(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
படித்த வெளியுறவு அமைச்சருக்கு இது அழகா?
மின்சாரம்
தெற்கு பசிபிக் நாடான பிஜியில் 12ஆவது உலக ஹிந்தி மாநாடு நடக்கிறது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் பிஜி அரசுடன் இணைந்து நடத்து கிறது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.
அவர்தன் உரையில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. “ஒரு காலத்தில் மேற்கத்திய கலாச்சாரமே சிறந்தது என்று கூறப்பட்டது. அதனுடன் நம் கலாச்சாரம் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. அது தற்போது பழங் கதையாகிவிட்டது.
உலகமயமாக்கல் என்பது ஒரே மாதிரியாக இருப்பது அல்ல. ஒவ்வொரு மொழி, கலாச்சாரத்தையும் மதித்து அவற்றிற்குப் பெருமை சேர்த்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் அனைவரும் இணைந்து செயல்படுவதே உலகமயமாக்கலாகும்” என்று அருள்வாக்கை அமுதமாகப் பொழிந்திருக்கிறார்.
மேற்கத்திய கலாச்சாரம் பழங்கதை என்றால், பிஜியில் போய்ப் பேசி இருக்கிற இந்தியாவின் வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அணிந்திருக்கும் கோட்டும் ஷுட்டும் எந்த வகைக் கலாச்சாரம்?
ரூ.10 லட்சத்தில் ஆடை அணிந்திருப்பதாக பெரு மைப் பேசும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி அணிந்திருப்பதெல்லாம் எந்த நாட்டுக் கலாச்சாரம்?
அதுவும் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றி மாற்றி அலங்காரம் செய்து கொள்ளும் அந்த உடைகள் எல்லாம் இந்திய நாட்டின் கலாச்சாரம் தானா?
உண்ணும் உணவு, குடியிருக்கும் வீடு உள்பட, நிர்வாக அமைப்பு முறைகள் உள்பட பயன்படுத்தும் கருவிகள் எல்லாம் கடைந்தெடுத்த ‘பாரத புண்ணிய பூமி’யின் கலாச்சாரம் தானா?
வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் படித்த கல்வி எல்லாம் இந்தப் பழைய பஞ்சாங்க ஹிந்துத்துவக் கலாச்சாரத்தைத் தழுவியதுதானா?
‘தண்ணீரைப் பழித்தால் பாவம்’ என்கிற பாரம்பரிய ஹிந்துக் கலாச்சாரம்தானா?
கால்நடையாகச் சென்ற சங்கராச்சாரிகள் விமானத் தில் பறப்பது எந்த நாட்டுக் கலாச்சாரம்?
இந்தியாவில் ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று சொல்லுகிறார்களே – அது உதைக்கிறதே! வங்காளத் தில் ‘பிராமணோத்தமர்கள்’ மீன் சாப்பிடுவார்கள் (‘மச்ச பிராமின்’) அது மற்ற மாநிலங்களுக்குப் பொருந்துமா?
ஒரே ஹிந்து மதத்தினரைச் சேர்ந்த ஸ்மார்த்தர்க ளும் வைஷ்ணவர்களும் பின்பற்றுவது ஒரே கலாச் சாரம் தானா? வைஷ்ணவத்திலும் வடகலை, தென் கலை என்று கூறி தெருக்களிலும் கட்டிப் புரண்டு சண்டை போடுகிறார்களே, அது என்ன கலாச்சாரம்?
ஒவ்வொரு மொழியையும், அதன் கலாச்சாரத்தை யும் மதிக்க வேண்டும் என்று வெளிநாட்டு மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசுகிறார் – அதனை இந்திய மண்ணுக்குள் பேசுவாரா?
ஒரே மொழி ஹிந்தி என்பது எந்த அடிப்படையில்? இந்தியாவின் மொழிப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் தான் என்று ஆர்.எஸ்.எஸ்.களின் குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் கூறுகிறாரே – அது எப்படி?
ஹிந்து, ஹிந்துஸ்தானம் என்பது எல்லாம் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வருணாசிரம முறைதானே!
தமிழ் மொழி பேசும் தமிழர்களின் கலாச்சாரம் என்பது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ப தாயிற்றே!
தீண்டாமை ஷேமகரமானது என்று சொல்லும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறுவது தானே ஹிந்துக் கலாச்சாரம்! அப்படி என்றால் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் ஹிந்துக் கலாச்சாரத்தை இந்த 2023லும் கடைப்பிடிக்க விரும்புகிறார்களா? சட்டப்படி பார்க்கப் போனால், இப்படிச் சொல்பவர்கள் இருக்க வேண்டிய இடம் சங்கர மடமல்ல – ஜாமினில் வெளிவர முடியாத சிறைக் கூடம்தான்!
மிகுந்த படிப்பாளி இந்திய அரசின் வெளியுறவுத் துறையில் பணியாற்றியவர் – மோடி தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக ஆக்கப்பட்ட நிலையில், ‘எதோடு சேர்ந்த ஒன்று இப்படி நடக்கிறது’ என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
வேதம், சாஸ்திரம் படித்த எவரும்
சங்கராச்சாரியார் ஆக முடியுமா?
“சங்கர மடத்தில் யார் பீடாதிபதியாக வர முடியம் தெரியுமா? வேதம், வேதாந்தம், உபநிஷத்துக்கள், புராணங்கள், சாஸ்திரம், தர்க்க சாஸ்திரங்கள், திருக்குறள்… இவ்வனைத்தையும் படித்திருக்க வேண் டும். இவ்வளவையும் படித்து முடிக்க 15, 20 ஆண்டுகள் ஆகும். அப்புறம் பிரம்மச்சரியத்தை அனுசரிக்க வேண்டும், அப்படிப்பட்ட பலரில் ஒருவரைத் தொடர்ந்து கவனித்து வந்து, இவர்கள் தான் இந்த மடத்தையும், இந்த சித்தாந்தத்தையும் வழி நடத்தக் கூடியவர் என்று முடிவு செய்து, அவரிடம் மடத்தை ஒப்படைப்பார்கள்.”
– இவ்வாறு பேசியவர் ‘சோ’ ராமசாமியின் சீடர் – கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை சாட்சாத் குருமூர்த்தி அய்யர்வாள் தான்.
எங்கே பேசினார்? ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் தான் பேசினார் (துக்ளக் 20.2.2023 பக். 20)
குருமூர்த்தி அய்யர்வாள் சங்கராச்சாரியாராவதற் கான தகுதிகளை எல்லாம் வரிசையாக அடுக்கினார். ஆனால் ஒன்றை மட்டும் கவனமாகத் தவிர்த்திருப்ப தைக் கவனிக்க வேண்டும்.
“ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா” என்பார்களே அதுதான் இது.
கு.மூர்த்தி அய்யர்வாள் அடுக்கிக் கூறும் அத்த னையையும் கரைத்துக் குடித்துப் படித்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த பார்ப்பனரல்லாதவர் சங்கராச்சாரி ஆக முடியுமா?
சங்கராச்சாரியாவது ஒருபுறம் இருக்கட்டும், அந்த மடத்துக்குள் ஒரே ஒரு பார்ப்பனரல்லாத தோழர் கடைநிலை ஊழியராக முடியுமா?
அதுதான் பார்த்தோமே! சுப்பிரமணிய சாமி சங்கர மடத்துக்குச் சென்றால் சங்கராச்சாரியார் பக்கத்தில் சரி சமமாக ஆசனம் போட்டு உட்கார முடியும்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பேனாலும் சரி, ஒன்றிய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் சென்றாலும் சரி, சங்கரமடத்தில் சங்கராச்சாரியார் முன் தரையில் தானே உட்கார முடியும் – அதைத்தான் பார்த்தோமே கண்கூடாக!
திருக்குறளைக் கற்றிருக்க வேண்டும் என்கிறாரே குருமூர்த்தி அய்யர், ஆண்டாள் பாடிய ‘தீக்குறளைச் சென்றோதோம்’ என்பதற்கு – ‘தீய திருக்குறளை ஓத மாட்டோம்’ என்றவர்தானே இவர்களின் ‘மகா மகா மகான்’ சந்திரசேகரேந்திர சரஸ்வதி (குறள் என்பதற்கு எத்தனை எத்தனைப் பொருள் என்பதை அறியாத பரிதாபத்துக்கு உரியவர்தான் பரமஹம்சரா?) ஜெயேந் திரரை மறந்துவிட்டு பிரம்மச்சரிய விரதம் பற்றிப் பேசலாமா குருமூர்த்தி?
தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அனைவரும் எழுந்து நிற்க, குத்துக்கல்லாக உட்கார்ந்திருந்த பண்பாடு சிறி தும் அற்ற இன்றைய காஞ்சி சங்கராச்சாரியார் விஜ யேந்திர சரஸ்வதி – சில நாட்களுக்கு முன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் சென்றபோது, சால் வையைத் தூக்கி எறிந்ததும், பார்ப்பனர் ஒருவர் வந்த போது, அருகில் அழைத்து சால்வை அளித்ததையும் தொலைக்காட்சியில் பார்க்கவில்லையா?
பேச்சில் மட்டும் வக்கணை! நடப்பில் மட்டும் விளக்கெண்ணெய்யோ!
“பிறப்பில் குற்றமிருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது – அது போன்றதே பார்ப்பனத் தன்மை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இண்டு பார்ப்பன நீதிபதிகள் முன் சொன்னாரே, தந்தை பெரியார் – அதனையும் நாட்டு நடப்பையும் எடை போட்டுப் பாருங்கள்.
உச்சியைக் குலுக்கி உண்மை பளிச்சிடும்!