ஈரோட்டு மக்களின் செல்லப்பிள்ளை திருமகன் ஈவெரா –
மகன் விட்ட பணியை மேலும் சிறப்பாக செய்வார் தந்தை இளங்கோவன்!
‘கை’ சின்னத்துக்கு வாக்களியுங்கள்!
ஈரோடு, பிப்.15 நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்களித் தால், அந்தக் கை உறுதியாக உங்களுக்குக் கை கொடுக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஈரோடு முதல் கடலூர்வரை
பரப்புரைக் கூட்டம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண் டுள்ள சமூகநீதி பாதுகாப்பு, ‘திராவிட மாடல்’ சாதனை விளக்க – பரப்புரை ஈரோடு முதல் கடலூர் வரையிலான சுற்றுப்பயணத்தின் முதல் நாளான 3.2.2023 அன்று மாலை ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரையாற்றினார்.
அவரது விளக்கவுரை வருமாறு:
ஆர்வத்தோடு உங்களையெல்லாம்
சந்திக்க வந்திருக்கின்றோம்!
ஈரோடு மாநகரில் எத்தனையோ முறை உங்களை யெல்லாம் சந்திக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்ற நான், இன்று நாங்கள் எப்படி ஆர்வத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கின்றோமோ, அதே அளவிற்கு, எங்கள் ஆர் வத்தோடு போட்டி போடுகின்ற மழைக்கும், எங்களுக்கும் போட்டி. இந்த நிலையில், அதிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று சொல்லக்கூடிய அளவில், மக்களா கிய நீங்கள் ஒத்துழைத்து, இங்கே அமர்ந்திருக்கக் கூடிய அருமைப் பெருமக்களே,
பழம் நழுவி பாலில் விழுந்து,
அதுவும் நழுவி வாயில் விழுந்ததைப்போல,
இது ஓர் அருமையான வாய்ப்பு!
இக்கூட்டம் சிறப்பு வாய்ந்த தேர்தல் பிரச்சாரக் கூட்ட மல்ல; இது சமுதாய மாற்றத்தை உருவாக்கக் கூடிய கூட்ட மும்கூட. அருமை நண்பர் சகோதரர் கிழக்குத் தொகுதி யினுடைய வேட்பாளராக, தோழமைக் கட்சி களால், கூட்டணிக் கட்சிகளால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள அருமைச் சகோதரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் இங்கே சிறப்பாக எடுத்துரைத்ததைப் போல, இந்தக் கூட்டம் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்பொழுது இப்படி ஒரு தேர்தல் அறிவிக்கப்படும் என நாங்கள் நினைக்கவில்லை. இருந்தாலும், இது பழம் நழுவி பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்ததைப்போல, இது ஓர் அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
எனவேதான் இரண்டு வகைகளில் பேசக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு – தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்திக் கொள்ளலாம்; கொள்கை விளக்கத்தையும் நடத்தலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ‘‘கம்பும் விளைந்தது தம்பிக்கும் பெண் பார்த்தாகிவிட்டது’’ என்று சொல்லக் கூடிய அளவிற்கு வாய்ப்புகள் நிறைந்த இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகாமல் தடுக்கவேண்டும்
இந்தக் கூட்டம் ஈரோடு முதல் கடலூர்வரை சமூகநீதி, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகாமல் தடுக்கவேண்டும்; இராமர் பாலம் என்று சொல்லி, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக செலவு செய்த பிறகு, இன்னும் 23 கிலோ மீட்டர்தான் பணிகள் மீதமிருக்கின்றன; அதை நிறைவேற்றினால், உடனடியாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவுறும். அத் திட்டம் நிறைவேறினால், எல்லா வகையிலும் தமிழ்நாடு செழுமை பெறும். குறிப்பாக தென்தமிழ்நாடு வளத்தோடு, அதிகமான அளவிற்கு பலத்தோடு அமையும்.
இன்றைக்கு வேலை தேடி அலையக்கூடிய இளை ஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள் என்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புகள் எல்லாம் இருக்கக்கூடிய சூழ்நிலையில், அந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறக்கூடாது என்று எந்த ராமன் பாலத்தைக் காட்டி தடையாணை வாங்கினார்களோ, அப்படி ஒரு ராமன் பாலம் இல்லவே இல்லை, அது வெறும் ஆதாம் பாலம்தான் – பவளப் பாறைகள்தான் என்று பிரதமர் மோடி அவர்களுடைய அமைச்சரவையில் இடம்பெற் றுள்ள ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே ராமன் பாலம் என்று எதுவும் இல்லை என ஒப்புக்கொண்டிருக்கிறார்.
நேரிடையாக செய்யாவிட்டாலும்,
மறைமுகமாக செய்திருக்கிறார்கள்
அதற்காக வழக்குப் போட்ட சுப்பிரமணியசாமி, அதோடு இணைக்கப்பட்ட ஒன்றிய அரசு. திரும்பத் திரும்ப இத்தனை காலமாகத் தள்ளித் தள்ளி வைத்து, ராமன் பாலத்தைத் தேடித் தேடிப் பார்த்தோம், அதற்கான ஆதாரங்கள், சான்றாவணங்கள் கிட்டவில்லை என் பதை வெளிப்படையாக சொன்ன நிலையில், அதை அறிவு நாணயத்தோடு ஒப்புக்கொண்டு, நீதிமன்றத்திலும் சொல்லி, வழக்கு முடிந்தது என்று சொல்வதற்குப் பதிலாக – ராமன் பாலம் என்ற ஒன்று இல்லை என்று சொல்லிவிட்டு, அதேநேரத்தில், அது கலாச்சாரத் துறைக் குப் போகட்டும் என்று பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல், செமிக்கோலன் வைத்து, அந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடாது என்று சொல்லக்கூடிய நிலையை – நேரிடையாக செய்யாவிட்டாலும், மறைமுக மாக செய்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அதற்குரிய அமைச்சராக இருக்கக்கூடிய நிதின்கட்காரி அவர்கள், ஏற்கெனவே, கலைஞர் காலத்தில் ஒன்றைச் சொன்னார் கலைஞர் அவர்கள். ‘‘எங்களுக்கு ராமன்மீதும் கோபம் இல்லை; பாலத்தின்மீதும் தனிப்பட்ட முறையில், எந்த விதமான விருப்பு வெறுப்புகள் கிடையாது. எங்களுக்கு வேண்டியது தமிழ்நாடு செழிக்கவேண்டும்; தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வரவேண்டும்’’ என்றார்.
இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கே செக்ரியூட்டி ரீசன்ஸ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு…
அதுமட்டுமல்ல, இவை எல்லாவற்றையும்விட, இன்னும் மிக முக்கியமாக சொல்லவேண்டுமானால், குறிப்பாக சுட்டிக்காட்ட வேண்டுமானால், தென்தமிழ் நாட்டின் வளத்தைவிட, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைவிட, பொருளாதார சிந்தனைகள், வளம் என்பதைத் தாண்டி, இலங்கையைச் சுற்றிக் கொண்டு போகின்ற கப்பல்கள், சேது சமுத்திரக் கால் வாய் வழியாகப் போகுமானால், எரிபொருள் மிச்சம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்தாலும்கூட, அவற் றையெல்லாம் தாண்டி, சீனாவினுடைய அத்துமீறல்கள் இந்திய எல்லையில் நடைபெறுகிறது என்கிற அச்சமும் ஒருபக்கத்தில் இருக்கிறது. ஏனென்றால், இராஜபக்சேவின் தொகுதியான அம்பாந்தோட்டை பகுதியிலும் சரி, அதற்கு முன்பு, திரிகோணமலை பகுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வந்த நேரத்தில், அதனுடைய செவன்த் பிளிட் என்று சொல்லக்கூடிய முன்பு நடைபெற்ற பாகிஸ்தான் போரில்கூட, அந்த இடத்தில் அமெரிக்கப் படைகளை நிறுத்தியிருந்தார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கே செக்ரி யூட்டி ரீசன்ஸ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மிகப்பெரிய பயன ளிக்கும் என்ற வாதங்களையும் எடுத்துச் சொல்லி, 2 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவழித்த பிறகு, வெறும் வீம்புக்காக அல்லது மூடநம்பிக்கைக்காக அல்லது இந்தப் பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்துவிடக் கூடாது; காங்கிரசுக்குக் கிடைத்துவிடக் கூடாது; ஒன்றியத்தில் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்த நேரத்தில், சோனியா காந்தி அம்மையார், கலைஞர் ஆகியோர் மதுரையில் தொடங்கி வைத்த திட்டம்தான் இந்தத் திட்டம்.
டி.ஆர்.பாலு அவர்கள், கப்பல்துறை அமைச்சராக இருந்து அந்தத் திட்டத்திற்கு வேண்டிய அனைத்தையும் செய்து, மூலதனத்தைத் திரட்டி, செய்த திட்டம் இது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றவேண்டாமா? என்று சொல்லும்பொழுது, அதை வலியுறுத்துவதற்குத்தான் இந்தச் சுற்றுப்பயணம்.
இன்றைக்கு எதிர்க்கட்சி நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஈரோடு ஒரு தனி அரசியல் பேரேடு என்ற வரலாறு இருக்கிறது. அந்தப் பேரேட்டில் சில குறிப்புகள் நிச்சயமாக இடம்பெறும். குறிப்புகள் மட்டுமல்ல நண்பர்களே, இதில் ஒரு திருப்பமும் ஏற்படும்.
எப்படி மீட்கப் போகிறோம்?
எப்பொழுது மீட்கப் போகிறோம்?
அந்தத் திருப்பம் நிச்சயமாக உங்களுக்கெல்லாம் தெரியவரும். சிலர், இந்தத் தேர்தல் வாழ்வா? சாவா? என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், தாங்கள் அடமானம் வைத்த பொருளுக்கு வட்டி அதிகமாகப் போய்க் கொண்டேயிருக்கிறதே, அந்தப் பொருளை எப்படி மீட்கப் போகிறோம்? எப்பொழுது மீட்கப் போகிறோம்? என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறார்கள்.
எனவேதான், வெகுமானம் வந்தாலும் சரி, வரா விட்டாலும் சரி தன்மானத்தையும், இனமானத்தையும் காப்பாற்றுகின்ற ஒரே அணி இந்த அணிதான் என்பது மிகத் தெளிவாக எல்லோருக்கும் தெரியும்.
நாங்கள் நார் போன்றவர்கள்; மலர்களை இணைப்பதற்கு நார் பயன்படும்!
அதனுடைய அடிப்படையில்தான், தேர்தல் பிரச் சாரத்தைக்கூட நாங்கள் கையிலெடுத்திருக்கின்றோம். உங்களுக்குத் தெரியும், திராவிடர் கழகம் தேர்தலில் நிற்கின்ற கட்சியல்ல. கூட்டணியை உறுதிப்படுத்துகின்ற கட்சியே தவிர, கூட்டணியில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், நாங்கள் கூட்டணிக்கு அப்பாற்பட்ட வர்களாக இருந்தாலும், நார் போன்றவர்கள்; இவர்கள் எல்லாம் மலர்கள். எனவே, மலர்களை இணைப்பதற்கு நார் பயன்படும். ஆனால், மலர்கள் வந்த பிறகு, நார் தனியாகத்தான் இருக்கும்.
அதுபோல, நாங்கள் இந்தத் தேர்தலைப்பற்றி கவலைப்படுவது எங்களுடைய கடமையாக, பணியாக இருந்தாலும் கூட, ஏனென்றால், நாட்டை வளப்படுத்தக் கூடியதற்கு இது ஒரு வாய்ப்பு.
அதையும் தாண்டி நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், அடுத்தத் தலைமுறை சரியாக அமைய வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.
அந்தத் தலைமுறையினருக்காகத்தான் நண்பர்களே சமூகநீதிப் பயணம்!
அந்தத் தலைமுறையினரிடையே மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே இந்தப் பெரும் பயணம்!
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார்
தமிழ்நாட்டிலே இப்படி ஓர் ஆட்சி இதுவரை யில் வந்ததாக வரலாறு கிடையாது. ஒரு முதல மைச்சர் தெளிவாக ‘‘அனைவருக்கும் அனைத் தும்‘‘ என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் கொள்கை அதுதான். ‘அனைவருக்கும் அனைத்தும்.’
‘திராவிட மாடல்’ என்றால் என்ன? என்று பல பேர் புரியாததுபோன்று கேட்பார்கள். தூங்குபவர் களைப்பற்றி நாங்கள் கவலைப்பட்டு எழுப்புவோம். ஆனால், தூங்குபவர்கள் போன்று பாசாங்கு செய் பவர்களைப்பற்றி நாங்கள் லட்சியம் செய்யமாட் டோம். ஏனென்றால், அவர்களை எழுப்ப முயற்சிப்பது வீண் வேலை. அது எங்களுக்கு நன்றாகத் தெரியும்; எங்கள் நேரம் எங்களுக்கு மிகவும் முக்கியம். ஆகவேதான், எங்களுடைய நேரத்தை நாங்கள் வீணடிக்கமாட்டோம்.
ஈரோட்டு மக்களின் செல்ல பிள்ளையாக இருந்தார் திருமகன் ஈவெரா!
எனக்குமுன்பு உரையாற்றிய அருமைச் சகோதரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், ஒருபக்கத்தில் மிகுந்த துயரத்தை அடக்கிக் கொண்டு, இன்னமும் அந்தத் துயரம் அவரை விட்டுப் போகவில்லை; அந்தக் குடும்பத்தைவிட்டுப் போகவில்லை; நம்மை விட்டுப் போகவில்லை; ஏன் இந்த ஈரோடு மக்கள் வாக்களித் தார்களே, அந்த மக்களைவிட்டும் போகவில்லை. ஒவ்வொரு வீட்டுப் பிள்ளையாக திருமகன் ஈவெரா அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
எல்லோருடைய இதயத்திலும் நிறைந்திருக்கிறார். ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் பதவி காலியாகி இருக்கலாம். ஆனால், அவர் அமர்ந்த இதயம் காலியாக வில்லை. மக்களுடைய இதயம் காலியாக இல்லை. அத்தனை பேருக்கும் நல்ல பிள்ளையாக, செல்ல பிள்ளையாக இருந்தார்.
மகன் விட்ட பணியை
தந்தை தொடரவேண்டும்!
அதைத்தான் நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் துயரத்தோடு, துக்கத்தோடு இங்கே வெளிப் படுத்தினார். அதைக் கேட்டபொழுது, நமக்கெல்லாம் மிக சங்கடம். அந்தத் துயரத்தோடு, தன்னுடைய மகன் விட்ட பணியை தந்தை தொடரவேண்டும் என்று கேட்கிறார்.
இயற்கையினுடைய விசித்திரங்களில் இது மிக கொடுமையான விசித்திரமாகும். எப்பொழுதும் தந்தை விட்ட பணியைத்தான் மகன் தொடருவார். ஆனால், ‘‘மகன் விட்ட பணியை, தந்தை தொடருகிறேன், எனக்கு உத்தரவிடுங்கள்’’ என்றுதான் உங்களைப் பார்த்து கேட்கிறார். அதற்கு மக்களாகிய நீங்கள் ஆயத்தமாகி விட்டீர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.
ஏனென்றால், இந்தத் தொகுதிக்கு யார் எதிர் வேட்பாளர் என்றே இன்னும் தெரியவில்லை. ஒரே ஒரு வேட்பாளர்தான் ஓட்டு கேட்கிறார் என்ற அளவிற்கு இருக்கிறது.
திருமகன் ஈவெரா அவர்கள், இந்தத் தொகுதி மக்களின் ஒவ்வொரு வீட்டுப் பிள்ளையாக இருந்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல. கொல்லன் தெருவில் நாங்கள் ஊசி விற்கக்கூடாது.
பெரியாரும் – திருவள்ளுவரும் எப்பொழுதுமே ஒரே தத்துவத்தை சொல்லக் கூடியவர்கள்!
திருவள்ளுவருடைய திருக்குறள் உங்களுக் கெல்லாம் தெரிந்த குறள்கள்தான். அதில் இரண்டு குறள்கள், அதன்படி இந்த இடைத்தேர்தலில் திருவள்ளுவர் போட்டிப் போடக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார். திருவள்ளுவர் இந்தத் தொகுதிக் குவந்து ஈரோட்டைப் பார்க்கிறார். பெரியாரும் – திருவள்ளுவரும் எப்பொழுதுமே ஒரே தத் துவத்தை சொல்லக் கூடியவர்கள்.
”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என்கிற அடிப்படையில்.
என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கக் கூடியவர்கள்.
உங்களுக்கெல்லாம் தெரிந்த குறள்தான், இந்தக் குறளை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டு இருப் பீர்கள்.
”மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்”
என்ற குறள்தான் அது.
இந்தக் குறளுக்கு என்ன பொருள்? மகன் தன்னை பெற்றெடுத்தத் தந்தைக்கு செய்யக்கூடிய கைமாறு என்னவென்றால், இவனை மகனாகப் பெற்று, பேரறிவு உடையவனாக வளர்க்க, எப் படிப்பட்ட முயற்சிகளையெல்லாம் மேற்கொண் டானோ?என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொற்களேயாகும்.
சட்டமன்றத்திலும் முத்திரை பதித்தார்;
மக்கள் மத்தியிலும் முத்திரை பதித்தார்!
இப்படியெல்லாம் பேரறிவாளராக இருந்ததைவிட, ஒரு கூடுதல் தகுதி – மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்திருக்கக்கூடிய எங்கள் செல் வம் திருமகன் ஈவெரா அவர்களுக்கு உண்டு நண் பர்களே. அதுதான் அவர் பேரறிவாளராக திகழ்ந்த தைவிட, பெரும் தொண்டராக, தொண்டறச் செம்மலாகத் திகழ்ந்தார்கள்; சட்டமன்றத்திலும் முத்திரை பதித்தார்; மக்கள் மத்தியிலும் முத்திரை பதித்தார்.
அப்படிப்பட்டவருடைய பணி, அய்ந்தாண்டுகளுக்கு நீங்கள் ஆணையிட்ட பணி தொடர வேண்டாமா? அதற்கு ஒரு வாய்ப்புதான் நண்பர்களே, 27 ஆம் தேதி நடைபெறக்கூடிய இடைத்தேர்தல் ஆகும்.
அதேநேரத்தில், இன்னொரு குறள்.
”தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.”
தந்தையானவன் தன் மகனுக்கு செய்யக்கூடிய உதவி என்று ஒன்று இருக்குமேயானால், நன்றி! தன் மகனை கல்வியில் வல்லவனாக ஆக்கி, கற்றறிந்தோர் அவையில், யாவருக்கும் முன்னிலையில், தலைவனாக வீற்றிருக்கும்படி செய்வதே ஆகும்.
அந்தக் குறளுக்கு இதுதான் பொருள். இந்த அரங் கத்தில் அறிவார்ந்த நண்பர்கள், புலவர்கள், பெருமக்கள் இருக்கிறீர்கள்.
அந்தக் குறள்களில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, இரண்டு கோணங்களில் வள்ளுவர் சொல்கிறார்.
ஆனால், அதேநேரத்தில், மேற்சொன்ன இரண்டு குறள்களிலும், ஒரு சொல்லை மிக ஆழமாகக் கவனிக்கவேண்டும்.
தந்தையைப்பற்றிச் சொல்லும்பொழுது, தந்தையி னுடைய கடமையைப்பற்றி வலியுறுத்தும்பொழுது, தந்தை மகற்காற்றும் நன்றி என்று போடுகிறார்.
அதேநேரத்தில், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்ற சொல்லைப் போடுகிறார்.
எனவே, மகன் தந்தைக்கு ஆற்றுவது உதவி. அதே நேரத்தில், தந்தை மகனுக்கு ஆற்றுவது நன்றி!
பெரியாரின் பெருங்குடும்பத்தின் செல்வங்களால்தான்!
இது மிகவும் வித்தியாசமானது, ஆழமானது. இந்த இரண்டும் இன்று நிகழ்ந்திருக்கிறது என்றால், அது பெரியாரின் பெருங்குடும்பத்தின் செல்வங்களால்தான். அதற்குத்தான் நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள். வாக்களிக்க நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்திருப்பீர்கள் என்று தெரியும். இருந்தாலும், எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அன்போடு உங்களிடத்திலே கேட்டுக்கொள் கிறோம்.
ஏனென்றால், அவர் சாதாரணமான ஒரு தனி நபர் அல்ல; அவர் எந்த இயக்கத்தின் சார்பில் நிற்கிறாரோ, அந்த இயக்கத்தின் பெருமை சாதாரணமானதல்ல. இன்றைக்கும் சிலர் புரியாமல் பேசலாம், ‘‘காங்கிரஸ் என்ன அவ்வளவு பெரிய செல்வாக்கு பெற்றுவிட்டாதா?’’ என்று கேட்கலாம். அப்படி கேட்பவர்கள், இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றியைப் பார்க்கவேண்டும்; அப்படி கேட்கிறவர்கள், குஜராத்திலே தெருத் தெருவாக மோடி யையும், அமித்ஷாவையும் வாக்குக் கேட்டு அலைய வைத்தார்களே, அதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
ராகுல் காந்தி தமிழ்நாட்டை
நன்றாக உணர்ந்திருக்கிறார்
இவ்வளவு சக்திகள், ராகுல் காந்தி என்கிற அந்த நம்பிக்கை நட்சத்திரத்தின்மீது தெளிவாக இருக்கிறது. அவர் தமிழ்நாட்டை நன்றாக உணர்ந்திருக்கிறார். அதைவிட மிக முக்கியம், அரசியலில் தத்துவங்கள், எப்படி ஒன்றுக்கு முரண்பட்ட தத்துவங்கள், இந்த நாட் டில் செலாவணியாகக் கூடாது என்பதிலே எவ்வளவு கவலையோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளம் – அவர் சொன்னார் -நாடாளுமன்றத்திலே சொன்னார்; பிரதமர், மற்றவர்களை வைத்துக்கொண்டே சொன்னார் மிகத் தெளிவாக, ‘‘நூறு ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டை நீங்கள் பிடித்து விடுவோம் என்று ஒருபோதும் கனவு காணாதீர்கள்’’ என்று சொல்லி, பதிய வைத்திருக்கிறார்.
உங்களை அடையாளம் கண்டுகொண்ட மக்கள்தான் ஈரோட்டில் இருக்கிறார்கள்
ஆகவேதான், கொல்லைப்புற வழியாக தமிழ் நாட்டில் தலையை நீட்டிப் பார்க்க ஒத்திகைப் பார்க்கலாமா? என்றெண்ணி, எங்களுடைய சகோ தரர்களையெல்லாம் பொம்மலாட்டம் ஆட வைத்து, இரண்டு பேரையும் பிரித்து, இந்தக் கையில் ஒரு நூல் – அந்தக் கையிலே ஒரு நூல் – இது மிஞ்சினால் அது; அது மிஞ்சினால் இது – இழுத்துப் பார்க்கலாம் என்று சொன்னால், உங் களை அடையாளம் கண்டுகொண்ட மக்கள்தான் ஈரோட்டில் இருக்கிறார்கள் என்று காட்டக்கூடிய நாள் வருகிற 27 ஆம் தேதியாகும்.
எனவே, இப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழல், அரசியலில் இருக்கிறது. கை சின்னம் என்பது இருக்கிறதே, அது கைக் கொடுக்கக்கூடிய சின்னம்.
தொடாதே என்று சொல்வது ஒரு பக்கம்; ஒதுங்கிப் போ என்று சொல்வது ஒரு பக்கம்.
கையோடு கைகுலுக்கினால் அதற்கு என்ன அர்த்தம் என்று சொன்னால், நாம் ஒன்றோடு ஒன்று என்று அர்த்தம்.
சில பேர் கும்பிடுவதினுடைய நோக்கமே தள்ளி நிற்பார்கள். ஆனால், அதேநேரத்தில், நம்மு டைய இஸ்லாமிய சகோதரர்கள் கைகுலுக்கு வதையும் தாண்டி, கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்வார்கள். நாங்கள் வேறு; நீங்கள் வேறு அல்ல. நம்மை எதுவும் பிரிக்காது என்று சொல்வார்கள்.
ஏதாவது ஒன்றுக்கு உத்தரவாதம் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்கிறோம்? ‘‘நிச்சயாக உங்களைக் கைவிடமாட்டோம்’’ என்றுதான் சொல் கிறோம்.
சரியான வகையில் அடையாளம் கண்டிருக்கிறார் நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர்
எனவே, கைவிடாதது கை; இந்த மக்களைக் கைவிட மாட்டார்கள். அந்த வகையில், கூட்டணியில் சரியான வகையில் அடையாளம் கண்டிருக்கிறார் நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சராக, இந்தியாவினுடைய வரலாற்றில் இப்படி ஒரு முதல மைச்சர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கிற, முதலமைச்சர்களின் முதல் முதலமைச்ச ரான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒவ்வொரு நாளும் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார்; களத்தில் இறங்கிப் பணி யாற்றுகிறார்; சட்டமன்றப் பணிகளைப் பார்க்கிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில், நிகழ்த்த முடியாத, நடக்க முடியாத சாதனைகளைச் செய்திருக்கிறார்.
‘‘நந்தியே, சற்றே விலகி இரும் பிள்ளாய்’’
ஆனால், குறுக்கே பல தடங்கல்கள்; சில நந்திகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். நந்தியைப் பார்த்து, ‘‘நந்தியே, சற்றே விலகி இரும் பிள்ளாய்’’ என்று சொல் வதற்குத்தான் எங்களைப் போன்றவர்கள் இருக்கிறோம்.
மக்களுடைய வாக்கு வங்கியைப் பெற்று, மக்களு டைய பேராதவைப் பெற்று அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என்பதினால், நன்றாக நடைபெற்றுக் கொண் டிருக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி செயல்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இங்கே நிகழ்வுகள் நடைபெற்றக் கொண்டிருக்கின்றன. அதை நினைத் தால்தான் வேதனையாக இருக்கிறது.
இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தையோ, அல்லது கூட்டணிக் கட்சிகளையோ அவமதிக்கின்ற செயல் என்று யாரும் எண்ணி தள்ளிவிட முடியாது. அதையெல்லாம் தாண்டி, இவர்கள்தான் ஆளவேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, தக்காரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த நேரத்தில், அந்த ஆட்சி நன்றாக நடைபெறவேண்டாமா? அய்ந்தாண்டுகளுக்குள் அவர் கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டாமா? சாதனைகளைச் செய்யவேண்டாமா?
மக்கள் விரோதமாக இருக்கிற கொள்கைகள் எங்களுக்கு விரோதிகள்!
நமது பெருமதிப்பிற்குரிய அப்துல்சமது அவர்கள் சொன்னார்கள். சட்டமன்றத்தில் அவர் கேள்வி கேட் கிறார்; அரசமைப்புச் சட்டம் துச்சமாக்கப்படு வதைப்பற்றி நம்மைப் போன்றவர்கள் கேட்கிறோம். யாரும் எங் களுக்குத் தனிப்பட்ட முறையில் விரோதிகள் கிடையாது. கொள்கைகளைத்தான் நாங்கள் விரோத மாகப் பார்க்கிறோம். அதுகூட மக்கள் விரோதமாக இருக்கிற கொள்கைகள் எங்களுக்கு விரோதிகள்.
தனிப்பட்ட நபர்கள் யாரும் எங்களுக்கு விரோதிகள் கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள்; ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வாக் காளர்களாகிய நீங்கள் ஆணையிட்டு இருக்கிறீர்கள். அப்படி நீங்கள் ஆணையிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற வுடன், அடுத்தபடியாக அந்த செயல் திட்டத்தை எப்படி அவர்கள் நிறைவேற்றுவார்கள்?
சட்டமன்றத்தின்மூலமாகத்தானே! அதற்காகத்தானே இளங்கோவன் போன்றவர்கள் சட்டமன்றத்திற்குப் போட்டியிடுகிறார்கள். அந்த சட்டமன்றத்திலே நிறை வேற்றப்பட்ட மசோதா, ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆளுநரின் பணி என்ன?
அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது?
200 ஆவது பிரிவு என்பதை எடுத்துக்கொண்டாலும், அல்லது அதற்கு முன்பாக இருக்கக்கூடிய 163 போன்ற பிரிவுகளாக இருந்தாலும் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?
ஒரு மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால், அதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும்.
அப்படியில்லாமல், அந்த மசோதாவை, ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் போட்டு வைத்திருப்பதில் பொருள் இல்லை.
அப்படியே அந்த மசோதாமீது ஏதாவது சந்தேகம் இருந்தால், அந்த மசோதாவை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பவேண்டும். அல்லது அந்த மசோதாவை ஏற்கமாட்டேன் என்று சொல்லலாம். அல்லது அந்த மசோதாவில் இன்னின்ன திருத்தங்களை செய்யுங்கள் என்று பரிந்துரைக்கலாம்.
ஏனென்றால், தனியாக எந்த அதிகாரமும் அரச மைப்புச் சட்டப்படி ஆளுநருக்குக் கிடையாது.
அண்மையில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை யாற்றும் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப்பற்றி சொன்னார்கள்.
ஏன் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை?
‘திராவிட மாடல்’ ஆட்சிக்குக் கோளாறு உண்டாக்க வேண்டும் என்பதற்காக 22 மசோதாக்களுக்கு மேலாக ஆளுநர் மாளிகையில் ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கொண்டிருக்கிறது.
ராஜ்பவனில்
பெரிய ஊறுகாய் ஜாடி இருக்கிறது!
நான்கூட ஒரு கூட்டத்தில் வேடிக்கையாக சொன் னேன்; எல்லோருடைய வீட்டிலும் சிறிய ஊறுகாய் ஜாடி இருக்கும்; ஆனால், நம்முடைய ராஜ்பவனில் பெரிய ஊறுகாய் ஜாடி இருக்கிறது; அந்த ஜாடியில், மாநில அரசின் மசோதாக்கள் ஊறிக்கொண்டிருக்கின்றன என்று.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு செய்யப்படும் மக்கள் விரோத செயல் அல்லவா அது! மக்கள் விரோத செயல் என்பதைவிட கூடுதலாக சொல்கிறேன், அர சமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள் பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து ஆளுநர் உள்பட. அப்படி எடுக்கப்பட்ட பதவிப் பிர மாணத்திற்கே அது விரோதமானதல்லவா!
விளக்கத்தை தமிழ்நாடு அரசு
கொடுத்துக் கொண்டிருக்கிறது
ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன், மற்றவற்றை எல்லாம் விட்டுவிடுங்கள். நீட் தேர்வு மசோதா இப்படித்தான் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் ஆளுநர்; தபால்காரருடைய வேலைதான் அவரைப் பொறுத்தவரையில். அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இப்பொழுது குடி யரசுத் தலைவர் சில சந்தேகங்களைக் கேட்டிருக்கிறார்; அதற்குரிய விளக்கத்தை தமிழ்நாடு அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நடந்துகொண்டிருக்கிறது ‘நீட்’ தேர்வு மசோதாவைப் பொறுத்தவரையில்.
அதுபோன்று ஆளுநர், அவருக்குள்ள வரை யறைக்குட்பட்டு, இந்த மசோதாமீது எனக்கு இன்னின்ன வகையில் மாறுபட்ட கருத்து இருக்கிறது என்று சொல்வாரேயானால், அதற்கு விளக்கம் சொல்வார்கள் ஆட்சியாளர்கள்.
இப்படியில்லாமல் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்தால் என்ன நியாயம்?
ஆன்-லைன் சூதாட்டத்
தடுப்புச் சட்டம் தேவை!
நம்முடைய நாட்டில் அண்மைக் காலத்தில் தற் கொலைகள் அடிக்கடி நடைபெறுகிறதே என்ன கார ணத்தினால், பல வகை காரணங்கள் இருக்கலாம்; ஆனால், குறிப்பாக அடிக்கடி நம் மனதை உறுத்துகிற செய்தி; எளிமையாகத் தடுக்கவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்கள், மற்றவர்கள் நீண்ட காலமாக கடந்த கால ஆட்சிக்காலத்திலேய வற்புறுத்திய செய்தி – ஆன்-லைன் சூதாட்டத் தடுப்புச் சட்டம் தேவை என்பதுதான்.
அந்த ஆன்-லைன் சூதாட்டம் என்பதில், இளைஞர்கள், பதவியில் இருப்பவர்கள், பணியாற்றக் கூடியவர்கள் பணத்தாசையின் காரணமாக, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கலாம் என்கிற தவறான எண்ணத்தின் காரணமாக, ஏராளமான பணத்தை இழக்கிறார்கள்.
இந்த சூதுவினுடைய தத்துவமே,
”இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்”
என்றார் வள்ளுவர்.
கடைசியில், அப்பாவி மக்கள் ஏமாந்து போகிறார்கள்!
மற்றவற்றில் தோல்வி அடைந்தால், அந்தத் தோல்வி யிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்; ஆனால், சூதாட் டத்தில் தோல்வியடைந்தால், அந்தத் தோல்வியிலிருந்து மீள முடியுமா? இதை வைத்து மேலே வரலாமா? அதை வைத்து மேலே வரலாமா? என்றுதான் தோன்றுமாம். கடைசியில், அப்பாவி மக்கள் ஏமாந்து போகிறார்கள். பிறகு தற்கொலை செய்துகொள்கிறார்கள். பேராசிரி யர்கள், காவல்துறை நண்பர்கள், மாணவர்கள் போன் றோர். ஒரு சாரார் மட்டும் என்பது இல்லை.
இப்படி உயிரைப் பறிக்கும் ஆன்-லைன் சூதாட் டத்தைத் தடை செய்யவேண்டும் என்று எங்களைப் போன்றவர்கள், சமூக ஆர்வலர்கள் விடாமல் முழங்கிக் கொண்டிருந்தோம்; கோரிக்கைகளை வைத்தோம் – எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆட்சி இருக்கும்பொழுதே அதனைச் செய்தோம்.
உடனே அவசர அவசரமாக ஒரு சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார்கள். ஆனால், அந்த மசோதா ஆழக் கால் பதிக்கக் கூடிய அளவிற்கு இல்லை.
அதன் காரணமாக உச்சநீதிமன்றத்தில், அந்த மசோதாவில் ஓட்டை இருக்கிறது என்று திருப்பி அனுப்பப்பட்டது.
அதன் பிறகு, ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடரக்கூடிய வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வந்தவுடன், ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்து, மக்கள் கருத்துக் கேட்டு, பல அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு, எங்கெங்கே ஓட்டைகள் இருக்கிறதோ, அதனையெல்லாம் சரி செய்து, ஆழமாக அதுபற்றி விசாரித்து, சட்டமன்றத்தில் முதலில் அவசரச் சட்டத்தை நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதலும் பெறப்பட்டது. அந்த அவசரச் சட்டம் காலாவதியா வதற்குள், நிரந்தரச் சட்டம் கொண்டுவரவேண்டும் என் பதற்காக ஒரு மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி எத்தனை மாதங்களாகி இருக்கின்றன?
மனித உயிர்கள் என்ன
அவ்வளவு மலிவான பொருளா?
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் என்று சொன்னால், பல மாதங்களாக அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் என்ன கொடுமை என்று சொன்னால், தற்கொலைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. மனித உயிர்கள் என்ன அவ்வளவு மலிவான பொருளா?
சூதாட்டக் கம்பெனிக்காரர்களை
சந்திக்கிறாராம் ஆளுநர்!
அதுமட்டுமல்ல, இதில் இன்னொரு கொடுமை – வேதனையான விசித்திரமான செய்தி என்ன வென்றால், சூதாட்டக் கம்பெனிக்காரர்களை சந்திக்கிறாராம் ஆளுநர்.
இதுவரையில் நீதிபதிகளோ, மற்றவர்களோ கட்சிக்காரர்களை அழைத்து தனிப்பட்ட முறை யில் சந்தித்து கருத்துகளைக் கேட்பார்களா?
இது நியாயம்தானா?
இது அதிகார துஷ்பிரயோகம் அல்லவா!
இதுபோன்ற கேள்விகளைக் கேட்க, எங் களுக்கு உரிமையில்லையா? தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
இப்படிப்பட்ட தடங்கல்கள், இடையூறுகள் எல்லாம் இருந்தாலும், இவற்றையெல்லாம் தாண்டிதான், இந்தியா விலேயே நெம்பர் ஒன் முதலமைச்சர் என்று பெயர் பெற்ற எங்களுடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதலமைச்சர் இருக்கிறார்.
தி.மு.க. ஆட்சிப் பொறுபேற்கும்பொழுது, அரசு கஜானா காலி. எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு நிதி தேவை. இவ்வளவையும் தாண்டித்தாண்டி ஆட் சியை நடத்துகின்றார்கள் என்று சொன்னால் நண்பர் களே, மிகப்பெரிய அளவில், இந்த ஆட்சி ஒரு சாதனையைச் செய்திருக்கிறது.
அந்த சாதனை என்பது சாதாரணமான சாதனையல்ல. மகளிரை எடுத்துக்கொள்ளுங்கள்; உழைக்கின்ற மகளிர்; கிராமப்புறங்களில் விவசாயக் கூலி வேலைகளுக்குச் செல்பவர்கள்; அன்றாடம் கூலி வேலை செய்கிறவர்கள் – அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய கூலியில், ஒரு பெரும்பகுதி பேருந்து கட்டணத்திற்காகவே செல்லும் நிலை இருந்த நேரத்தில், சங்கடம் ஏற்படுத்திய நேரத்தில், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர். அதேநேரத்தில், நடந்தும் செல்ல முடியாத சூழ்நிலை – ஏனென்றால், நீண்ட தூரம் என்பதால் – எங்கள் ஏழைத் தாய்மார்கள், எங்கள் ஏழைப் பெண்கள், கிராமத்துப் பெண்கள், நகரத்துப் பெண்கள் யாராக இருந்தாலும்.
மகளிருக்குப் பேருந்தில்
இலவச பயணம்!
அவர்கள் வாங்கக்கூடிய தினக் கூலியை, மிகப்பெரிய பகுதியை பேருந்து கட்டணமாக செலவழிக்கிறார்கள்; அந்த செலவை இனிமேல் மகளிர் செய்யவேண்டாம் என்பதற்காக – ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்துப் போட்டு, மகளிருக்குப் பேருந்தில் இலவச பயணம் என்ற உத்தரவை நடைமுறைக்குக் கொண்டு வந்தது நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி – இதை மற்றவர்கள் பின்பற்றவேண்டும் இந்தி யாவில் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு அதனால் மகளிருக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, பெண் கல்வி – ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படிப்பதற்குச் சமம் என்று சொன்னார் தந்தை பெரியார்.
கல்லூரி படிப்பிற்குச் செல்லும்
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்
அப்படிப்பட்ட பெண்கள் படிப்பதற்கு நல்ல அள விற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி, மிக அருமையான ஒரு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பிற்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று சொல்லி, ஓராண்டிற்கு 12 ஆயிரம் ரூபாய்.
இவ்வளவுக்கும் நிதி நெருக்கடியெல்லாம் இருந் தாலும்கூட, மகளிர் படிக்கவேண்டும்; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்; ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்று இட ஒதுக்கீடு, சமூகநீதி, பாலியல் நீதி இப்படி அத்தனையையும் கவனத்தில் வைத்து கடமையாற்றுகிறார் நமது முதலமைச்சர்.
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குக்
காலைச் சிற்றுண்டி
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள், காலைச் சிற் றுண்டியை சாப்பிடுவதில்லை; பசியோடு பள்ளிக் கூடத்திற்கு ஓடிவருகிறார்கள். பிறகு மயக்கம் போட்டு விழுகிறார்கள்; வகுப்பு ஆசிரியர்கள்கூட சொல்கிறார்கள், நாங்கள் சொல்லிக் கொடுப்பதை சரியாகக் கவனிக்க முடியவில்லை. காரணம், பசியோடு அவர்கள் இருப்ப தால் என்று.
அந்தப் பிள்ளைகளுக்குக் காலைச் சிற்றுண்டி அளித்து, இந்தியாவிலேயே வழிகாட்டிய மாநிலமாக ஒரே ஒரு மாநிலமாகத் தமிழ்நாடுதான் இருக்கிறது என்று சொன்னால், அதுவும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் என்று சொன்னால், இது சாதாரணமா?
ஒரு பக்கத்தில் ஆயிரம் தடங்கல்கள்;
இன்னொரு பக்கத்தில் போட்டி அரசாங்கம்!
ஒரு பக்கத்திலே முட்டுக்கட்டைகள்; ஒரு பக்கத்தில் ஆயிரம் தடங்கல்கள்; இன்னொரு பக்கத்தில் போட்டி அரசாங்கம்; இன்னொரு பக்கத்திலே நிதிப் பற்றாக்குறை.
இவ்வளவு சங்கடங்களுக்கு இடையிலும், எப்படி கூட்டுக்குள்ளே சிலம்பம் ஆடுவார்களோ – அல்லது ஜல்லிக்கட்டில் அகப்படாத மாடுகளை, வீரர்கள் திமில்களைப் எப்படிப் பிடிக்கிறார்களோ அதுபோல, எங்களுடைய முதலமைச்சர் அவர்கள், அரசியல் ஜல்லிக்கட்டில், அடக்க முடியாத காளைகளையெல்லாம், அவற்றின் திமிலைப் பிடித்து, அடக்கக்கூடிய ஆற்றல் பெற்றவராக இன்றைக்கு இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது.
அவரது கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் மிகத்தெளிவாக மக்கள் ஏற்கக் கூடியவையாகும்.
இந்த ஆட்சிக்கு எத்தனையோ தடைக்கற்கள் இருந்தாலும், அதையும் தாண்டி,
தடைக்கற்கள் ஆயிரம் உண்டென்றாலும்,
அதைத் தாங்கும், தாண்டும் தடந்தோள்கள் எங்களிடம் உண்டு என்றார் புரட்சிக்கவிஞர்.
அப்படிப்பட்ட ஓர் ஆட்சியை மக்கள் ஏற்கக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அந்த சூழ்நிலைகள் வந்திருக் கின்றன.
மற்ற தேர்தல்களைப் போன்றதல்ல-
இந்த இடைத்தேர்தல்!
எனவேதான், இங்கே நடைபெறக்கூடிய இடைத்தேர்தல் என்பது நண்பர்களே, இது மற்ற தேர்தல்களைப் போன்றதல்ல.
ஒரு நல்லாட்சி நடக்கிறது என்பது மட்டுமல்ல, நல்லவர் இந்தத் தொகுதிக்கு வேட்பாளராக நிறுத் தப்பட்டு இருக்கிறார். வேட்பாளரைப்பற்றி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்குத் தெரியாத பெரியார் குடும்பமா?
தந்தை பெரியார் அவர்களுக்கு, சம்பத் அவர்கள் தேர்தலில் நின்ற நாளிலிருந்து ஒரு கவலை உண்டு.
நாடாளுமன்றத்தில் நன்றாக செயல்படுகிறார் சம்பத்
சம்பத் நல்ல அளவிற்கு அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நன்றாக செயல் படுகிறார் என்றெல்லாம் அவருடைய நண்பர்களும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.டி.கே. தங்கமணி அவர்களும் சொல்வார்கள்.
சம்பத் அவர்களுடைய பெருமைகளைப்பற்றி தந்தை பெரியாரிடம் வந்து சொல்வார்கள்.
அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் சொல்வார், அப்பொழுது நாங்கள் எல்லாம் அருகில் இருந்தவர்கள் என்ற முறையில் சொல்கிறோம்; ‘‘என்ன நல்லது செய்கிறார் சம்பத்; ஒவ்வொரு தேர்தலின்போதும் என்னிடம் வந்து கடன் வாங்குகிறானே? ஒரு சொத்தை விற்கிறானே? அதை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது. அவனவன் பொது வாழ்க்கையில் சொத்து சேர்ப்பதைத்தான் குறிக்கோளாக வைத்திருக்கிறான்; அதற்கு மாறாக, இவன் சொத்துகளை இழக்கிறானே’’ என்றார்.
நடந்த உண்மையைச் சொல்கிறேன் – சம்பத் அவர்கள் ஒரு சொத்தை விற்கப் போகிறார் என்று சொன்னவுடன், தந்தை பெரியார் சொன்னார், ‘‘ஏம்பா, இந்த ஊரில் கஷ்டப்பட்டு, இவ்வளவு பெரிய கட்டடம் கட்டினேன்; அதில் உங்கள் பங்கும் இருக்கிறது. நீங்கள் அதை விற்கப் போவதாகக் கேள்விப்பட்டேன் நான்; அதை நீ இன்னொருவரிடம் விற்கக்கூடாது; அதை என்னிடமே விற்றுவிடு’’ என்றார். பிறகு அதை வாங்கி பெரியார் அறக்கட்டளையில் சேர்த்தார்.
‘‘நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை நான் செய்வேன்’’ என்றார்
திருமகன் ஈவெரா!
அதேபோன்றவர்தான் ஈ.வெ.கி.ச. இளங் கோவன் அவர்கள். முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இங்கே வந்து திருமகன் ஈவெரா அவர்களுக்காக வாக்குக் கேட்டேன்; முத்துசாமி அவர்கள் முன்பே உரையாற்றிவிட்டு சென்று விட்டார். அப்பொழுது உரையாற்றிய திருமகன் ஈவெரா அவர்கள், ‘‘ஆசிரியர் அவர்கள் பேச வேண்டி இருப்பதால், வேட்பாளராகிய நான் சுருக்கமாக சொல்லிக் கொள்ளும் வேண்டுகோள் என்னவென்றால், நான் அதை செய்வேன், இதை செய்வேன் என்று பெரிதாகச் சொல்லவில்லை; நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, உங்களுக்குப் பணியாளனாக அதை நான் செய்வேன்’’ என்று அவர் சொல்லியது, இன்னமும் என்னுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அதை சொல்லிவிட்டு இன்னொரு உறுதி மொழியைக் கொடுத்தார், ‘‘என்னை நீங்கள் தேர்ந் தெடுத்தால், என்னுடைய சம்பளத்திற்குள்ளேயே நான் வாழ்வேன்’’ என்றார்.
இதைவிட பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்திற்கு ஒரு நியதி, ஓர் அரசியல்வாதிக்கு வேறு என்ன இருக்க முடியும்? அதை அப்படியே கடைப்பிடிக்கக் கூடிய வர்தான் இப்பொழுது வேட்பாளராக நிற்கக்கூடிய நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள். நீங்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள் கிறேன்.
மற்றவர்களைப்பற்றி நான் பேசவேண்டிய அவசிய மில்லை. ஏனென்றால், வேறு யாராவது சரியானவர்கள் இருந்தால்தானே பேசுவதற்கு.
அதுவும் எங்களால்
கண்காணிக்கப்படவேண்டிய
ஓர் அமைப்பு!
அடமானம் வைத்த பொருளை அவர்கள் மீட்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. அவர்களை சங்கடப்படுத்தவேண்டும் என்பது எங்களுடைய நோக்கமல்ல. அவர்கள் எங்களுக்கொன்றும் விரோதிகள் அல்ல. அட மானம் வைத்த பொருளை அவர்கள் மீட்க வேண்டும். ஏனென்றால், வட்டி அதிகமானால், அந்தப் பொருளை விட்டுவிட்டே போய்விடு வார்கள். ஆகவே, அந்த நிலை வந்துவிடக் கூடாது. ஏனென்றால், அதுவும் எங்களால் கண் காணிக்கப்படவேண்டிய ஓர் அமைப்பு அல்லவா!
ஆகவே, நண்பர்களே! நீங்கள் தெளிவாக, வருகிற 27 ஆம் தேதியன்று வாக்குச் சாவடிக்குள்ளே போங்கள் – உள்ளே போனதும் உங்களுக்கு நினைவிற்கு வரவேண்டியது கை சின்னம் மட்டுமல்ல – தொண் டறத்தின் உருவமாக இருக்கக்கூடிய திருமகன் ஈவெரா அவர்களுடைய உருவம் உங்களுடைய நினைவிற்கு வரவேண்டும்; அவருடைய தொண்டறம் உங்களுடைய நினைவிற்கு வரவேண்டும்.
இன்னொரு கட்சி நிற்கவேண்டிய தொகுதியை கேட்டு வாங்கி, அ.தி.மு.க.வினர் இங்கே தேர்தலில் நிற்கிறார்கள். தளபதி ஸ்டாலின் நினைத்திருந்தால், அதுபோன்று செய்ய முடியாதா? காங்கிரஸ் தரப்பிலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொகுதியை விட்டுக் கொடுத்திருப்பார்களே! ஏனென்றால், காங்கிரசுக்கும் – தி.மு.க.விற்கும் சுமூகமான உறவு இருக்கிறது. ஆனால், அதை நம்முடைய தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விரும்பவில்லையே!
அது உங்களுடைய இடம்தான்; காங்கிரஸ் கட்சிதான் நிற்கவேண்டும் என்றார் தளபதி மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் சந்தித்து கேட்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘இந்த முடிவை நாங்கள் ஏற்கெனவே எடுத்துவிட்டோம்; அது உங்களுடைய இடம்தான்; காங்கிரஸ் கட்சிதான் நிற்கவேண்டும்’’ என்று சொன்னார்.
இது கூட்டணி – இன்னொன்று கூத்தணி!
இதைவிட ஒரு நாணயமுள்ள அரசியல்வாதி இருக்க முடியுமா? இதைவிட ஒற்றுமையுள்ள ஒரு கூட்டணி – கட்டுப்பாடுள்ள, கட்டுக்கோப்போடு இயங்கக்கூடிய ஒரு கூட்டணி வேறு இருக்க முடியுமா?
எனவே, இது கூட்டணி – இன்னொன்று கூத்தணி!
அந்தக் கூத்து எப்படியெல்லாம் நடந்துகொண்டிருக் கிறது என்று உங்களுக்குத் தெரியும். இதற்குமேல் எதுவும் சொல்லவேண்டிய அவசியமில்லை.
கை சின்னத்திற்குக் கைகொடுங்கள் –
அது உங்களுக்குக் கைகொடுக்கும்!
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – 27 ஆம் தேதி யன்று வாக்குச் சாவடிக்குள் சென்றவுடன், கை சின்னம்! கை சின்னம்!! கை சின்னம்!!! அந்த சின்னத்தை மறந்துவிடாதீர்கள்!
கை சின்னத்திற்குக் கைகொடுங்கள் –
அது உங்களுக்குக் கைகொடுக்கும்!
நாட்டைக் காப்பாற்றும்!
கையில்லாமல் ஒன்றுமில்லை!
கை உங்களை வாழ வைக்கும்!
அதுதான் உங்களை உயர்த்தும் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, மறுபடியும் மற்றொரு நாளில் விரிவாக இங்கே வந்து உரை யாற்றுவேன்.
ஒத்துழைத்த இயற்கைக்கும், மழைக்கும் நன்றி!
உங்களுக்கும் நன்றி!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.