதியற்ற நாடுகளின் சிறப்பை சொல்லாமல் சொன்னார். அதேபோல இந்த ஜாதியை பாதுகாக்க எண்ணுகிற பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார். அதை இன்னும் அழுத்தமாக சொல்வதற்காக, “நாங்கள் உயிருக்காக வாழவில்லை! கொள்கைக்காக வாழ்கிறோம்” என்றார். மக்கள் அது தி.க.காரர்களைப் பொறுத்து உண்மைதான் என்பதை ஏற்பது போல், பலத்த கையொலி செய்தனர். என்ன துணிச்சலில் இப்படிச் சொல்கிறோம் என்று கேட்டு, “பெரியார் என்ற பேராயுதம் எங்கள் கையில் இருப்பதுதான்” என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஒரு முக்கியமான கருத்தை, ”யார் அந்நியன்?” என்று பெரியார் சொன்னதைச் சொல்லி விளக்கினார். அதாவது, 10,000 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன் அருகில் வந்தால், “ஹலோ” என்று நம்மிடம் கைகுலுக்குகிறான். பக்கத்து வீட்டுக்காரன் நாம் வருவது தெரிந்தாலே காத தூரம் விலகுகிறான். யார் அந்நியன்? என்னுடன் கை குலுக்குகிற வெள்ளைக்காரனா? அந்நியனா? எட்டி நில் என்று சொல்லும் பார்ப்பானா? என்று சொல்லி நிறுத்தியதும் இப்படியொரு பார்வையை அறிந்திராத மக்கள் அனிச்சையாக அதை வரவேற்று பலத்த கையொலி செய்தனர். தொடர்ந்து, ஜாதி நல்ல ஏற்பாடு என்று கோல்வால்கர் சொன்னதை ’ஞானகங்கை’ எனும் புத்தகத்திலிருந்து படித்துக் காட்டி, நமது பண்பாடு என்ன? என்றொரு கேள்வி கேட்டு, “யாயும் ஞாயும் யாராகியரோ” என்ற குறுந்தொகைப் பாடலையும், ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பதினெண் கீழ்க்கணக்கு நூலான திருக்குறளையும் பதிலாக சுட்டிக்காட்டினார்.
பசுப் பாதுகாப்பை பந்தாடிய விவேகானந்தர்!
தொடர்ந்து, ஜாதி தர்மமான சனாதன தர்மம் என்றால், நித்தியமான மதம் – புராதன மதம் சனாதனத்திற்கு ஆதாரம் வேதம். அதனால் இதற்கு வேத மதம் – ஆரிய மதம் – ஹிந்து மதம் என்று வெள்ளைக்காரர்கள் பெயர் வைத்தனர் என்று குறிப்பிட்டார். இதை பெரிய சங்கராச்சாரியார் ஒத்துக்கொண்டுள்ளார். மேலும், சனாதன மதம் யாருக்காக? என்பதற்கு முதலாம் ஜாதியாருக்காகத்தான் என்பதை கோல்வால்கர் புத்தகத்தையே ஆதாராமாக்கினார். அதே புத்தகத்தில் பார்ப்பனர்கள் ஆரிய வந்தேறிகள் என்பதையும் படித்துக் காட்டினார். பசு அரவணைப்பு தினம் பற்றி பேச வந்தவர், விவேகானந்தர் பசு பாதுகாப்பு பற்றி கடுமையாக விமர்சனம் செய்தது என்ன என்பதை விவேகானந்தர் உரைகள் தொகுப்பிலிருந்து படித்துக் காட்டினார். இதற்கு மாறாக திராவிட மாடல் அரசு, கல்விக்கும், சுகாதாரத்துக்கும் செய்து வரும் சாதனைகளை வீடு தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம் பட்டியலிட்டார். மதவாத அரசு மாடுகளைப் பற்றி கவலைப் படுகிறது; திராவிட மாடல் அரசு மக்களைப் பற்றி கவலைப் படுகிறது என்பதை மக்களுக்கு புரியவைத்தார். இறுதியில் சேது சமுத்திரம் திட்டம் அவசியம் பற்றியும், திட்டம் முடியும் போது மூன்று பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து அதை முடக்கியதையும், பா.ஜ.க.வின் இரட்டை நாக்கையும் அம்பலப்படுத்தி, வாழ்க பெரியார்! தமிழ்நாடு வாழ்க! என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், சி.பி.அய்.மாவட்ட செயலாளர் கருணாநிதி, வி.சி.க.மாநில செயலாளர் திராவிடமணி, சி.பி.எம்.மாவட்ட செயலாளர் லெனின் சுந்தர், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் இராசா.திருநாவுக்கரசு,
ம.தி.மு.க.அம்பத்தூர் பகுதி செயலாளர் சுரேஷ், மே-17 இயக்க பொறுப்பாளர் கனகவேல், தமிழர் விடுதலைக் கழக பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை நிர்வாகிகள் ராஜ், மோகன்ராம், ராமகிருஷ்ணன், ம.ம.க. பொறுப்பாளர் அசன் அலியார், சி.பி.அய். அம்பத்தூர் பகுதி செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் அம்பத்தூர் கழக இளைஞரணி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாரின்
கனவு நனவாயிற்று!
இந்த பரப்புரைப் பயணம் ஈரோட்டில் தொடங்கி, கடலூரில் முடிகிறது. ஈரோடு என்றால் தந்தை பெரியார்! கடலூர் என்றால் நம்முடைய தமிழர் தலைவர்! திராவிடர் கழகத்தைப் போன்று ஒரு சமூகப் புரட்சி இயக்கம் உலகத்திலேயே காணமுடியாது. மனிதனுக்கு முக்கியமானது கல்வி! இந்த நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமை இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. தந்தை பெரியார் நினைத்திருந்தால் எவ்வளவு பெரிய பதவிக்கு வேண்டுமானாலும் போயிருக்கலாம். அவருடைய சீடர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தார்கள். அதே நேரம் தந்தை பெரியார், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டிக் கொண்டே இருந்தார். வெள்ளைக்காரன் ஆட்சியில் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருந்தது. சுதந்திர இந்தியாவில்தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. அரசியலுக்கு போகாத பெரியார்தான் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி முதல் முதலில் அரசியல் சட்டத்தை திருத்தத்தைக் கொண்டு வந்தார். ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்த போதும் பெரியார் பொங்கி எழுந்தார். ராஜாஜி ராஜினாமா செய்து விட்டு சென்றார். 69% த்துக்கு ஆபத்து வந்தபோது, நமது தமிழர் தலைவர் பொங்கி எழுந்து பாதுகாத்தார். மண்டல் கமிசன் அமலுக்கு வந்ததற்கும் திராவிடர் கழகமும், தமிழர் தலைவர் தான் காரணம்! இதை நிறைவேற்றும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் வி.பி.சிங், “தந்தை பெரியார் கனவு நனவாயிற்று! அம்பேத்கர் கனவு நனவாயிற்று! ராம் மனோகர் லோகியா கனவு நனவாயிற்று” என்று சொன்னார். இப்படியொரு இயக்கத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. இப்போது சமூகநீதிக்கு ஆபத்து வந்திருக்கிறது. எஸ்பிஅய் வங்கியில், எஸ்சி 61.25, எஸ்டி 53.75, ஓபிசி 61.25, பார்ப்பனர்கள் 28.7. பார்ப்பான 28 மதிப்பெண் வாங்கினால் தேர்வாகலாம். நமது தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்ததைக் கொல் லைப்புற வழியாக பார்ப்பனர்களுக்குரிய சூழ்ச்சியுடன் பறித்துச் செல்கிறார்கள். 2024 இல் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எதேச்சதிகாரம்தான். தமிழ்நாட்டில் முழு வெற்றியைப் பெற்றுத்தந்தால் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
புழல், 14-02-2023